பூக் கொய் படலம் - 1001
ஒரு பெண் விறலியிடம் அணிகளைக்
கழற்றிக் கொடுத்தல்
1001.
‘மறலிக்கு ஊண் நாடும் கதிர் வேலான்.
இடையே வந்து
உற. இக் கோலம் பெற்றிலென் என்றால்.
உடன் வாழ்வு இப்
பிறவிக்கு ஒல்லேன்; என் செய்வது. இப்
பேர் அணி?’ என்று. ஓர்
விறலிக்கு ஈவாள் ஒத்து. இழை எல்லாம்
விடுவாளும்;*
‘மறலிக்கு ஊண் நாடும் - கூற்றுவனுக்கு உணவு தேடித் தருகிற;
கதிர் வேலான் - ஒளியுமிழும் வேல் ஏந்திய (என்) கணவன்; இடையே
வந்து உற - என்னிடம் சேர்ந்து பொருந்துதற்கு; இக்கோலம் -
இவ்வலங்காரத்தை; பெற்றிலேன் - (நான்) பெறவில்லை; என்றால் -
என்னக் கூடுமாயின்; இப்பிறவிக்கு உடன் வாழ்வு ஒல்லேன் -
இப்பிறவியில் இவ்வுடலோடு வாழ்வதற்கு (இனி நான்) உடன்படேன்;
இப்பேர் அணி என் செய்வது? - இப் பெரிய அலங்காரம் என்ன
பயனைத் தருவதாம்?; என்னா - என்று; இழை எல்லாம் - (தான்
அணிந்திருந்த) ஆபரணங்களையெல்லாம்; விறலிக்கு ஈவாள் ஒத்து -
விறலிக்கு ஈந்து விடுவாள் போன்று; விடுவாளும் - கழற்றித்
தருபவளும்.
அணிகளால் தன்னைப் புனைந்து கொண்டு. கணவன் வருகைக்குக்
காத்திருந்தாள் ஒருத்தி. நெடும்பொழுதாகியும் செயல் ஆற்றச் சென்ற
கணவன் வாராமை. அவள் நெஞ்சை வருத்தியது. இந்த அலங்காரக்
கோலத்தோடு அவனைக் கூடி மகிழப் பெறாத இவ்வணிகளும் உடலும்
எதற்கு? என்று வெறுத்தவள் அணிகலன்களையெல்லாம் வேறு
ஒருத்திக்குத் தந்துவிட்டாள். (தீயில் வீழ்ந்து) “இறக்கத் துணிந்தவர்கள்
தமது அணிகலன்களைத் தமது விருப்பத்திற்கு இடம் ஆயினார்
கையிற் கொடுப்பது மரபாதலால். விறலி கையில் கொடுத்து
விடுவாளாயினள் “இழையெல்லாம் விடுவாளும்” என்றாலும் மங்கல
அணியினைத் தவிர்த்து மற்றையவையெல்லாம் கொடுத்தாள் என்பது
பொருளாகக் கொள்க. ஏனெனில். “ஈகையரிய இழையணி” (புறம்:
127:5) அது வாகலின். “மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்” (சிலம்பு:
4:50) என்பார் இளங்கோவடிகளும். “மற்றை நல் அணிகள் காண் உன்
மங்கலங்காத்த” (கம். 5262) என்பார் இவரும். காதலன் காதல்வகை
புனைந்து அவன் கண்ணுக்கு இனியராய் இருக்க விரும்பிய மகளிரின்
பண்பு இங்குச் சுட்டியவாறு. “விறலிக்கு ஈவாள் ஒத்து” என்பதனால்
பழங்காலத்தில் ஆடிப்பாடும் விறலியருக்கு ஆபரணங்களை ஈயும்
வழக்கம் புலனாம். 27
