புறஞ்சேரி இறுத்த காதை

bookmark

பகல் நேர வெய்யிலோ கடுமையாயிருந்தது. அதனால் பகலிற் செல்லாது, இரவில் நிலவு வெளிச்சத்திலேயே அவர்கள் வழிநடந்தனர். இடையே, ஓரிடத்திலே, கௌசிகன் மாதவியின் ஓலையுடன் வருகின்றான். தன் பெற்றோர் அருமணி இழந்த நாகம் போலும் இன்னுயிர் இழந்த யாக்கை போன்றும் துயருற்ற சம்பவத்தையும், உற்றோரும் துயர்க் கடல் வீழ்ந்ததையும், மாதவியின் துயரத்தையும் கௌசிகன் கொண்டுவந்த, மாதவியின் கடிதத்தின் மூலம் அறிந்தான். மாதவியும் குற்றமற்றவளே என்பதை உணர்ந்து, அக்கடிதத்தையே தன் பெற்றோரிடம் கொண்டுபோய் கொடுக்கும்படியாக கோவலன், கௌசிகனை வேண்டினான். கௌசிகனை மீண்டும் புகாருக்கு அனுப்பிவிட்டுக் கோவலன், அவ்வழியிடையே வந்து தங்கிய பாணருடன் கூடி யாழிசைக்கின்றான். அவர்பால் மதுரையின் தூரத்தினைக் கேட்டறிந்து, வைகையாற்றை மரத்தெப்பத்தாற் கடந்து செல்லும் போது வைகையாறு கண்ணகிக்கு ஏற்படப்போகும் துன்பத்தைத் தான் முன்னரே அறிந்தவளைப்போலப், புண்ணிய நறுமலர் ஆடைகளால் தன் மேனி முழுவதும் போர்த்துத், தன்கண் நிறைந்த மிகுந்த கண்ணீர் வெள்ளத்தையும் உள்ளடக்கிக்கொண்டு, அவள் அமைதியாகவும் விளங்கினாள். பின்னர் இனிய மலர்செறிந்த நறும்பொழிலின் தென்கரையினைச்சென்று அவர்கள் சேர்ந்தனர். பகைவரைப் போரிலே வென்று வெற்றிக் கொடியானது, 'நீவிர், இவ்வூருக்குள்ளே வாராதீர்' என்பது போல, மறித்துக் கைகாட்டியபடியே பறந்து கொண்டிருந்தது. அறம்புரியும் மாந்தர் அன்றிப் பிறர் யாரும் சென்று தங்காத, புறஞ்சிறை மூதூரினை நோக்கி அவர்கள் மூவரும் விரும்பிச் சென்றனர்.