புராணங்களின் தோற்றமும் அதன் வரலாறும்
புராணங்களின் தோற்றமும் அதன் வரலாறும் மைத்ரேய முனிவருக்கு புராணங்கள் தோன்றிய விதத்தை பற்றியும், அதன் வரலாற்றைப் பற்றியும் பலவிதமான கேள்விகளும், ஐயங்களும் இருந்து வந்தன. குருநாதரிடம் தனது மனதில் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்தி அதற்கான விடைகளையும் தேடத் தொடங்கினார். குருநாதர்... மைத்ரேய முனிவரின் வினாக்களுக்கு விடை அளிக்க தொடங்கினார். முனிவரே யாமறிந்தவற்றில் இருந்தும், யாமறிந்த கருத்துக்களில் இருந்தும், புராணங்களின் தோற்றமும் அதன் வரலாறுகள் பற்றியும் உமக்கு புரிகின்ற விதத்தில் எடுத்துரைக்கிறேன் கேட்பாயாக என்று கூறி புராணங்களின் தோற்றத்தைப் பற்றி எடுத்துரைக்க துவங்கினார். புராணம் என்பது சாஸ்திரங்கள் அனைத்திற்கும் முதன்மையாக இருக்கக்கூடியதாகும். இந்தப் புராணமானது கிருதாயுகத்தில் பிரம்மாவினால் நூறுகோடி கிரந்த விஸ்தாரமாக இயற்றப்பட்டு பிரம்மம் என்ற பெயருடன் ஒன்றாக இருந்து வந்தது. அந்த புராணங்களை கற்று அறிந்து கொள்வதிலும் பலவிதமான தடைகளும், இன்னல்களும் இருந்து வந்தன. அதனால் அதற்கு பின்பு தோன்றிய ரிஷிகளும் அதாவது திரேதாயுகத்தில் பிரம்மன் இயற்றிய புராணத்தை 118 சமூகங்களோடு கூடிய நூற்றுப் பதினெட்டு சம்ஹிதைகளோடு கூடிய பதினெட்டுப் பிரிவுகளுடன் கோடிக்கிரந்த விஸ்தாரமாகச் செய்தனர். அதன் பின் தோன்றிய வேதவியாசர் அதாவது துவாபரயுகத்தின் இறுதியில் அப்புராணங்களின் சாரங்களை எடுத்து, நான்கு லட்சம் கிரந்த விஸ்தாரமுடையதாய், பாரதாதி ஆக்கியானங்களும் பிருதிவீ கீதை, பிதுரு கீதை முதலான காதைகளையும் வராக கல்ப்பாதி, கல்ப்ப நிர்ணயங்களும், சிருஷ்டி மனுவந்தராதிகளும், வமிச வமிசானு சரிதங்களும் விளங்கும்படியாக பதினெட்டுப் புராண சங்கிதைகளைச் செய்து, தமது மாணவரான சூதமுனிவருக்கு உபதேசித்தனர். அந்த சூதமுனிவருக்கு சூதர் என்ற ரோம ஹர்ஷணருக்கு சுமதி, அக்னி, வர்ச்சன், மித்திராயு, சாம்சபாயனன், அகிருதவிரணன், சாவர்ணி என்ற சீடர்கள் இருந்தார்கள். அவர்களில் அகிருத விரணரும் சாவர்ணியும், சாம்சபாயனரும், வியாச கிருதமான புராண சங்கிதையைப் பற்றி தாங்களும் சில சங்கிதைகளைச் செய்தனர். இவற்றுக்கு எல்லாம் மூலமானதாக ஒரு சங்கிதையை ரோமஹர்ஷணர் செய்தார். இந்த நான்கின் சாரத்தைக் கொண்டுதான் நான் இந்தப் புராணத்தை இயற்றினேன். புராணங்கள் அனைத்திலும் முதன்மையாக இருந்தது பிரம்மபுராணம் ஆகும். அதை முதலாக கொண்டே பதினெட்டுப் புராணங்கள் உண்டென்று புராணங்களை அறிந்தவர்கள் சொல்கிறார்கள். அவையாவன, பிராம்மம், பாத்துமம், வைஷ்ணவம், சைவம், பாகவதம், நாரதீபம், மார்க்கண்டேயம், ஆக்கினேயம் பவுஷ்யத்து, பிரமகைவர்த்தம், லிங்கம், வராகம், ஸ்காந்தம், வாமனம், கவுர்மம், மாச்சியம், காருடம், பிரம்மாண்டம் முதலியன அவற்றின் முறையே இதுவாகும். இந்தப் புராணங்கள் யாவும் சிருஷ்டி, சங்காரம், வமிசங்கள் மனுவந்திரங்கள் வமிசங்களுடைய வரலாறுகள் ஆகியவற்றை பற்றி தெரிவிப்பவைகள் ஆகும். மைத்ரேய முனிவரே! இப்பொழுது யான் உனக்கு உரைத்துக்கொண்டு இருக்கக்கூடிய அனைத்தும் பத்ம புராணத்திற்கு பின்பு விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டு இருக்கக்கூடிய தகவல்கள் ஆகும். புராண வரிசையில் விஷ்ணு புராணம் மூன்றாவது ஆகும். ஆனாலும் எல்லாப் புராணங்களிலும் கூறப்பட்டு இருக்கக்கூடிய சிருஷ்டிக்கு காரணகர்த்தா ஸ்ரீ விஷ்ணுவே மூலம் என்று எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மனித உடலில் இருக்கக்கூடிய ஆன்ம கோடிகளில் தெரிந்து கொள்ள கூடிய அனைத்து அறங்களும் முன்பே நான் உமக்கு கூறிய நான்கு வேதங்களும், அவற்றின் உறுப்புகளான சீக்ஷை (உச்சரிப்பு முறைகளை விளக்குவது), வியாகரணம் (வியாகரணம் இலக்கண விதிகள் வகுத்தளிக்கிறது), காந்தம் (செய்யுள் இலக்கணம்), நிருத்தம் (சொல் இலக்கணம்), ஜோதிடம் (வானசாஸ்திரம்), கல்ப்பம் (செயல்முறை, கிரியைகளுக்கேற்ற தந்திரம், வேள்வி விளக்கம், வேள்விச்சாலை அமைக்க வேண்டிய க்ஷேத்திரக் கணிதம்) என்ற ஆறும், மீமாம்சையும் (வேதத்தை ஏற்கும் தத்துவப் பிரிவுகளில் ஒன்று), நியாய நூலும் (தரிசனங்கள்), இதிகாச புராணங்களும், அறநூல்களும் ஆகிய பதினான்காகும். இவற்றுக்கு வித்யா ஸ்தானங்கள் என்றும் பெயர் உண்டு. இவைகள் தவிர ஆயுர்வேதம் என்ற வைத்திய சாஸ்திரமும், தனுர்வேதம் (தனுர் வேதம் என்ற சொல், வாள், ஈட்டி, கதாயுதம், கத்தி போன்றவைகளுடன் போரிடும் கலைகளையும் குறிக்கின்றது) என்ற ஆயுத சாஸ்திரமும், அர்த்தி சாஸ்திரம் என்ற ராஜநீதி சாஸ்திரமும் உப வித்தைகள் என்று சொல்லப்படும். இவையனைத்தும் பதினெட்டு வித்தைகள் என்று பொதுப்பட அழைக்கப்படுகின்றன. இந்த வித்தைகளை வகுத்தவர்கள் பிரம்மரிஷிகள், தேவரிஷிகள், ராஜரிஷிகள் என்ற மூவகை முனிவர்களாவர். மைத்ரேய முனிவரே! நீங்கள் என்னிடம் வேண்டியபடி வேதத்தின் மூல சாகைகளையும், அச்சாகைகளின் பிரிவுகளையும், அவற்றின் கர்த்தாக்களையும், அவை பிரிவதற்கு உண்டான காரணத்தையும் உமக்கு புரிகின்ற விதத்தில் உரைத்துள்ளேன். சகல மனுவந்திரத்திலேயும் இப்படி சாகைகளின் பிரிப்பது சமமாக நிகழ்ந்துவரும்... ஆதியில் பிரம்மாவினால் அறியப்பட்ட வேதம் நித்தியமானது. ஆகையால் இந்த சாகைகள் அனைத்தும் அவற்றின் விகற்பங்கள் ஆகும். இவ்விதமாக வேதம் சம்பந்தமான யான் அறிந்த அனைத்து தகவல்களையும் சொல்லிவிட்டேன். இன்னும் உங்களிடத்தில் ஏதேனும் ஐயங்கள் இருந்தாலும் கூறுங்கள் அதையும் யாம் எடுத்து உரைக்கிறோம் என்று கூறினார் பராசர முனிவர். பராசர முனிவரை நோக்கிய மைத்ரேய முனிவர் அவரை மிகவும் பணிவுடன் வணங்கி குருநாதரே! அறிந்துகொள்ள விரும்பிய பல புராண வரலாறுகளையும் உங்களிடத்தில் இருந்து அறிந்து கொண்டேன். நான் எதையெல்லாம் தெரிந்துகொள்ள ஆவல் கொண்டேனோ அவற்றிற்கெல்லாம் நீங்களும் உரிய பதிலையும், அதற்கு உண்டான காரணத்தையும் அளித்தீர்கள். மிக்க மகிழ்ச்சி குருநாதரே. எம்மிடத்தில் இன்னமும் சில கேள்விகளும் இருக்கின்றது. அந்த கேள்விகளுக்கும் தாங்கள்தான் விடையளிக்க வேண்டும். அதாவது சப்தத்துவீபங்களும், பாதாளங்களும், மேலேழு உலகங்களும் அடங்கியிருக்கிற இந்தப் பிரம்மாண்டத்துக்குள்ளே ஸ்தூலங்களும், சூஷ்மங்களும், சூஷ்மத்தில் சூஷ்மங்களும், ஸ்தூலங்களில் ஸ்தூலங்களுமாக ஏராளமான உயிரினங்கள் இன்றளவும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. இவ்வளவு பெரிய பிரம்மாண்டத்துக்குள்ளே அங்குலத்தின் எட்டில் ஒரு பங்கு இடமானாலுங்கூட உயிரினங்கள் என்பது அவ்விடத்தில் இல்லாமலிருப்பதில்லை. இந்த உயிரினங்கள் அனைத்தும் கர்ம வசத்தினாலும் அதனால் ஏற்பட்ட பந்தத்தினாலும் இந்தப் பிரம்மாண்டத்துக்குள்ளே பிறப்பெடுக்கின்றன. பின்னர் இந்த பூவுலகில் பிறப்பெடுத்து அதற்கான கர்ம பலன்களை அனுபவித்தும், ஆயுளின் முடிவினை நெருங்கியதும் எமனுக்கு பாசக்கயிறுக்கு வயப்பட்டு, செய்த கர்ம வினைகளின் பொறுத்து அவனால் நியமிக்கப்பட்ட அந்தந்த வாதனைகளை (துன்பங்களை) அனுபவித்து, அந்த வாதனைக்காலம் முடிந்த பிறகு தேவாதி யோனிகளிலே பிறந்திருக்கிறார்கள். இவ்விதமாக உயிரினங்கள் ஜெனன மரணக்கிரமத்தில் சுழன்று கொண்டேயிருக்கின்றன என்பது சாஸ்திரங்களில் எடுத்து உரைக்கின்றது. இத்தகைய சம்சாரத்திலே சரீரிகள் எந்தக் காரியஞ்செய்தால் எமனுக்கு வயப்படாமல் தப்புவார்கள். அந்தக் காரியம் யாது? இதை அடியேனுக்குக் கூறியருள வேண்டுகிறேன் என்று வேண்டினார் மைத்ரேயர்.
