புனித அந்தோனியார் நவநாள்
இப்புண்ணிய ஷேத்திரத்தில்
மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங்கொண்டு
எழுந்தருளியிருக்கிற புனித அந்தோனியாரே !
பரிசுத்தத்தனம் விளங்கும் லீலியே !
விலைமதிக்கப்படாத மாணிக்கமே !
பரலோக பூலோக காவலரே !
கஸ்தி துன்பப்படுகிறவர்களுக்குப் பரம சஞ்சீவியானவரே !
பாவிகளின் தஞ்சமே !
உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம்.
உமது திருமுக மண்டலத்தை அண்ணாந்து பார்த்து
உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.
மகா சிரவணம் பொருந்திய புனித அந்தோனியாரே !
சூரத்தனமுள்ள மேய்ப்பரே !
பசாசுகளை மிரட்டி ஓட்டுபவரே !
திருச்சபையின் கருணையின் கண்ணாடியானவரே !
இவ்உலகில் எங்கள் ஆதரவும் நீரல்லவோ !
எங்கள் தஞ்சமும் நீரல்லவோ !
எங்கள் சந்தோஷமும், நம்பிக்கையும், பாக்கியமும் நீரல்லவோ !
நீர் எங்கள் ஞானத்தந்தை என்பதை எங்களுக்குக் காண்பியும்.
பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர்கள் பாராட்டுவார்களோ,
உம்மைத் தேடிவந்த நிர்பாக்கியர்பேரில் தயவாயிரும்.
அழுகிறவர்களை அரவணையும்;
அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாக வாரும்.
நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்?
நீர் ஆதரியாவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்?
நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்?
நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்?
தஞ்சமென்று ஓடிவந்த அடியோர்கள் பெயரில் தயவாயிரும்.
பரிசுத்த வெண்மையின் தூயதான தயாபரமே !
தயைக்கடலே !
தவிப்பவர்களுக்குத் தடாகமே !
தனித்தவருக்குத் தஞ்சமே !
உமது இன்பமான சன்னிதானம் தேடிவந்தோம்.
ஆறு, காடு, கடல்களைக் கடந்து ஓடிவந்தோம்.
துன்பம், பிணி, வருமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம்.
எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ?
எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ?
எங்கள் யாத்திரைகள் பயன் அற்றதாய்ப் போகுமோ?
எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இதயத்தை உருக்காது போகுமோ?
அப்படி ஆகுமோ ஐயா, எங்களின் அன்பான தகப்பனே!
எங்களை முழுவதும் ஒப்புக்கோடுக்கிறோம்.
எங்களைக் கையேற்றுக்கொண்டு ஆசீர்வதித்தருளும் -ஆமென்.
