பிள்ளைக் காதல்

பிள்ளைக் காதல்

bookmark

அன்ன போழ்தினி லுற்ற கனவினை
அந்த மிழ்ச் சொலில் எவ்வண்ணம் சொல்லுகேன்?
சொன்ன தீங்கன வங்குத் துயிலிடைத்
தோய்ந்த தன்று,நனவிடைத் தோய்ந்ததால்;
மென்ன டைக் கனி யின்சொற் கருவிழி:
மேனி யெங்கும் நறுமலர் வீசிய
கன்னி யென்றுறு தெய்வத மொன்றனைக்
கண்டு காதல் வெறியிற் கலந்தனன். 5

'ஒன்ப தாயபி ராயத்த ளென்விழிக்
கோது காதைச் சகுந்தலை யொத்தனள்'
என்ப தார்க்கும் வியப்பினை நல்குமால்
என்செய் கேன்? பழியென் மிசை யுண்டுகொல்?
அன்பெ நும்பெரு வெள்ளம் இழுக்குமேல்
அதனை யாவர் பிழைத்திட வல்லரே?
முன்பு மாமுனி வோர்தமை வென்றவில்
முன்ன ரேழைக் குழந்தையென் செய்வனே? 6

வயது முற்றிய பின்னுறு காதலே
மாசு டைத்தது தெய்விக மன்றுகாண்;
இயலு புன்மை யுடலினுக் கின்பெனும்
எண்ண முஞ்சிறி தேன்றதக் காதலாம்;
நயமி குந்தனி மாதை மாமணம்
நண்ணு பாலர் தமக்குரித் தாமன்றோ?
கயல்வி ழிச்சிறு மானினைக் காணநான்
காம னம்புகள் என்னுயிர் கண்டவே. 7

கனகன் மைந்தன் குமர குருபரன்
கனியும் ஞானசம் பந்தன் துருவன்மற்
றெனையர் பாலர் கடவுளர் மீதுதாம்
எண்ணில் பக்திகொண் டின்னுயிர் வாட்டினோர்
மனதி லேபிறந் தோன்மன முண்ணுவோன்
மதன தேவனுக் கென்னுயிர் நல்கினன்,
முனமு ரைத்தவர் வான்புகழ் பெற்றனர்;
மூட னேன்பெற்ற தோதுவன் பின்னரே. 8

நீரெ டுத்து வருவதற் கவள், மணி
நித்தி லப்புன் நகைசுடர் வீசிடப்
போரெ டுத்து வருமதன் முன்செலப்
போகும் வேளை யதற்குத் தினந்தொறும்
வேரெ டுத்துச் சுதந்திர நற்பயிர்
வீந்திடச் செய்தல் வேண்டிய மன்னர்தம்
சீரெ டுத்த புலையியற் சாரர்கள்
தேச பக்தர் வரவினைக் காத்தல்போல். 9

காத்தி ருந்தவள் போம்வழி முற்றிலும்
கண்கள் பின்னழ கார்ந்து களித்திட
யாத்த தேருரு ளைப்படு மேளைதான்
யாண்டு தேர்செலு மாங்கிழுப் புற்றெனக்
கோத்த சிந்தனையோ டேகி யதில்மகிழ்
கொண்டு நாட்கள் பலகழித் திட்டனன்;
பூத்த ஜோதி வதனம் திரும்புமேல்
புலன ழிந்தொரு புத்துயி ரெய்துவேன். 10

புலங்க ளோடு கரணமும் ஆவியும்
போந்து நின்ற விருப்புடன் மானிடன்
நலங்க ளேது விரும்புவன் அங்கவை
நண்ணு றப்பெறல் திண்ணம தாமென,
இலங்கு நூலுணர் ஞானியர் கூறுவர்;
யானும் மற்றது மெய்யெனத் தேர்ந்துளேன்;
விலங்கி யற்கை யிலையெனில் யாமெலாம்
விருன்பு மட்டினில் விண்ணுற லாகுமே. 11

சூழு மாய வுலகினிற் காணுறுந்
தோற்றம் யாவையும் மானத மாகூமால்;
ஆழு நெஞ்சகத் தாசையின் றுள்ளதேல்,
அதனு டைப்பொருள் நாளை விளைந்திடும்,
தாழு முள்ளத்தர்,சோர்வினர்,ஆடுபோல்
தாவித் தாவிப் பலபொருள் நாடுவோர்,
வீழு மோரிடை யூற்றினுக் கஞ்சுவோர்,
விரும்பும் யாவும் பெறாரிவர் தாமன்றே. 12

விதியை நோவர்,தம் நண்பரைத் தூற்றுவர்.
வெகுளி பொங்கிப் பகைவரை நிந்திப்பர்,
சதிகள் செய்வர்,பொய்ச் சாத்திரம் பேசுவர்,
சாத கங்கள் புரட்டுவர் பொய்மைசேர்
மதியி னிற்புலை நாத்திகங் கூறுவர்,
மாய்ந்தி டாத நிறைந்த விருப்பமே
கதிகள் யாவும் தருமென லோர்ந்திடார்.
கண்ணி லாதவர் போலத் திகைப்பர்காண். 13

கன்னி மீதுறு காதலின் ஏழையேன்
கவலை யுற்றனன் கோடியென் சொல்லுகேன்?
பன்னி யாயிரங் கூறினும்,பக்தியின்
பான்மை நன்கு பகர்ந்திட லாகுமோ?
முன்னி வான்கொம்பிற் றேனுக் குழன்றதோர்
முடவன் கால்கள் முழுமைகொண் டாலென
என்னி யன்றுமற் றங்ஙனம் வாய்ந்ததோ?
என்னி டத்தவள் இங்கிதம் பூண்டதே! 14

காதலென்பதும் ஓர்வயின் நிற்குமேல்,
கடலின் வந்த கடுவினை யொக்குமால்;
ஏத மின்றி யிருபுடைத் தாமெனில்,
இன்னமிர்தும் இணைசொல லாகுமோ?
ஓதொ ணாத பெருந்தவம் கூடினோர்
உம்பர் வாழ்வினை யெள்ளிடும் வாழ்வினோர்,
மாத ரார்மிசை தாமுறுங் காதலை
மற்ற வர்தரப் பெற்றிடும் மாந்தரே! 15

மொய்க்கும் மேகத்தின் வாடிய மாமதி,
மூடு வெம்பனிக் கீழுறு மென்மலர்,
கைக்கும் வேம்பு கலந்திடு செய்யபால்,
காட்சி யற்ற கவினுறு நீள்விழி,
பொய்க் கிளைத்து வருந்திய மெய்யரோ
பொன்ன னாரருள் பூண்டில ராமெனில்,
கைக்கி ளைப்பெயர் கொண்ட பெருந்துயர்க்
காத லஃது கருதவுந் தீயதால். 16

தேவர் மன்னன் மிடிமையைப் பாடல்போல்
தீய கைக்கிளை யானெவன் பாடுதல்?
ஆவல் கொண்ட அரும்பெறற் கன்னிதான்
அன்பெ னக்கங் களித்திட லாயினள்;
பாவம் தீமை,பழியெதுந் தேர்ந்திடோ ம்!
பண்டைத் தேவ யுகத்து மனிதர்போல்,
காவல் கட்டு விதிவழக் கென்றிடுங்
கயவர் செய்திக ளேதும்,அறிந்திலோம். 17

கான கத்தில் இரண்டு பறவைகள்
காத லுற்றது போலவும் ஆங்ஙனே
வான கத்தில் இயக்க ரியக்கியர்
மையல் கொண்டு மயங்குதல் போலவும்;
ஊன கத்த துவட்டுறும் அன்புதான்
ஒன்று மின்றி உயிர்களில் ஒன்றியே
தேன் கத்த மணிமொழி யாளொடு
தெய்வ நாட்கள் சிலகழித் தேனரோ! 18

ஆதி ரைத்திரு நாளொன்றிற் சங்கரன்
ஆலயத்தொரு மண்டபந் தன்னில்யாள்
சோதி மானொடு தன்னந் தனியனாய்ச்
சொற்க ளாடி யிருப்ப, ம்ற்றாங்கவள்
பாதி பேசி மறைந்துபின் தோன்றித்தன்
பங்க யக்கையில் மைகொணர்ந்தே,'ஒரு
சேதி! நெற்றியில் பொட்டுவைப் பேன்' என்றாள்
திலத மிட்டனள்;செய்கை யழிந்தனன். 19

என்னை யீன்றெனக் கைந்து பிராயத்தில்
ஏங்க விட்டுவிண் ணெய்திய தாய்தனை
முன்னை யீன்றவன் செந்தமிழ்ச் செய்யுளால்
மூன்று போழ்துஞ் சிவனடி யேத்துவோன்,
அன்ன வந்தவப் பூசனை தீர்ந்தபின்
அருச்ச னைப்படு தேமலர் கொண்டுயான்
பொன்னை யென்னுயிர் தன்னை யணுகலும்,
பூவை புன்னகை நன்மலர் பூப்பள் காண். 20