பிற மொழித் தாக்கத்தால் தமிழ் தாய் கடந்து சென்ற கரடு முரடான பாதை
இன்றைய காலத்தில் எவ்வாறு ஆங்கிலத்தில் பேசினால் மரியாதையோ அதே வகையில் முன்னொரு சமயம் சமஸ்கிருதம் பேசினால் அல்லது தமிழில் எண்ணற்ற சமஸ்கிருத வார்த்தைகளை பயன்படுத்தினால் மரியாதை என்கிற நிலை இருந்தது. இதன் காரணமாக நமது தமிழ்த் தாய் கொஞ்சம் கரடு முரடான பாதைகளை அக்காலத்தில் கடந்து வந்தால். அதுவே சமஸ்கிருதத்தின் மீது இன்றைய தமிழர்கள் வெறுப்பை உமிழக் காரணம் ஆனது. வாருங்கள் அந்த வரலாற்றையும் சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.
தமிழில் சமஸ்கிருதத்தின் பாதிப்பால் ஏற்பட்ட துயரம்:-
மொழியில் மாற்றம் இயல்பானது. அருகாமையில் உள்ள மொழிகளும், செல்வாக்கு உள்ள மொழிகளும், மாறும் தேவைகளும் ஒரு மொழியில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஒலியியல், எழுத்துமுறை, உருபனியல், தொடரியல், பொருளியல், சொற்கள், இலக்கணம், இலக்கியம், பேச்சு என ஒரு மொழியின் எல்லா பிரிவுகளிலும் மாற்றம் ஏற்படலாம். தமிழ் மொழி அதன் நீண்ட வரலாற்றில் பல மொழிகளுடன் தொடர்பு கொண்டு வெவ்வேறு முறைகளில் மாற்றம் கண்டிருக்கிறது. இக் கட்டுரை தமிழ் மொழியில் சமஸ்கிருதத்தின் பாதிப்பு பற்றியதாகும்.
இது பற்றிய வரலாற்றுத் தொகுப்பு:-
தமிழ் மீது சமஸ்கிருதத்தின் பாதிப்பு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வீச்சுடன் அமைந்துள்ளது.
கிபி 7 ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம்:-
சங்க காலத்திலேயே தமிழுக்கும் வட மொழிகளுக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது. தொல்காப்பியத்தில் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்ற சொல் வகைப்பாட்டில் வடசொல் வடமொழிகளில் இருந்து வந்த சொற்களைக் குறிக்கிறது. 7 ம் நூற்றாண்டு வரை தமிழில் சேர்ந்த வட மொழிச் சொற்கள் பெரும்பாலும் பிராகிருதம் அல்லது பாலி மூலம் கொண்டவை.
கிமு 250 ஆண்டளவில் தமிழ் மொழி எழுதப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆனால் சமஸ்கிருதம் கிபி 1-3 காலப் பகுதியிலேயே எழுதப்பட்டதற்கான ஆதாரங்களே உள்ளன. ஆகையால் தமிழுக்கு சமஸ்கிருதத்துக்கு இணையான, அல்லது அதை விட தொன்மையான எழுத்து வரலாறு உண்டு என்பது புலனாகிறது. அன்று வட இந்தியாவில் பேச்சு வழக்கில் இருந்த பிராக்கிருத அல்லது பாலி சொற்கள் பண்டைத் தமிழ் மொழியில் சேர்ந்தன எனலாம்.
கிபி 7:-
"கி.பி ஏழாம் நூற்றாண்டிலிருந்தோ அல்லது அதற்குச் சற்று முன்னர் இருந்தோ சமசுகிருதத்தின் உண்மையான பாதிப்புக் காலம் தொடங்கிறது." இக்காலத்தில் சமஸ்கிருதம் அரசியல், சமய, கல்வி, தத்துவச் செல்வாக்கைப் பெற்றிருந்தது.
கிபி 11-15
கிபி 11 நூற்றாண்டில் தமிழ் சமஸ்கிருத மொழிகள் கலப்பு மிகுந்து, மணிப்பிரவாளம் என்ற ஒரு இலக்கிய நடை செல்வாக்குப் பெற்றது. மணியும், பவளமும் சேர்த்து உருவாக்கப்பட்ட மாலை போல இரண்டு மொழிகள் கலந்து உருவான இலக்கிய நடை என்பது இதன் பொருளாகும். சமஸ்கிருதம் இறைவனுடைய மொழியாக பேற்றப்பட்ட, இக்காலத்தில் இந்நடையில் எழுதுவது கற்றோரிடம் கருத்துப் பரிமாற அவசியம் என்ற நிலையை உருவாக்கியது. இராமனூசர், ஆதி சங்கரர், வில்லிபுத்திரர் என பல தமிழ் சமயப் பெரியோர்கள் இந்நடையிலியே எழுதினர். இந் நடை 15-ம் நூற்றாண்டு வரை அதிக செல்வாக்கோடு வழக்கில் இருந்தது. இதனால் தமிழ் மொழி ஒரு பெரும் இலக்கிய பங்களிப்பை இழந்தது. அன்றைய சேர நாட்டில், மணிப்பிரவாளத்தின் தாக்கம் கடுமையாக இருந்ததால் சேர நாட்டுத் தமிழ், இன்று மலையாளம் என அழைக்கப்படும் புதிய மொழியாக மாறிவிட்டது.
கிபி 16 – 18
கிபி 16 ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வரத் தொடங்கினர். இவ்வாறு போர்த்துகீச நாட்டில் இருந்து வந்த என்றீக் என்றீக்கசு தமிழ் மொழியில் கிறித்துவப் பாடல்களை 1554 ம் ஆண்டு முதன் முதலாக அச்சடித்து வெளியிட்டார். கிறித்தவத்தின் வரவு சமஸ்கிருதம் பெற்றிருந்த இறை மொழி என்ற நிலையை அச்சுறுத்தியது.
கிபி 19
18 ம் நூற்றாண்டு தொடக்கம் தமிழின் மறுமலர்ச்சிக் காலம் எனலாம். இக்காலத்திலேயே தமிழர்களின் இலக்கிய மரபு தமிழர்களுக்கே புலப்படத் தொடங்கியது. உ. வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர் உட்பட பல தமிழறிஞர்கள் ஏட்டுத் தமிழ் இலக்கியங்களை தேடிப் புதுப்பித்து பாதுகாத்தனர். 1916 ஆம் ஆண்டில் தமிழில் மிகுதியாகக் காணப்பட்ட சமஸ்கிருத சொற்களையும் மணிப்பிரவாள நடையையும் தடுக்க தனித் தமிழ் இயக்கம் தொடங்கப்பட்டது. தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் ஆகியோர் முன்னின்று தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கினர். இக்கால கட்டத்தில் சில சமஸ்கிருத அறிவு ஜீவிகள் தமிழை பழிக்கவும், எள்ளி நகையாடவும் கூட செய்தனர். அதையும் நாம் இக்கட்டுரையில் பார்ப்போமாக.
சமஸ்கிருத மொழி அறிஞர்களின் தமிழ்ப் பழிப்பு:-
வடமொழிக்கும் தமிழ் மொழிக்கும் இடையேயான தொடர்பு சமனாகப் பெரும்பாலும் இருக்கவில்லை. சமஸ்கிருதம் தமிழ்மொழி மீது அதிகாரமும் செலுத்தியது. இதனைப் பன்மொழி ஆய்வாளர் மு. வரதராசன் பின்வருமாறு கூறுகிறார்.
" பழமையும் தனிமையும் உடைய வளர்ச்சி தமிழ் இலக்கியத்திற்கு இருப்பதைப் பிற்கால வடமொழி அறிஞர் மறந்துவிட்டனர்.... தமிழுக்கு எந்தப் பெருமையும் இல்லை, எல்லாப் பெருமையும் வடமொழிக்கே என்று வீண் வம்பு பேசத் தொடங்கினார்கள். இலக்கணக் கொத்து என்னும் நூலை எழுதிய சுவாமிநாத தேசிகர் என்னும் வடமொழி அறிஞர், இதை நிறுவுவதற்காக ஒரு போலி முயற்சியில் ஈடுபட்டார்...
எ ஒ என்ற இரண்டு உயிர்க்குறில் எழுத்துக்களும் ற ன ழ என்ற மூன்று மெய்யெழுத்துக்களும் ஆகிய ஐந்துமே வடமொழியில் இல்லாதவை; தமிழில் மட்டும் இருப்பவை. இந்த ஐந்து எழுத்துக்கள் மட்டும் இருப்பதால் தமிழ் ஒரு மொழி என்று பெருமை கொண்டாட முடியுமா என்றும் ஒரு சூத்திரம் இயற்றிக் கிண்டல் செய்தார்.... சொற்களைப் பொறுத்த அளவிலும் இவ்வாறே அவர்கள் நடந்து கொண்டார்கள்...
இந்த நாட்டில் மிகப் பழங்காலம் முதல் இருந்து வந்த தமிழிலிருந்து வடமொழி பல சொற்களைக் கடன் வாங்கியிருக்கக் கூடும் என்று எண்ணிப் பார்க்கவும் மறுத்துவிட்டு, தமிழில் உள்ள பல சொற்களும் வடமொழியிலிருந்து கடன் வாங்கப்பட்டவை என்ற கருத்தைப் பரப்பினர்....தமிழ் நூல்களையும் வடமொழி அறிஞர்கள் தக்க மதிப்பு தந்து போற்றவில்லை....
தமிழை நீச்சபாசை என்று ஒதுக்கி வடமொழி மட்டுமே தேவபாசை என்று உயர்த்திப் பேசினர்கள். எந்த நூலிலாவது உயர்ந்த கருத்து இருந்தால், அது வடமொழியில் இன்ன நூலிலிருந்து கடன் வாங்கப்பட்டது என்று சொல்லி அதன் பெருமையைக் குறைக்க முனைந்தார்கள். இதனால் அன்றைய கால கட்டத்தில் சமஸ்கிருதம் தமிழர்களால் வெறுக்கப்பட்டது.
எங்கும் சமஸ்கிருதமயமாக்கம்:-
சமஸ்கிருதமயமாக்கத்தால் தமிழ் மொழியில் சமஸ்கிருத சொற்கள் மிகுந்து முதன்மை பெற்றன. மொழி சிதைந்து மணிப்பிரவாளம் பிறந்தது. எழுத்து வடிவமும் சமஸ்கிருத மொழியை சிறப்பாக எடுத்தியம்பும் வண்ணம் மாற்றப்பட்டது. இதனால் தமிழ் பல இன்னல்களுக்கு அக்காலத்தில் ஆளானது.
