பிரஜைகளின் தோற்றம்

bookmark

பிரஜைகளின் தோற்றம் படைப்பின் தொடக்கத்தில் தோன்றிய சூக்கும பூதங்கள் (பஞ்ச சூக்கும பூதங்கள்) ஒன்றுடன் ஒன்று சேர்க்கை நடைபெறாமல் இருந்ததால் செயல்பாடுகள் நிறைந்த உலகிற்கு தகுந்த ஸ்தூல பொருள்கள் (பருப் பொருள்கள், சடப் பொருள்கள்) தோற்றுவிக்கும் திறமையற்று விளங்கியது. சக்திகள் நிறைந்த பல திசைகளில் நிறைந்து இருக்கக்கூடிய ஐம்பூதங்களும் சிவபெருமானின் அருளால் ஒன்றுடன் ஒன்று கலந்து ஐக்கியமாயின. இதன் விளைவாக அதாவது பூதங்களின் இணைவின் காரணமாக சூக்கும பூதங்கள், சட வடிவ பஞ்சபூதங்களாக வெளிப்படும் தன்மையை பெற்று செயலாற்றும் தகுதியை பெறுகின்றன. இந்தப் பஞ்சபூதங்களின் இணைவு என்பது பஞ்சீகரப்பிரகாரம் என்றும் அழைக்கப்படுகின்றது. பஞ்சீகரப்பிரகாரம் எவ்விதத்தில் நடைபெற்றது? பஞ்சபூதங்களான ஆகாயம், வாயு, தேயு, அப்பு, பிரிதிவி என்ற பூதங்கள் சூக்கும நிலையில் ஒவ்வொன்றும் இரு சமமான பகுதிகளாக பிரிக்கப்படுகின்றன. இவ்விதமாக பிரிக்கப்பட்ட பத்து பகுதிகளில் முதல் ஐந்து பகுதிகள் ஒவ்வொன்றும் நான்கு சமமான பகுதிகளாக பிரிக்கப்படுகின்றது. இதன் பிறகு, ஒவ்வொரு பூதத்தின் மூலப்பொருளின் ஒரு பகுதி மற்ற நான்கு மூலப்பொருள்களின் நான்கு பகுதிகளுடன் சேர்க்கப்படுகிறது.இந்த சேர்க்கையானது பிரிதிவியில் அப்புவும், தேயுயும், வாயுவும், ஆகாயமும் அப்புவில் பிரிதிவியும், தேயுயும், வாயுவும், ஆகாயமும் தேயுவில் பிரிதிவியும், அப்புவும், வாயுவும், ஆகாயமும் வாயுவில் பிரிதிவியும், அப்புவும், தேயுயும், ஆகாயமும் ஆகாயத்தில் பிரிதிவியும், அப்புவும், தேயுயும், வாயும் கலந்து பஞ்சீகரப்பிரகாரத்தை உருவாக்கின. இவ்விதமாக ஒவ்வொரு பூதங்களும் தங்களுக்குள் அன்னியமாக கலந்ததினால் உயிரினங்கள் வாழ்வதற்கு என்று ஒரு பஞ்சபூதங்களால் சூழப்பட்ட வாழும் தன்மை கொண்ட பிரிதிவியை உருவாக்குவதற்கும், உயிரினங்களின் தோற்றத்தினை அமைப்பதற்கும் ஏதுவாக அமைந்திருந்தன. நம் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய இந்த பூமியில் உயிரினங்களின் தோற்றம் என்பது நான்கு வகைகளின் அடிப்படையில் கொண்டிருப்பதாகும். ஜீவனுடைய கர்ம நிகழ்வுகளிலும், பிரகிருதி தன்மாத்திரைகளினாலும், ஈஸ்வர சங்கல்பத்தினாலும் இந்த பிரம்மாண்டமானது உருவாகியது.