பாரத மாதா

பாரத மாதா

bookmark


தான தனந்தன தான தனந்தன
தானனத் தானா னே.

முன்னை இலங்கை அரக்கர் அழிய
   முடித்தவில் யாருடை வில்? - எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி நல்
   ஆரிய ராணியின் வில்.    1

இந்திர சித்தன் இரண்டு துண்டாக
   எடுத்தவில் யாருடைய வில்? - எங்கள்
மந்திரத் தெய்வம் பாரத ராணி,
   வயிரவி தன்னுடைய வில்.    2

ஒன்று பரம்பொருள் நாம்அதன் மக்கள்
   உலகின்பக் கேணி என்றே - மிக
நன்று பல்வேதம் வரைந்தகை பாரத
   நாயகி தன்திருக் கை.    3

சித்த மயமிவ் உலகம் உறுதி நம்
   சித்தத்தில் ஓங்கி விட்டால் - துன்பம்
அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்
   ஆரிய ராணியின் சொல்.    4

சகுந்தலை பெற்றதோர் பிள்ளைசிங் கத்தினைத்
   தட்டி விளையாடி - நன்று
உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி
   ஒளியுறப் பெற்ற பிள்ளை.    5

காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது
   கல்லொத்த தோள்எவர் தோள்? - எம்மை
ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள்
   ஆரிய தேவியின் தோள்.    6

சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம்
   தந்த தெவர் கொடைக்கை? - சுவைப்
பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும்
   பாரத ராணியின் கை.    7

போர்க்களத் தேபர ஞானமெய்க் கீதை
   புகன்ற தெவருடை வாய்? - பகை
தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத
   தேவிமலர் திரு வாய்.    8

தந்தை இனிதுறந் தான் அரசாட்சியும்
   தையலர் தம்முறவும் - இனி
இந்த உலகில் விரும்புகி லேன் என்றது
   எம் அனை செய்த உள்ளம்.    9

அன்பு சிவம்உல கத்துயர் யாவையும்
   அன்பினிற் போகும் என்றே - இங்கு
முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன்
   மொழி எங்கள் அன்னை மொழி.    10

மிதிலை எரிந்திட வேதப் பொருளை
   வினவும் சனகன் மதி - தன்
மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது
   வல்ல நம் அன்னை மதி.    11

தெய்வீகச் சாகுந்தல மெனும் நாடகம்
   செய்த தெவர் கவிதை? - அயன்
செய்வ தனைத்தின் குறிப்புணர் பாரத
   தேவி அருட் கவிதை.    12