பாரத நாடு

பாரத நாடு

bookmark


ராகம் - இந்துஸ்தானி
தாளம் - தோடி

பல்லவி

பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு.

சரணங்கள்

ஞானத்தி லேபர மோனத்திலே - உயர்
   மானத்தி லேஅன்ன தானத்திலே
கானத்தி லேஅமு தாக நிறைந்த
   கவிதையி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)    1

தீரத்தி லேபடை வீரத்திலே - நெஞ்சில்
   ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
   தருவதி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)    2

நன்மையி லேஉடல் வன்மையிலே - செல்வப்
   பன்மையி லேமறத் தன்மையிலே
பொன்மயி லொத்திடும் மாதர்தம் கற்பின்
   புகழினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)    3

ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே - புய
   வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
   கடலினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)    4

வண்மையி லேஉளத் திண்மையிலே - மனத்
   தண்மையி லேமதி நுண்மையிலே
உண்மையி லேதவ றாத புலவர்
   உணர்வினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)    5

யாகத்தி லேதவ வேகத்திலே - தனி
   யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்தி லேதெய்வ பக்திகொண் டார்தம்
   அருளினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)    6

ஆற்றினி லேசுனை யூற்றினிலே - தென்றல்
   காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபயன் ஈந்திடுங் காலி
   இனத்தினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)    7

தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே - கனி
   ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
தேட்டத்தி லேஅடங் காத நதியின்
   சிறப்பினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)    8