பாரத தேவியின் திருத் தசாங்கம்

பாரத தேவியின் திருத் தசாங்கம்

bookmark

நாமம்
(காம்போதி)

பச்சை மணிக்கிளியே! பாவியெனக் கேயோகப்
பிச்சை யருளியதாய் பேருரையாய்! - இச்சகத்தில்
பூரணமா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்த
பாரதமா தேவியெனப் பாடு.    1

நாடு
(வசந்தா)

தேனார் மொழிக்கிள்ளாய்! தேவியெனக் கானந்த
மானாள் பொன் னாட்டை அறிவிப்பாய்! - வானாடு
பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்
ஆரியநா டென்றே அறி.    2

நகர்
(மணிரங்கு)

இன்மழலைப் பைங்கிளியே! எங்கள் உயிரானாள்
நன்மையுற வாழும் நகரெதுகொல்? - சின்மயமே
நானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுது
தானென்ற காசித் தலம்.    3

ஆறு
(சுருட்டி)

வண்ணக் கிளி! வந்தே மாதரமென் றோதுவரை
இன்னலறக் காப்பா ளியாறுரையாய்! - நன்னர்செயத்
தான்போம் வழியெலாம் தன்மமொடு பொன்விளைக்கும்
வான்போந்த கங்கையென வாழ்த்து.    4

மலை
(கானடா)

சோலைப் பசுங்கிளியே! தொன்மறைகள் நான்குடையாள்
வாலை வளரும் மலைகூறாய்! - ஞாலத்துள்
வெற்பொன்றும் ஈடிலதாய் விண்ணில் முடிதாக்கும்
பொற்பொன்று வெள்ளைப் பொருப்பு.    5

ஊர்தி
(தன்யாசி)

சீரும் சிறப்புமுயர் செல்வமுமோ ரெண்ணற்றாள்
ஊரும் புரவி உரைதத்தாய்! தேரின்
பரிமிசையூர் வாளல்லள் பாரனைத்தும் அஞ்சும்
அரிமிசையே ஊர்வாள் அவள்.    6

படை
(முகாரி)

கருணை யுருவானாள் காய்ந்தெழுங்காற் கிள்ளாய்
செருநரைவீழ்த் தும்படையென் செப்பாய்! - பொருபவர்மேல்
தண்ணளியால் வீழாது, வீழின் தகைப்பரிதாம்
திண்ணமுறு வான்குலிசம் தேறு.    7

முரசு
(செஞ்சுருட்டி)

ஆசை மரகதமே! அன்னை திரு முன்றிலிடை
ஓசை வளர்முரசம் ஓதுவாய்! - பேசுகவோ
சத்தியமே, செய்க தருமமே என்றொலிசெய்
முத்திதரும் வேத முரசு.    8

தார்
(பிலகரி)

வாராய் இளஞ்சுகமே! வந்திப்பார்க் கென்றுமிடர்
தாராள் புனையுபணித் தார்கூறாய்! - சேராரை
முற்றாக் குறுநகையால் முற்றுவித்துத் தானொளிர்வாள்
பொற்றா மரைத்தார் புனைந்து.    9

கொடி
(கேதாரம்)

கொடிப்பவள வாய்க்கிள்ளாய்! சூத்திரமும் தீங்கும்
மடிப்பவளின் வெல்கொடிதான் மற்றென்? - அடிப்பணிவார்
நன்றாரத் தீயார் நலிவுறவே வீசுமொளி
குன்றா வயிரக் கொடி.    10
~~chapter~~14
~~title~~தாயின் மணிக்கொடி பாரீர்
~~page_heading~~தாயின் மணிக்கொடி பாரீர்

(பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்)

தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு

பல்லவி

தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

சரணங்கள்

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்
   உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும் - செய்ய
   பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)    1

பட்டுத் துகிலென லாமோ? - அதில்
   பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகுந்தடித் தாலும் - அதை
   மதியாதவ் வுறுதிகொள் மாணங்க்கப் படலம் (தாயின்)    2

இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில்
   எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்
மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன்
   மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்)    3

கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்
   காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியர் அவ்வீரர் - தங்கள்
   நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார். (தாயின்)    4

அணியணி யாயவர் நிற்கும் - இந்த
   ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும் - விறல்
   பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்! (தாயின்)    5

செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந்
   தீக்கண் மறவர்கள் சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின்
   சேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்)    6

கன்னடர் ஓட்டிய ரோடு - போரில்
   காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்,
பொன்னகர்த் தேவர்க ளொப்ப - நிற்கும்
   பொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர். (தாயின்)    7

பூதலம் முற்றிடும் வரையும் - அறப்
   போர்விறல் யாவும் மறுப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில்
   மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர். (தாயின்)    8

பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப்
   பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,
துஞ்சும் பொழுதினும் தாயின் - பதத்
   தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும், (தாயின்)    9

சேர்ந்ததைக் காப்பது காணீர்! அவர்
   சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத - நிலத்
   தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்)    10