பாண்டியர்கள் பற்றிய வரலாற்றுச் சான்றுகள்
பிற நாட்டவர் பதிவுகள்:-
(1) சுமார் 300 கி.மு. - மெகஸ்தெனஸ் இந்தியா வருகை. பண்டையா என்னும் அரசி பாண்டியர் நாட்டை ஆண்டதாக குறிப்பு. மேலும் அவனது நாட்டுக் குறிப்பில் பாண்டிய நாடு பற்றி தகவல்கள் பல உள்ளன. எரெக்ளீசு (Heracles) என்ற மன்னனுக்கு 'பண்டேயா' என்ற பெண் பிறந்தாள். அவளுக்கு கடல்சார்ந்த தென்னாட்டைக் கொடுத்தான். அதில் 350 ஊர்கள் இருந்தன. நாள்தோறும் அரசிக்கு ஓர் ஊர் மக்கள் திறை செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்" என்ற செய்தி யவன நாட்டுத் தூதுவனின் குறிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
(2) சுமார் கி. மு. 60 - நிகோலசு தமாசுகசு மற்றும் ஸ்ட்ரேபோ மதுரையை ஆண்ட பாண்டியர் மன்னன் ஒருவன் அகஸ்டஸ் மன்னனுக்கு தூதனுப்பியதாக குறித்தனர்.
(3) சுமார் கி.பி. 1 - 140 - பிளைனி மற்றும் தாலமி மதுரையை பாண்டிய மன்னன் ஆண்டதாக குறித்தனர்.
(4) சுமார் கி.பி. 1 - 200 - முதல் இரண்டு நூற்றாண்டுகளில் தமிழர் யவனர்களோடு சிறந்த வணிகவுறவு வைத்திருந்தனர்.செங்கடல் செலவு என்னும் கிரேக்க வணிக நூலேட்டில் மூவேந்தர் துறைமுகங்களான நறவு, தொண்டி, முசிறி, நீலகண்ட நகரம், கொற்கை, அழகன்குளம், காலப்பட்டினம், பாண்டிச்சேரி, எயிற்பட்டினம் போன்றவை சிறந்த துறைமுகங்களாக இருந்ததாக பெரிப்ளுசு கூறுகிறார்.
(5) சுமார் கி.பி. 250 - சீன நாட்டு வரலாற்றியல் அறிஞர் யூ உவான் பாண்டியர் அரசாங்கத்தை பாண்யுவி எனக் குறித்தார். பாண்டிய மக்கள் சீனர்களைப் போலவே சிறிய உயரம் படைத்திருந்தனர் எனக் கூறியுள்ளார்.
(6) சுமார் கி.பி. 1268-1310 - குலசேகர பாண்டியனின் ஆட்சியில் மதுரை உலகின் தலைசிறந்த செல்வச்செழிப்புள்ள நகரமாக இருந்ததாக மார்க்கோ போலோ குறிப்பு காணக்கிடைக்கிறது. பாண்டியர்களுக்கும் ஏமன் நாட்டவர்க்கும் 1289ஆம் ஆண்டில் சிறந்த குதிரை வணிகம் நடந்ததாக இபின் பட்டுடா குறிப்பு தெரிவிக்கிறது.
