பள்ளிபடைப் படலம் - 2320
பரதன் துயர்நிலை (2320-2324)
2320.
‘துறந்து போயினான் நந்தை; தோன்றல்! நீ
பிறந்து, பேர் அறம் பிழைத்தது’ என்றபோது,
இறந்து போயினான்; இருந்தது, ஆண்டு, அது
மறந்து வேறு ஒரு மைந்தன் ஆம் கொலாம்.
(வசிட்டன்) ‘தோன்றல்! - பரதனே!; நீ பிறந்து பேர் அறம்
பிழைத்தது- நீ பிறந்ததனால் பெரிதாகிய (அரசகுலத்து) அறம் தவறிவிட்டது
(மூத்தவன் இருக்க இளையவனாகியநீ வரத்தால் அரசு பெற்றமையால்);
நுந்தை துறந்து போயினான் - (அதனால்)உன்தந்தையாகிய தயரதன்
உன்னை (மகனல்லன் என்று) துறந்து இறந்தான்; என்ற போது - என்று
சொல்லிய போது; இறந்து போயினான் - (பரதன்) இறந்து போனான்;
ஆண்டு இருந்ததுஅது - அவ்விடத்தில் (பரதன்) இருப்பதாகிய
அத்தோற்றம் காண்பது; மறந்து - தன்தன்மை கெட்டு; வேறொரு
மைந்தன் ஆம் கொலாம் - வேறு ஒரு மகனாக இருக்கும் போலும்.
வசிட்டன் சொற்கேட்ட அளவில் பரதன் இறந்து போனான்;
இருக்கின்றவன் பரதன் அன்றோஎனின்? அன்று; இவன் வேறு ஒரு மகன்;
அவனும் தன் தன்மை திரிந்து பரதனைப்போல உருவம்கொண்டுள்ளான்
போலும் என்றவாறாயிற்று. பரதனது துயர் மிகுதி பற்றி இங்ஙனம் கூறினார்.
‘கொல்’ ஐயப்பொருளில் வந்தது. 131
