பள்ளிபடைப் படலம் - 2319
கடன்செய எழுந்த பரதனை வசிட்டன் தடுத்தல்
2319.
என்னும் வேலையில் எழுந்த வீரனை,
‘அன்னை தீமையால் அரசன் நின்னையும்,
துன்னு துன்பத்தால், துறந்து போயினான்,
முன்னரே’ என முனிவன் கூறினான்.
என்னும் வேலையில்- என்று (அவர்கள்) கேட்டுக்கொண்ட சமயத்தில்;
எழுந்த வீரனை - கடன் செய்ய எழுந்தபரதனை; முனிவன் - வசிட்ட
முனிவன்; (தடுத்து) ‘அரசன் - தயரதன்’ அன்னைதீமையால் - நின்
அன்னை செய்த தீமையால்; துன்னு துன்பத்தால்- நெருங்கியதுன்பத்தால்;
நின்னையும் - (மகனாகிய) நின்னையும்; முன்னரே - உயிரோடிருந்த
அப்போதே; துறந்து - மகன் அல்லன் எனக் கைவிட்டு; போயினான் -
இறந்தான்;’ என - என்று (அதனால் நீ உரிமைக்கு ஆகாய் என்று);
கூறினான் -.
“மன்னே ஆவான் வரும் அப்பரதன் தனையும் மகன் என்று
உன்னேன்; முனிவா அவனும் ஆகான்உரிமைக்கு” (1654) எனத் தயரதன்
கூறலின் வசிட்டன் இங்குத் தடுத்தான் என்க; அது அவன்மட்டுமேஅறிந்த
செய்தி. 130
