பள்ளிபடைப் படலம் - 2313
பரதன் அழுகை
2313.
மண்ணின்மேல் விழுந்து அலறி மாழ்குவான்,
அண்ணல், ஆழியான், அவனி காவலான்,
எண்ணெய் உண்ட பொன் எழில் கொள் மேனியை,
கண்ண நீரினால் கழுவி ஆட்டினான்.
(பரதன் ) மண்ணின் மேல் விழுந்து அலறி மாழ்குவான் - பூமியின்
மேலே விழுந்துபுலம்பி மயங்குபவனாகி; அண்ணல் - பெருமை பொருந்திய;
ஆழியான் -ஆணைச்சக்கரத்தை உடைய; அவனி காவலன் - உலக
வேந்தனாய தயரதனது; எண்ணெய் உண்ட -தைலத்திற் கிடந்த; பொன்
எழில் கொள் மேனியை - பொன் மயமான அழகு கொண்ட திருமேனியை;
கண்ண நீரினால் - (தன்) கண்களிலிந்து பெருக்கெடுத்து வரும்
கண்ணீரினால்; கழுவி - தூய்மை செய்து; ஆட்டினான்- மூழ்கச் செய்தான்.
எண்ணெயில் மூழ்கிக் கிடந்த மேனி இப்போது பரதன் கண்ணீரில்
மூழ்கியது என நயம்காண்க. எண்ணெயாட்டியதால் மேனி பொன்னிறம்
பெற்றது என்பது வான்மீகத்திற் கண்டது. 124
