பள்ளிபடைப் படலம் - 2310
கோசலை பரதனை வாழ்த்துதல்
2310.
‘முன்னை நும் குல முதலுளோர்கள்தாம்,
நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார்?
மன்னர் மன்னவா!’ என்று, வாழ்த்தினாள் -
உன்ன உன்ன நைந்து உருகி விம்முவாள்.
உன்ன உன்ன - நினைக்க நினைக்க; நைந்து - மனம் இற்றுப் போய்;
உருகி - கரைந்து; விம்முவாள் - அகின்றவளாகிய கோசலை;
‘மன்னர் மன்னவா!- இராச ராசனே!; முன்னை - உனக்கு முன்பாக
அரசாண்ட; நும் குல முதலுளோர்கள் தாம்- நும்குலத்து
முன்னோர்களுள்; யாவர் - எவர்; நின்னை நிகர்க்கும் நீர்மையார்!-
உன்னை ஒத்த தன்மை உடையவர்கள்;’ என்று வாழ்த்தினாள் - பாராட்டி
வாழ்த்துரைத்தாள்.
‘யாவரே’ ஏகாரம் வினாப்பொருட்டு. வரத்தால் அரசு தேடிவரவும்
வேண்டாம் என்றுவெறுத்தொதுக்கும் இராமனது குணம் பரதன் மாட்டும்
கண்டனள் ஆதலின், பாராட்டி “மன்னர்மன்னவா” என்றாள். 119
