பள்ளிபடைப் படலம் - 2298

bookmark

2298.    

‘அழிவு அரும் அரசியல் எய்தி, ஆகும் என்று,
இழி வரு சிறு தொழில் இயற்றி, ஆண்டு, தன்
வழி வரு தருமத்தை மறந்து, மற்று ஒரு
பழி வரு நெறி படர் பதகன் ஆக, யான்.

    ‘அழிவு அரும் அரசியல் எய்தி- கெடுதல் இல்லாத அரசாட்சியை
அடைந்து’ ஆகும் என்று - (எனக்கு) எதுவும் செய்ய இயலும்என்று கருதி;
ஆண்டு - அரசாட்சி நடத்தி; தன் வழிவரு தருமத்தை மறந்து -
தன்னுடைய பாரம்பரியமான குலதருமத்தை மறந்து (கை விட்டு); மற்று -
வேறாகிய;  ஒருபழிவரு நெறி - தனக்குப் பழி வந்து சேரக் கூடிய
வழியில்; படர் - விரித்துசெல்கின்ற;  பதகன் - பாவியாக;  யான் ஆக -
யான் ஆவேனாக.’

     அரசேற்றவன் அறவழியில் நடக்க வேண்டும்; வேறு வழியில் சென்றால்
பாவியாகிறான்; அவனைப்போல நானும் ஆவேனாக என்று பரதன் சூளுரை
செய்தான்.                                                   108