பள்ளிபடைப் படலம் - 2223
அந்தணர் தானம் பெறாத நிலை கண்டு இரங்குதல்
2223.
காவல் மன்னவன் கான்முளை கண்டிலன் -
ஆவும், மாவும், அழி கவுள் வேழமும்,
மேவு காதல் நிதியின் வெறுக்கையும்,
பூவின் வானவர் கொண்டனர் போகவே.
காவல் மன்னவன் - (உலகத்தைக் ) காத்தலைச் செய்கிற தயரத
மன்னவனது; கான்முளை - வழித் தோன்றலாகிய பரதன்; பூவின்
வானவர் - மண்ணுலகத் தேவர்கள்ஆகிய பூசுரர் எனப் பெறும் வேதியர்;
ஆவும் - பசுக்களும்; மாவும் - குதிரைகளும்;கவுள் அழிப் வேழமும் -
கன்னத்தில் மதம் பெருகுகின்ற யானையும்; காதல் மேவு -ஆசை
பெருகுகின்ற; நிதியின் வெறுக்கையும் - செல்வத்தின் மிகுதியும்;
கொண்டனர்போக - தானமாகப் பெற்றுக்கொண்டு செல்ல; கண்டிலன் -.
கான்முளை - மகனைக் குறிக்கும் சொல்; தந்தையின் காலில்
முளைத்தவன் என்பது பொருள்ஆதலின் வழித்தோன்றல் என உரை
கூறப்பட்டது. அழிதல் - பெருகுதல் என்னும் பொருட்டு “அழியும்புனல்
அஞ்சன மா நதியே” என்னும் சிந்தாமணியில் அப்பொருளாதல் (சீவக. 1193)
காண்க. ‘ஏ’ஈற்றசை. 33
