பள்ளிபடைப் படலம் - 2221
கொடைமுரச ஒலி அவிந்த நகர் காணல்
2221.
‘ஈட்டு நல் புகழ்க்கு ஈட்டிய யாவையும்,
வேட்ட, வேட்டவர் கொண்மின், விரைந்து’ எனக்,
கோட்டி மாக்களைக் கூவுவ போல்வன,
கேட்டிலன், முரசின் கிளர் ஓதையே.
‘ஈட்டிய யாவையும் - தேடித் தொகுத்த எல்லாச் செல்வங்களையும்;
நல்புகழ் ஈட்டுக்கு - நல்ல புகழைப்பெறுதற்கு; வேட்ட - தாம்
விரும்பியவற்றை; வேட்டவர் - விரும்பியவர்கள்; விரைந்து கொண்மின்’ -
விரைவாக வந்து வாங்கிக்கொள்ளுங்கள்; என - என்று; கோட்டி மாக்களை-
கூட்டமாக உள்ள மக்களை; கூவுவபோல்வன - கூவி அழைப்பன
போல்வனவாகிய; முரசின் கிளர் ஓதை - கொடை முரசின் செருக்கிய
ஒலியை; கேட்டிலன்- (பரதன்) கேட்கப் பெற்றிலன்.
கொடை முரசு ஒலித்தலை இரவலர்களைக் கூவி அழைத்தல் போலும்
என்றது தன்மைத்தற்குறிப்பேற்ற அணி. கோட்டி - அவை, மக்கள்
கூட்டம் உள்ள இடம். இங்கே மக்கள் திரள்என்பதாயிற்று. “என்னும்
குறளில் ‘கோட்டி’ என்பது அவை என்னும் பொருள்படல் அறிக. (குறள்
401). 31
