பள்ளிபடைப் படலம் - 2199
சேனை செல்லுகை (2199-2207)
பரதனோடு சென்ற சேனையின் எழுச்சி
2199.
யானை சுற்றின; தேர் இரைத்து ஈண்டின;
மான வேந்தர் குழுவினர்; வாளுடைத்
தானை சூழ்ந்தன; சங்கம் முரன்றன;
மீன வேலையின் விம்மின, பேரியே.
(பரதன்சென்ற போது) யானை சுற்றின- யானைகள் சூழ்ந்து
சென்றன; தேர் இரைத்துஈண்டின- தேர்கள்மணி ஒலித்து நெருங்கிச்
சென்றன; மான வேந்தர் குழுமினர்- பெருமையுடையஅரசர்கள் திரண்டு
சென்றனர்; வாள் உடைத் தானை சூழ்ந்தன-வாள் முதலிய கருவிகளை
ஏந்தியசேனா வீரர்கள் சுற்றிச் சென்றனர்;சங்கம் முரன்றன-சங்குகள்
ஒலித்தன; பேரி மீன வேலையின் விம்மின- பெருமுரசுகள்
மீனுடைய கடல் ஒலிபோல முழங்கின.
சக்கரவர்த்தியின் குமாரர்கள் ஆதலின் எங்குச் செல்லினும்
சேனையோடு செல்லுதல்அவர்க்கு இயல்பு ஆதலின் படை எழுச்சியும்
கூறற்பாலதாம். சுற்றின, ஈண்டின, சூழ்ந்தனஎனவும், முரன்றன, விம்மின
எனவும் சொற்களை மாற்றியமைத்த அழகு இன்பம் பயப்பது. 9
