பல்லவர் காலத்துக் கல்வியும் சமுதாய நிலையும்
பல்லவர் காலக் கல்விநிலை என்பது சமயம் சார்ந்ததாக இருந்தது. சமயக் கல்வி தான் கல்வியோ என்று ஐயுற வேண்டிய வகையில் வடமொழியிலும் தமிழ் மொழியிலும் கல்வி கற்பிக்கப்பட்டது.
கல்வி:
மக்கள் வடமொழியும், தமிழ்மொழியும், பல்வேறு கலையறிவும் பெற உதவியாகக் கல்வியமைப்பு இருந்தது. காஞ்சி மாநகரில் வடமொழியில் வேதங்கள் போன்ற உயர் ஆராய்ச்சிக்கல்வி அளிக்கும் கடிகைகள் இருந்தன. மேலும் கடிகாசலம் எனப்படும் சோழசிங்கபுரம் கடிகை, தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் வடமொழிக்கல்லூரி, தேவாரம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகிய நூல்கள் படைக்கும் ஆற்றலளிக்கும் தமிழ்க்கல்வி இருந்தது. அவை அக்காலக் கல்வி மேம்பாட்டுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
சமயநிலை:
துவக்கத்தில் சமணர்களாக இருந்த பல்லவர்கள், சைவ சமயத்தில் ஈடுபாடு காட்டினர். சைவ சமயத்தின் உட்பிரிவுகளான பாசுபதம், காபாலிகம், காளாமுகம், ஆகியவை இவர்கள் காலத்தில் செல்வாக்கு பெற்றிருந்தன. சைவர்களே ஆனாலும் பல்லவர்கள் வைணவம் தழைக்கவும் வழி செய்தனர். இவர்கள் காலத்தில் தேவாரப் பதிகங்களும் திவ்வியப் பிரபந்தமும் பாராயணம் செய்யப்பட்டன.
கலை இலக்கிய வளர்ச்சி:
பல்லவர்கள் காலத்திலேயே தமிழ் நாட்டில் இந்து சமய மறுமலர்ச்சியும், சிற்பம், இசை, ஓவியம், கட்டிடக்கலை முதலிய கலை வளர்ச்சியும் இலக்கியமும் அவர்கள் காலத்தில் உச்ச நிலையடைந்தன. கலை ஆர்வலர்களான பல்லவர்கள் எல்லாக் கலைகளிலும் ஒருமித்த ஆர்வம் காட்டினார்கள். தாமே பண்களைத் தொகுத்தும் பாடியும் மகிழ்ந்தனர். நாயன்மார்களும், ஆழ்வார்களும், பாடிய பாடல்கள் பலவற்றிற்கு அவர்கள் காலத்தில் பண்கள் அமைக்கப்பட்டிருந்ததன. அவை கடவுள் உலாக்களின் போது பாடப்பட்டன. இசைக்கருவிகளிலும் புதிய மாற்றங்களைப் பல்லவர்கள் செய்து அறிமுகப்படுத்தினர். ஓவியக் கலையில் பல்லவர்களுக்கு இருந்த ஈடுபாடு சித்தன்னவாசல் ஓவியங்களின் முலம் நன்கு வெளிப்படுகிறது. பல்லவர்கள் காலம் கட்டடக்கலைக்கு உலகப் புகழ் தேடித்தந்த காலமாகும். அவர்களது குடைக் கோயில்களும் மாமல்லபுரத்துச் சிற்பங்களும் குடைவரைக் கோயில்களும் இன்றளவும் உலக மக்களின் போற்றுதலுக்கு உரியனவாகும்.
இலக்கியம்
தமிழிலக்கியங்கள்:
பல்லவர் காலத்துப் பக்தி இயக்கம் தமிழுக்குப் புதிய வகை இலக்கியத்தினை அளித்தது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருளிச்செய்த பக்திப் பாடல்கள் அக்கால சமுதாய நிலை சமய, மொழி நிலையையும், கலைச் சிறப்பையும் உணர்த்துவன. பழைய அகப்பாடல் மரபுகள் இப்பாடல்களில் புது உருவம் பெறினும், வட சொல்லாட்ட்சி மிகுந்து காணப்படுகின்றன. மேலும் நந்திக் கலம்பகம், பெருந்தேவனார் பாடிய பாரதம், பெருங்கதை, இறையனார் களவியலுறை திருமந்திரம், சங்க யாப்பு, பாட்டியல் நூல், மகாபுராணம், முத்தொள்ளாயிரம், புராண சாகரம், கலியாண கதை, அணியியல், அமிர்தபதி, அவிநந்த மாலை, காலகேசி, இரணியம், சயந்தம், தும்பிப் பாட்டு முதலிய நூல்களும் பல்லவர் காலத்தில் தோன்றியனவே. காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள் ஆகியோரும் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர்களே.
வடமொழி இலக்கியங்கள்:
பல்லவர்களில் பலர் சிறந்த வடமொழியறிஞர்களாக விளங்கினர். லோக விபாகம், அவந்தி சுந்தரி கதை, காவியதர்சம் முதலான நூல்கள் தோன்றின. முதலாம் மகேந்திர வர்மன் மத்தவிலாசப் பிரகசனம் எனும் நகைச்சுவை நாடகத்தை வடமொழியில் எழுதினான். மேலும் பாரவி, தண்டி போன்ற புலவர்களும் இருந்தனர். அவந்தி சுந்தரி, கதா போன்ற வடமொழிப்பாடல்கள் தோன்றின. வடமொழிப் பட்டயங்கள் அழகிய இலக்கிய நடையில் எழுதப்பட்டன. காஞ்சியிலும் கடிகாசலத்திலும், பர்கூரிலும் வடமொழிக் கல்லூரிகள் இருந்தன. கடிகாசலத்தில் மயூரசன்மன் மாணவனாக இருந்தான். தர்மபாலர் என்னும் பெரியார் இங்கிருந்து நாளந்தாப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றார்.
இசைக்கலை:
பல்லவர்காலத்தில் தமிழகத்தில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் இசைக்கருவிகளுடன், அடியார்கள் புடை சூழ தேவர் மூலருக்கும் பாடல்கள் பாடிக்கொண்டு ஆலயங்கள் தோறும் சென்று சைவத்தையும் வைணவத்தையும் வளர்த்தனர். தாளத்தோடு கூடிய இன்னிசையைப் பரப்பினர். நாயன்மார்களது பதிகங்களில் சாதாரி, குறிஞ்சி, நட்டபாடை, இந்தளம், வியாழக் குறிஞ்சி, சீகாமரம், பியந்தைக் காந்தாரம், செவ்வழி, கொல்லி, பாலை போன்ற பண்கள் பயன்படுத்தப்பட்டன.
தோற்கருவி, துளைக்கருவி நரம்புக்கருவி, கஞ்சக்கருவி போன்ற வகையினைச் சார்ந்த யாழ், குழல், வீணை, தமருகம், சக்கரி, கொக்கரி, கரடிகை, மொந்ந்தை, முழவம், தக்கை, துந்துபி, குடமுழா, உடுக்கை, தடி, தாளம் முதலிய இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன, திருநீலகண்ட யாழ்ப்பாணர், ஆனாயானார் போன்ற இசைப் பேரறிஞர்கள் கருவியிசை மூலமாகச் சமயம் வளர்த்தனர்.
சதுரஸ்ரம், திஸ்ரம், மிஸ்ரம், கண்டம், சங்கீரணம் எனும் தாள வகைகள் கடைசியான சங்கீரணம் என்பதனைப் புதியதாகக் கண்டு அதன் வகைகளையும் ஒழுங்குகளையும் அமைந்த காரணத்தால் மகேந்திரவர்ம பல்லவன் சங்கீரண சாதியென அழைக்கப்பட்டான். இசை நுட்பம் உணர்ந்த மகேந்திரவர்மன் காலத்தில், புதுக்கோட்டையைச் சேர்ந்த குடுமியா மலையில் இசை மாணவர் நன்மைக்காகப் பண்களை வகுத்துத் தந்தவர் உருத்திராச்சாரியார் என்பவர் ஆவார். மாணவனான அரசன் கட்டளைப்படி இங்கு இசைக்கல்வெட்டு அமைக்கப்பட்டது. எட்டு நரம்புகளைக் கொண்ட வீணைக்கும் பயன்படுமாறு கண்டறிந்த பண்கள் இதில் பொறிக்கப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது. பரிவாதினி எனும் வீணையில் வல்லவனாக இம்மன்னன் திகழ்ந்தான்.
ஆடற்கலை:
மகேந்திரவர்மன் காலத்துச் சித்தன்னவாசல் ஓவியங்கள் பல்லவர்கள் காலத்தில் நடனக் கலை பெற்றிருந்த ஏற்றத்தினை விளக்குகின்றன. பரமேசுவர விண்ணகரம் எனப்படும் வைகுந்தப் பெருமாள் கோவிலில் ஆடவரும் பெண்டிரும் அணி செய்து கொண்டு ஆடி நடிக்கும் காட்சி சிற்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பல்லவர் காலத்துக் கோயில்களுள் இசையும், கூத்தும் வளர்க்க அடிகள்மார், மாணிக்கத்தார், கணிகையர் என்னும் பெண்மக்கள் இருந்தனர். இது தேவாரம் போன்றா சிற்றிலக்கியங்கள் வாயிலாகவும், கல்வெட்டுகள் வாயிலாகவும் தெரிய வருகிறது. காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சிவபெருமான் ஆடிய நாதாந்த தூக்கிய திருவடி(குஞ்சித பாதம்) நடனம் சிற்பவடிவத்தில் செதுக்கப்பட்டுள்ளது.
கட்டடக்கலை:
மகேந்திரவர்மனால் தமிழகத்தில் கட்டப்பட்ட குகைக்கோயில்கள் சிறப்பு வாய்ந்தவை. சிம்மவிஷ்ணுவால் கட்டப்பட்டன என்று கருதப்படும் ஆதிவராகர் கோயில் குகைக்கோயிலாகும். மகேந்திரவர்மன் கட்டிய குகைக் கோயில்கள் அனைத்தும் மலைச் சரிவுகளில் குடைந்து அமைத்தவையாகும். இத்தகைய குகைக்கோயில்கள் சீயமங்கலம், பல்லாவரம், வல்லம், தளவானூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் சிவன் கோயில்களாக அமைந்தன. மாமண்டூர், மகேந்திரவாடி, சிங்காவரம், நாமக்கல் ஆகிய இடங்களில் பெருமாள் கோயில்களாக அமைந்தன. மண்டகப்பட்டில் குடைந்துள்ள குகைக்கோயிலில் பிரமன், சிவன், திருமால் ஆகிய மூவருக்கும் ஒவ்வொரு அறை வீதம் மூன்று அறைகளோடு அமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள தருமராசர் மண்டபமும், கொடிக்கால் மண்டபமும் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டவை. இங்கு நரசிம்மவர்மனால் அமைக்கப்பட்ட பஞ்சபாண்டவர் தேர்கள் என்றழைக்கப்படுபவை ஒரே கல்லைக் கோயிலாக அமைத்துக் கொண்ட கட்டடக்கலை அமைப்பைச் சேர்ந்ததாகும். திரௌபதியம்மன் தேர் என்றழைக்கப்படும் கோயில் தூங்காணை மாடம் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட கட்டடக் கலை அமைப்பைச் சேர்ந்ததாகும். இது பண்டைக் காலத்து பௌத்த சைத்தியத்தை ஒத்தது. பரமேசுவரவர்மன், கூரம் என்னும் சிற்றூரில் அமைத்த சிவன் கோயில் தமிழகத்து முதற் கற்கோயில் ஆகும்
சிற்பக்கலை:
துவாரபாலகர் என்னும் வாயில்-வரவேற்பாளர், வராக-மண்டபம், மாமல்லபுரம் மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகிய பல்லவ மன்னர்கள் தாம் அமைத்த குகைக் கோயில்களில் வாயிற்காவலர் (துவாரபாலகர்), விஷ்ணு, சிவன், லிங்கம், இசைவாணர்(கந்தர்வர்), முயலகன், ஆதிவராகர், மகிஷாசுரமர்த்தினி, வராக அவதாரம், வாமன அவதாரம், கங்கைக் காட்சி, அர்ச்சுனன் தவம் அல்லது பகீரதன் தவம், கோவர்த்தன கிரியைக் கண்ணன் குடையாகப் பிடித்தது போன்ற காட்சிகளைச் சிற்பங்களாக அமைத்துள்ளனர். பல்லவர் அமைத்த கோயில்களின் தூண்களும், சுவர்களும், போதிகைகளும், விமானங்களும் கண்கவரும் சிற்பங்களைக் கொண்டு திகழ்கின்றன. மகாபலிபுரம் பல்லவரின் சிற்பக்கலைக் கூடமாகவே திகழ்கின்றது.
ஓவியக்கலை:
ஓவியக் கலையில் பல்லவர்களுக்கு இருந்த ஈடுபாடு சித்தன்னவாசல் ஓவியங்களின் மூலம் நன்கு வெளிப்படும். 1400 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட அந்த ஓவியங்கள் வண்னக்கலவை மாறாது அவற்றின் தனிச்சிறப்பை உணர்த்துவன. இவ்வோவியங்கள் சமண சமயத்தைச் சேர்ந்தன.
