பல்லவர்கள் பற்றிய ஆய்வு

bookmark

தமிழ் நாட்டில் கி.பி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஏறத்தாழ 700 வருடங்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களது ஆட்சி தமிழகத்தின் வரலாற்றில் பல்வேறு அம்சங்களில் திருப்புமுனையாக அமைந்தது எனலாம். எனினும் இவர்களுடைய வரலாறுபற்றி நம்பத்தகுந்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. இவர்கள் தமிழர்களேயென ஒரு பிரிவினர் நிறுவ முயல, வேறு சிலர் இவர்கள், தமிழகத்துக்கு வெளியிலிருந்து வந்த தமிழரல்லாத இனத்தவர்கள் என்கின்றனர். இவர்கள் மூலத்தைத் தென்னிந்தியாவில் மட்டுமன்றி பாரசீகம், ஈழம் போன்ற பகுதிகளிலும் ஆய்வாளர்கள் தேடியுள்ளார்கள். முற்காலப் பல்லவர்கள் வெளியிட்ட சாசனங்களின் மொழி மற்றும் அவற்றின் உள்ளடக்கங்களை வைத்து, இவர்கள் இந்தியாவின் வடபகுதியிலிருந்து வந்த ஒரு பிராமணக்குடியினர் என்று சிலர் கருதுகிறார்கள். பல்லவர்களின் மிகப் பண்டைய கல்வெட்டுக்கள் பெல்லாரி, குண்டூர் மற்றும் நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன. பிற்காலத்தில் அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பல்லவர்கள் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

பல்லவர்கள் உண்மையில் தென் இந்தியர்கள் தான் (ஆய்வுகள் சொல்லும் விளக்கம்):

இந்திய வரலாறு நூலாசிரியரான 'வின்ஸென்ட் ஸ்மித்' என்பார், தமது 'பழைய இந்திய வரலாறு' என்னும் நூலின் முதற்பதிப்பில், 'பல்லவர் என்பவர் பஹலவர் என்னும் பாரசீக மரபினர்' என்றும், இரண்டாம் பதிப்பில் 'பல்லவர் என்பவர் தென் இந்தியாவிற்கே உரியவர். அவர் கோதாவரிக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட வேங்கி நாட்டவராகலாம்' என்றும், மூன்றாம் பதிப்பில், பஹலவர் என்னும் சொல்லைப் பல்லவர் என்னும் சொல்லோடு ஒப்பிட்டுப் பார்த்து பாரசீகரெனக் கூறல் தவறு. 'பல்லவர் என்பவர் தென் இந்தியரே ஆவர்' என்றும் முடிவு கூறியுள்ளார்.

ஆயினும் , ரைஸ் என்னும் ஆராய்ச்சியாளர், 'பஹலவர், மரபினரே பல்லவர்' என்று முடிவு செய்தார். பேராசிரியர் துப்ராய் என்பவர், 'கி.பி. 150 இல் 'ருத்ர தாமன்' என்னும் ஆந்திரப் பேரரசன் அமைச்சனான கவிராகன் என்பவன் பஹலவன். அவன் மரபினரே ஆந்திரப் பேரரசு அழிவுறுங்காலத்தில் அதன் தென்பகுதியை தமதாக்கி ஆண்டவராவர். கிடைத்துள்ள பட்டயங்களில் காணப்படுபவர் முதற் பல்லவ அரசர் அல்லர். ஆந்திரப் பேரரசின் தென் மேற்கு மாகாணங்களை ஆண்டு வந்த சூட்டுநாகர் பெண்ணை மணந்து பட்டம் பெற்றவனே முதற்பல்லவன். அவனே பல்லவர் பட்டயங்களில் கூறப்படுபவன்' என்று வரைந்துள்ளார். இங்ஙனம் பல்லவர் என்பர் பஹலவர் மரபினரே என்று முடிவு கொண்டவர் பலர்.

பல்லவர் தமிழகத்தை ஆண்டாலும் அவர்களது பிறப்பிடம் இலங்கையாகவும் இருக்கக் கூடும் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதற்கான சான்றுகள்

இலங்கையிற் சிறந்த ஆராய்ச்சியாளராக இருந்த இராசநாயகம் என்பவர். 'இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவம் (காரைத்தீவு) பல்லவர் பிறப்பிடமாகும். மணிமேகலையில் கூறப்பட்டுள்ள சோழனை மணந்த பீலிவளை என்பவர் நாகர் மகள் ஆவாள். அவன் பெற்ற மைந்தனே திரையால் கடத்தப்பட்டுக் கரை சேர்ந்த முதல் பல்லவன். அவன் தொண்டைக் கொடியால் உந்தப்பட்டு வந்தமையின் 'திரையன்' என்றும் வழங்கப்பெற்றான். அவன் மரபினரே தம் தாயகம் தாங்கிப் (மணிபல்லவம்) பல்லவர் எனப்பட்டனர். பல்லவர் முதல் அரசன் பெரும்பாணாற்றுப் படையில் புகழ்பெற்ற தொண்டைமான் இளந்திரையன் ஆவான்' என விளக்கியுள்ளார்.

யாழ்ப்பாணம் யாழ்ப்பாண மக்களால் 'மணிபுரம்' எனப்படுகிறது. அங்கு நாகரும் இருந்தமையால் 'மணி நாகபுரம்' என்னும் பெயர் பெற்றது. இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வருபவர்க்கு யாழ்ப்பாணம் ஒரு போது (போத்து - sprout)போலக்காணப்படுதலின், அது போது (போத்து) எனப்பட்டது. போது, போத்து, பல்லவம் என்பன ஒரே பொருளைக் குறிப்பன. யாழ்ப்பாணத்திலிருந்து போந்தவர் ஆதலின், தம்மைப் 'போத்தர்' என்றும், 'பல்லவர்' என்றும் பல்லவ அரசர் கூறிக்கொண்டனர். 'மணிபல்லவம்' என்னும் தீவு மணிமேகலையில் குறிக்கப்பட்டிருத்தலால் மணிமேகலை காலத்து மக்கட்கு விளங்கி இருத்தல் புலனாகும். 'வீரகூர்ச்சன் நாகர் மகளை மணந்து அரசு பெற்றான்' என்று பல்லவர் பட்டயம் கூறுதலும், கரிகாலன் நாகர் மகளை மணந்து பெற்ற இளந்திரையன், தொண்டை மண்டலம் ஆண்டான் என்பது ஆராய்ச்சிக்கு உரியன. மேலும், பல்லவர், இன்ன இடத்திலிருந்து வந்ததாக ஒரு பட்டயத்திலும் கூறப்படவில்லை. 'தொண்டைமண்டலத்துப் பழங்குடியினரான குறும்பர்களே பிற்காலப் பல்லவர்' என்றும் முடிவு செய்தனர்.

பல்லவர்கள் தமிழரே அல்ல, தமிழ் மொழியை விரும்பியவர்கள் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை ஏற்றுக் கொண்டவர்கள் என்ற கூற்றும் உள்ளது. அதற்கான ஆதாரங்கள்

வின்செண்ட் ஸ்மித் தமது மூன்றாம் பதிப்பில் கூறியதே பெரிதும் பொருத்தமுடையதாகத் தெரிகின்றது. பிராக்ருத மொழியில் வெளியிடப்பட்ட பல்லவப் பட்டயங்களோ, அல்லது வடமொழியில் எழுதப்பெற்ற பல்லவர் பட்டயங்களோ, பிற கல்வெட்டுகளோ 'பல்லவர் பஹலவர் மரபினர்' என்றோ, வேற்று நாட்டவர் என்றோ. 'திரையர் மரபினர்' என்றோ, 'மணிபல்லவத் தீவினர்' என்றோ குறிக்கவில்லை. சங்ககாலத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்ட இளங்கிள்ளி, இளந்திரையன் என்பார்க்கும் சிவஸ்கந்தவர்மன், 'புத்தவர்மன்' வீரகூர்சவர்மன் என்பார்க்கும் தொடர்பு ஏதும் இருந்திருத்தல் இயலாது. மேலும் பல்லவர் பட்டயங்கள் அனைத்தும் பிராக்ருத மொழியிலும் பெரும்பாலானவை வடமொழியிலும் இருக்கின்றன. பல்லவர் காலத்தில் வடமொழி தொண்டை மண்டலத்தில் பேரரசு செலுத்தியது எனலாம். பாரவி, தண்டி முதலிய வடமொழிப் புலவர்கள் பல்லவர் ஆட்சியில் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பது தெரிகிறதேயன்றி, எந்தத் தமிழ்ப் புலவரும் கி.பி. எட்டாம் நூற்றாண்டுவரை பல்லவர் ஆதரவு பெற்றதாகத் தெரியவில்லை. மேலும், பல்லவர், தம்மைப் 'பாரத்வாச கோத்திரத்தார்' என்று பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் கூறிக்கொள்கின்றனர்; இன்ன பிற காரணங்களால், பல்லவர் தமிழரின் வேறுபட்டவர் என்பதைத் தெளிவுறக் காணலாம்.

பல்லவர் பஹலவர் மரபினர் என்ற கூற்றும் நிலவுகிறது:

பஹலவர்கள் முன்பு பார்த்தியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் தொண்டைமண்டலமாக இன்று அறியப்படும் ஆந்திர கடல் கரை பிரதேசம், காஞ்சி பிரதேசத்தில் தங்கி அங்கிருந்து தங்களது பல்லவ சாம்ராஜ்யத்தை நிறுவினர். பஹலவ மன்னர்கள் தங்கள் சின்னமாக நெருப்பைக் கொண்டிருந்தார்கள். ஒரு பாத்திரத்தில் நெருப்பு எரிவதை தங்களது சின்னமாகவும் தங்களது சிற்பங்களிலும் வடித்து வைத்திருந்தனர். அதுவே பல்லவர்களும் செய்தது. பல்லவர்களது சின்னமாக இருந்ததும் நெருப்பு சட்டியே. பல்லவர்கள் பெர்சியா (ஈரான்) நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கூற்றும் நிலவுகிறது.

இவ்வாறாக பல்லவர்கள் பற்றி வரலாற்று ஆய்வாளர்களிடம் எண்ணற்றக் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும். உண்மையில் பல்லவர்கள் தமிழர்கள் தான் என்று பெரும்பாலும் எல்லா வரலாற்று ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். காரணம் அவர்கள் தமிழ் மொழிக்கு செய்த தொண்டுகள் ஏராளாம். தாராளம். அதைவிட பல்லவர் காலத்துச் சமயச் சீர்திருத்தங்கள் நிச்சயம் போற்றக் கூடியதே.

தவிர பல்லவ மன்னர்களின் அரசியல் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு அவர்கள் வெளியிட்ட பட்டயங்கள் துணை புரிகின்றன. பல்லவ மன்னர்கள் தொடக்க காலத்தில் (கி.பி. 250-575) வெளியிட்ட பட்டயங்கள் பிராகிருத மொழியிலும், இடைக்காலத்தில் (கி.பி. 575-730) வெளியிட்ட பட்டயங்கள் சமஸ்கிருத மொழியிலும், பிற்காலத்தில் (கி.பி. 731-890) வெளியிட்ட பட்டயங்கள் கிரந்தத் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், பட்டயங்களைப் பிராகிருத மொழியில் வெளியிட்டவர்களை முற்காலப் பல்லவர்கள் என்றும், சமஸ்கிருத மொழியில் வெளியிட்டவர்களை இடைக்காலப் பல்லவர்கள் என்றும், கிரந்தத் தமிழில் வெளியிட்டவர்களைப் பிற்காலப் பல்லவர்கள் என்றும் மூன்று பிரிவினராக வரலாற்றாசிரியர்கள் பிரிக்கின்றனர்.

இப்பல்லவர்களைப் பற்றி இன்னும் விரிவாகக் காண்போமா? எனில் வாருங்கள்