பல்லவர்களின் பிரிவுகள்

bookmark

1.    முற்காலப் பல்லவர்கள்
2.    இடைக்காலப் பல்லவர்கள்
3.    பிற்காலப் பல்லவர்கள்

என்ற மூன்று பிரிவினர் உண்டு.

முற்காலப் பல்லவர்கள்:

முற்காலப் பல்லவர்கள் பிராகிருத மொழியில் பட்டயங்களை வெளியிட்டனர். இவர்கள் தொடக்கத்தில் தமிழகத்திற்கு வடக்கே சாதவாகனப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசர்களாய் விளங்கினார். அப்பேரரசுக்குத் திறை செலுத்திக் காஞ்சிபுரத்திலிருந்து ஆட்சி செலுத்தினர். சாதவாகனப் பேரரசு கி.பி.225இல் வீழ்ச்சியுற்றது. அதற்குப் பின்னர்க் காஞ்சிபுரத்தில் பல்லவரே முழு ஆட்சிப் பொறுப்பையும் சுமார் கி.பி. 250 அளவில் ஏற்றுக்கொண்டனர். நாளடைவில் அவர்களுடைய ஆட்சியானது காஞ்சிபுரத்திலிருந்து கிருஷ்ணாநதி வரை விரிவடைய ஆரம்பித்தது. பல்லவர்கள் சாதவாகனருடன் தொடர்பு கொண்டிருந்ததால், சாதவாகனரின் மொழியாகிய பிராகிருத மொழியிலேயே தொடக்க காலத்தில் பட்டயங்களை வெளியிட்டனர். இப்பட்டயங்கள் மயிதவொளு, ஹீரஹதஹள்ளி என்னும் ஊர்களில் கிடைக்கப்பெற்றன.

இப்பட்டயங்கள் வரலாற்று உண்மைகளை அவ்வளவாகத் தரவில்லை. ஆகையால், இவைகளைக் கொண்டு அக்காலத்துப் பல்லவ மன்னர்களைப் பற்றியும், அரசியல் பண்பாட்டு நிலைகளைப் பற்றியும் அவ்வளவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும் பப்பதேவன், சிம்ம வர்மன், சிவஸ்கந்தவர்மன், விஷ்ணுகோபன் என்போர் முற்காலப் பல்லவர் என்று கூறப்படுகின்றனர். இவர்களுள் சிவஸ்கந்தவர்மன் முக்கியமானவன்.

முற்காலப் பல்லவர்களில் பப்பதேவன், சிவகந்தவர்மன், விசய கந்தவர்மன், இளவரசன் புத்தவர்மன், புத்யங்குரன் ஆகிய ஐவரது பெயர்கள் மயித ஹோலு, ஹீரஹதகல்லி, குணபதேய என்ற மூன்று இடங்களில் கிடைத்தப் பட்டயங்களின் மூலம் வெளிப்பட்டன. இவர்கள் காலத்தில் ஆந்திரப் பகுதியும் தொண்டை நாட்டின் வடபகுதியும் பல்லவ நாடாக விளங்கின.

பப்பதேவன்:

பப்பதேவன் என்பது முற்காலப் பல்லவர் மன்னர்களில் முதல் மன்னனின் காரணப்பெயராகும். இவனுடைய உண்மையான பெயர் தெரியவில்லை. இவன் சிவகந்தவர்மன் என்ற பல்லவ மன்னன் வெளியிட்ட பட்டயம் ஒன்றில் சில்லரேகக் கொடுங்கா என்னும் ஊரை சிலருக்கு தானம் கொடுத்ததாக உள்ளது. இந்த ஊர் சாதவாகன ராட்டிரம் பகுதியில் உள்ளதால் இவனாட்சியில் பல்லவர்கள் தமிழகத்துக்கு வரவில்லை என்று அறியலாம். பல்லவ மன்னர்களுள் காஞ்சியை தலைநகராக முதலில் கொண்ட பேரரசன் பப்பதேவனின் மகனான சிவகந்தவர்மன் என்பவனே.

மூலம் - சர்கார் என்பவர் வெளியிட்ட நூலில் பப்பதேவன் பற்றி இன்னும் விரிவாக சில குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. அவைகள் பின்வருமாறு.

1. பப்பதேவனின் மகனான சிவகந்தவர்மன் காலம் பொ.பி 300 - 325 என்று கொள்ளத்தக்க சான்றுகள் உள்ளன

2. இவன் வெளியிட்ட பட்டயத்தின் உரை பிராகிருதம் என்ற மொழியிலுள்ளது.

3. வட மன்னர்களான குசானர்களை பின்பற்றி நாலாம் நூற்றாண்டு குப்தர்கள் தங்களை மகாராசாதிராசர் எனக்கூறிக்கொண்டதைப் போல் இவனும் தன்னைக் கூறிக் கொண்டமைக்கான சான்றுகள் காணக் கிடைக்கின்றன.

4. இவனுக்கு பின் வந்த பல்லவர்களான விட்னுகோபன் சமுத்திரகுப்தனுடன் பொ.பி 350ல் போரிட்டனர்.

இதனால் இந்த பப்பதேவன் ஆட்சிக்காலம் இவனுக்கு சற்று முந்திய ஆண்டுக்காலங்களே ஆகும் என்பதைத் தெளிவுடன் காணமுடிகிறது.

சிவகந்தவர்மன்:

சிவகந்தவர்மன் என்பவன் முற்காலப் பல்லவர் மன்னர்களுள் அறியப்படும் இரண்டாம் பல்லவ மன்னனாவான். முற்காலப்பல்லவர்களில் முதலாமானவனின் பெயர் தெரியவில்லை. அவனுடைய மகனே இந்த சிவகந்தவர்மன். இவனின் பெயர் முற்காலப் பல்லவர்கள் வெளியிட்ட பிராகிருத மொழியில் காணப்படுகிறது.

பாரத்வாச கோத்திரம்:

இவன் தன்னையும் தன் முன்னோரையும் பாரத்துவாசர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டான். இவன் இளவரசனாக பதவியேற்று பத்தாம் வருடத்தில் விரிபரம் என்னும் சிற்றூரை இரண்டு பிராமணர்களுக்கு தானம் கொடுத்தவன். இதற்கான பட்டயச்சான்றும் உளது. அதன்படி இப்பட்டயத்தை காஞ்சியில் வெளியிட்டான். அதை ஆந்திர நாட்டின் பல்லவர் பகுதியை ஆண்ட சிற்றரசனுக்கு அனுப்பியுள்ளான்.

அரசர்கெல்லாம் அரசன்:

இவன் வெளியிட்ட மற்றொரு பட்டயம் ஒன்றில் இவன் மகாராசாதிராசன் எனவும் அசுவமேதம், அக்னிட்ட ஓமம், வாஜபேயம் போன்ற யாகங்களை செய்தவன் என்று குறிப்பிடப்படுகிறான். ஹிரதவல்லி என்ற தெலுங்கு நாட்டைச் சேர்ந்த ஊரில் வெளியிடப்பட்ட இப்பட்டயத்தில் தன் தந்தையான பப்பதேவன் எனக் குறிப்பிடப்படும் பெயர் தெரியாத பல்லவ அரசனன் சில்லரேகக் கொடுங்கா என்னும் ஊரை சிலருக்கு தானம் கொடுத்ததை உறுதிப்படுத்தக் கொடுத்ததாக உள்ளது. இது இவன் எட்டாம் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்டது.

இவன் பேரரசன் என்று கொள்ளத்தக்க சான்றுகள்:

(1)    இவன் அசுவமேத யாகம் செய்தது.

(2)    இவனின் தந்தை காஞ்சியில் எந்த பட்டயமும் வெளியிடவில்லை. மேலும் ஒரு பட்டயத்தில் இவனுக்கு கீழ் அடங்கிய தெலுங்கு நாட்டு அரசனுக்கு அனுப்பப்பட்டுளதாக உள்ளது. அதன்படி இவன் தன் அரசை தெலுங்கு நாட்டிலிருந்து காஞ்சி வரையிலும் விரிவாக்கியவன் என்றும் காஞ்சியை தலைநகராகக் முதலில் கொண்ட பேரரசன் என்றும் அறியலாம். இதை வைத்து இவன் பேரரசனாக ஆண்டவன் என்று தெளிவு பெற முடிகிறது.

(3)    சாதவாகண ராட்டிர வெற்றி : இவன் காலத்தில் சாதவாகணர் ஆண்ட பகுதிகளை இக்குவாகர் மற்றும் பிருகத்பலாயணர் என்னும் மன்னர்கள் அடுத்தடுத்து ஆண்டனர். அவர்களின் ஆட்சிக்காலத்தில் பல்லவர்கள் அந்நாட்டின் தெற்கு மாகாணத்தை ஆண்டனர். பல்லவர்கள் இவர்கள் இருவரையும் தோற்கடித்தனர். இவனது காலத்திலே இது நடந்ததைக் கொண்டும் இவன் தன் கீழடங்கிய ஆந்திர சிற்றரசனுக்கு ஆணைப் பட்டயம் வழங்கியதைக் கொண்டும் இவனே இக்குவாகரையும் பிருகத்பலாயணரையும் வெற்றி கொண்டான் என்பது தெளிவு.

இவனது ஆட்சிக் காலம்:

மூலம் - சர்கார் என்பவர் வெளியிட்ட நூலில் இருந்து இவனைப் பற்றிக் கிடைத்தக் குறிப்புகள்

(i)    இவனது காலம் பொ.பி. 300 - 325 என்று கொள்ளத்தக்க சான்றுகள்

(ii)    இவன் வெளியிட்ட பட்டயத்தின் உரை பிராகிருதம் என்ற மொழியிலுள்ளது.

(iii)    வட மன்னர்களான குசானர்களை பின்பற்றி நாலாம் நூற்றாண்டு குப்தர்கள் தங்களை மகாராசாதிராசர் எனக்கூறிக்கொண்டதைப் போல் இவனும் தன்னைக் கூறிக் கொண்டமை.

(iv)    இவனுக்கு பின் வந்த பல்லவர்களான விட்னுகோபன் சமுத்திரகுப்தனுடன் பொ.பி 350ல் போரிட்டனர்.

பின் குறிப்பு : கி. மு, கி. பி என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். இதில் பொ.பி என்பது முதலாம் இலம்பகர்ண அரசு (பொ.பி. 66 - 429) என்பது இலங்கையைச் சேர்ந்த மன்னர்களால் நிறுவப்பட்ட விசயன் அரசு இறுதிக்காலம் முதல், இராசராட்டிரப் பாண்டியர் ஆட்சி தொடங்கும் வரை இருந்த காலமாகும்.

விசய கந்தவர்மன்:

விசய கந்தவர்மன் என்பவன் முற்காலப் பல்லவர் பட்டயங்களில் குறிப்பிடப்படும் பல்லவ மன்னர்களில் மூன்றாமானவன். இவனுக்கும் இவன் முன்னோனான சிவகந்தவர்மன் என்பவனுக்கும் என்ன உறவெனத் தெரியவில்லை. இவன் காலத்தில் இளவரசனாக இருந்தவன் புத்தவர்மன். இந்தப் புத்தவர்மனின் மனைவி கொடுத்த தானத்தை குறிப்பிடும் பட்டயம் ஒன்றில் இந்த விசயகந்தவர்மன் பெயர் காணப்படுகிறது. இவனைப் பற்றி பெரிதாக வேறு எந்தக் குறிப்புகளும் காணக் கிடைக்கவில்லை.

இளவரசன் புத்தவர்மன்:

இளவரசன் புத்தவர்மன் என்பவன் முற்காலப் பல்லவர் பட்டயங்களில் குறிப்பிடப்படும் பல்லவர்களில் நாலாமானவன். இவனுக்கும் இவன் காலத்தில் மன்னனாக இருந்த விசய கந்தவர்மன் என்பவனுக்கும் என்ன உறவெனத் தெரியவில்லை. இவனின் மனைவி சாருதேவி. மகன் புத்யங்குரன். சாருதேவி கொடுத்த தாலுரா நாராயணன் கோயில் தானத்தை குறிப்பிடும் பட்டயம் ஒன்றில் இந்த புத்தவர்மன் பெயர் காணப்படுகிறது. இவனைப் பற்றியும் பெரிதாக வேறு எந்தக் குறிப்புகளும் காணக் கிடைக்கவில்லை.

இடைக்காலப் பல்லவர்கள்:

இடைக்காலப் பல்லவர்களின் காலம் கி.பி. 340 முதல் கி.பி. 615 வரை நீண்டது. அவர்களில் கீழ்க்கண்டவர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள் ஆவர்.

(1)    முதலாம் குமாரவிட்ணு
(2)    முதலாம் கந்தவர்மன்
(3)    வீரகூர்ச்சவர்மன்
(4)    கந்தசிஷ்யன் எனப்பட்டஇரண்டாம் கந்தவர்மன்
(5)    இளவரசன் விட்ணுகோபன்
(6)    புத்தவர்மனாகிய இரண்டாம் குமாரவிட்ணு
(7)    இரண்டாம் சிம்மவர்மன்
(8)    மூன்றாம் கந்தவர்மன்
(9)    மூன்றாம் குமாரவிட்ணு

என மேற்கண்ட பேர்களின் விவரங்கள் கிடைக்கின்றன.

1.    முதலாம் குமாரவிட்ணு

முதலாம் குமாரவிட்னு என்பவன் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர் மன்னர்களுள் ஒருவன். இவனது காலம் பற்றி போதிய ஆதாரங்கள் இல்லை எனினும் இவன் பல்லவர் மரபினுள் ஐந்தாம் ஆனவன் என்றும் இவனது சோழதேசப் படையெடுப்பின் காலத்திலேயே காஞ்சி சோழர்களின் ஆட்சியிலிருந்து பல்லவர் ஆட்சிக்கு மாறியது என்று ஆராய்சியாளர்கள் கூறுவதைக் கொண்டும் இவனது காலம் பொ.பி. 250 - 350களுக்குள் அடங்கிடும் என்பதை அறியலாம்.

2.    முதலாம் கந்தவர்மன்

முதலாம் கந்தவர்மன் என்பவன் இடைக்காலப் பல்லவர்களுள் ஒருவன். இவனது பேரனான இரண்டாம் கந்தவர்மனின் ஆட்சிக்காலம் கி.பி. 400 ல் ஆரம்பிப்பதாலும் இவனது தந்தையான முதலாம் குமாரவிட்ணுவின் காலம் நாலாம் நூற்றாண்டின் மத்தியப்பகுதி எனத் தெரிவதாலும் இந்த முதலாம் கந்தவர்மனின் காலம் தோராயமாக கி.பி. 350 - 375 எனக் கொள்ள முடியும். இவனைப் பற்றிப் பெரிதாக சொல்வதற்கு இல்லை.

3.    வீரகூர்ச்சவர்மன்

வீர வர்மன் அல்லது வீரகூர்ச்சவர்மன் என்பவன் இடைக்காலப் பல்லவர்களுள் ஒருவன். இவனது மகனான இரண்டாம் கந்தவர்மனின் ஆட்சிக்காலம் கி.பி. 400ல் ஆரம்பிப்பதாலும் இவனது பாட்டனான முதலாம் குமாரவிட்ணுவின் காலம் நாலாம் நூற்றாண்டின் மத்தியப்பகுதி எனத் தெரிவதாலும் இந்த முதலாம் கந்தவர்மனின் காலம் துவராயமாக கி.பி. 375-400 எனக் கொள்ள முடியும். இவனைப் பற்றியும் வரலாற்றில் பெரிதாக எந்தத் தகவல்களும் இல்லை.

4.    இரண்டாம் கந்தவர்மன்

கந்தசிஷ்யன் எனப்பட்ட இரண்டாம் கந்தவர்மன் என்பவன் இடைக்காலப் பல்லவர்களுள் ஒருவன். இவனது முதல் மகனான சிம்மவர்மனின் ஆட்சிக்காலம் கி.பி. 436ல் ஆரம்பிப்பதாலும் இந்த இரண்டாம் கந்தவர்மனிப் பற்றிய பட்டயம் இவன் 33 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் என்று தெரிவிப்பதாலும் இவன் தோராயமாக கி.பி.400 - 436 வரை ஆண்டதாகக் கொள்ள முடியும். இவனுக்கு முதலாம் சிம்மவர்மன், இரண்டாம் விட்ணுகோபன், இரண்டாம் குமாரவிட்ணு என்று மூன்று மகன்கள் இருந்தனர். இம்மூவரின் கீழ் வந்தவர்கள் மாறி மாறி காஞ்சியை ஆண்டதால் இவனுக்கு பின் வந்த மன்னர்களின் வரிசை மற்றும் காலத்தை கணிப்பதில் பல சிக்கல்கள் உள்ளதாக வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.

5.    இளவரசன் விட்ணுகோபன்

இளவரசன் விட்ணுகோபன் என்பவன் இடைக்காலப் பல்லவர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக் காலம் மிகக் குறுகியதே. இவனது காலத்தில் இவன் பெரிதாக எதையும் செய்யவில்லை. இவனைப் பற்றிய தகவல்களும் பெரிதாகக் காணக் கிடைக்க வில்லை.

6.    இரண்டாம் குமாரவிட்ணு

புத்தவர்மனாகிய இரண்டாம் குமாரவிட்ணு என்பவன் இடைக்காலப் பல்லவர்களுள் ஒருவன். இவனது தந்தையான இரண்டாம் கந்தவர்மன் என்ற கந்தசிஷ்யன் வாகாடக அரசனாகக் கருதப்படும் சத்தியசேனனிடமிருந்து காஞ்சி அருகிலுள்ள பெரியகடிகாவை மீட்டான் என்றும் அதற்குப்பின் காஞ்சியை குமாரவிட்ணு என்ற இந்த பல்லவன் ஆண்டான் என்பது பட்டயத் தகவல் என்பதாலும் இவனது காலம் ஏறக்குறைய இவனது சகோதரர்களான முதலாம் சிம்மவர்மன் மற்றும் இரண்டாம் விட்ணுகோபன் காலமான கி.பி. 436-460 எனக் கொள்ளலாம்.

7.    இரண்டாம் சிம்மவர்மன்

இரண்டாம் சிம்மவர்மன் என்பவன் இடைக்கால பல்லவர் மன்னர்களுள் ஒருவன். நாலாம் பல்லவர் கதம்பர் போரின் போது திருப்பர்வதத்தை ஆண்ட மரபினருள் முதல்வன் முதலாம் கிருட்ணவர்மன். இவன் காகுத்த வர்மன் மகனாவான். இந்த கிருட்ணவர்மன் காஞ்சி அரசனிடம் படு தோல்வியடைந்தான். அந்த காஞ்சி மன்னன் இவனாகவே இருக்கக்கூடும் என்பது வரலாற்றாளர்கள் கணிப்பு. அதனால் இவனது காலம் ஐந்தாம் நூற்றாண்டின் முக்கால் பகுதியான கி.பி. 475 ல் இருந்தது எனக் கொள்ளலாம்.

8.    மூன்றாம் கந்தவர்மன்

மூன்றாம் கந்தவர்மன் என்பவன் இடைக்காலப் பல்லவர்களுள் ஒருவன். இவனது தந்தையான முதலாம் சிம்மவர்மன் காலம் கி.பி. 436-458 என்பதாலும், சிம்மவர்மன் மற்றும் கந்தவர்மன் என்ற இரு பல்லவ அரசர்களால் நான் அரசகட்டில் ஏறினேன் என்று ஐந்தாம் நூற்றாண்டு மத்தியில் வாழ்ந்த கங்கர் அரசனான இரண்டாம் மாதவன் கூறுவதாலும் இவனுடைய காலம் கிபி.460-475 என்று ஆராய்ச்சியாளர்கள் கொள்கின்றனர்.

9.    மூன்றாம் குமாரவிட்ணு

மூன்றாம் குமாரவிட்ணு என்பவன் இடைக்காலப் பல்லவர்களுள் ஒருவன். இவனது பெரிய தந்தையர்கள் வழி அண்ணன்களான முதலாம் நந்திவர்மன் மற்றும் மூன்றாம் விட்ணுகோபன் ஆகியோரின் காலத்தைக் கொண்டு இவனது காலமும் ஆறாம் நூற்றாண்டின் முக்கால் பகுதியில் அமைந்ததாகக் கொள்ளலாம்.

பிற்காலப் பல்லவர்கள் மரபு:

பல்லவர் மரபில் பிற்காலப் பல்லவர்களே அதிகம் சிறப்பைப் பெற்றவர்கள்.

பிற்காலப் பல்லவர்களில் சிம்மவிஷ்ணுவின் மரபில் வந்த முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன், இரண்டாம் மகேந்திரவர்மன், பரமேசுவரவர்மன், இரண்டாம் நரசிம்மவர்மன், அவன் மகன் மூன்றாம் மகேந்திரவர்மன் என ஒரு மரபு நீள்கிறது. பிற்காலப் பல்லவர்களின் பிந்தைய தலைமுறையினரில் பரமேசுவரவர்மனும், இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்மனும் சிறப்புற்ற மன்னர்களாவர். இவர்கள் காலத்தில் தான் இன்றும் நிலைத்திருக்கும் மாமல்லபுரத்துக் கலைச் செல்வங்கள் உருவாக்கப்பட்டன. இவர்களைப் பற்றி கல்வெட்டுகளில் இருந்து கிடைத்துள்ள சில குறிப்புகளைக் காண்போம் வாருங்கள்.

1.    சிம்மவிஷ்ணு

சிம்மவிஷ்ணு அல்லது அவனிசிம்மன் ஓரு பல்லவ அரசன் ஆவான். மூன்றாம் சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு களப்பிரரின் ஆட்சியை வீழ்த்தி மீண்டும் பல்லவர் ஆட்சியை தொண்டை மண்டலத்தில் நிறுவினான். காஞ்சிக்கு தெற்கிலும் தன் இராச்சியத்தை விரிவு படுத்திய முதல் பல்லவ ஆரசன் சிம்மவிஷ்ணு ஆவான். சிம்மவிஷ்ணுவின் ஆட்சி காலத்திற்குட்பட்ட கல்வெட்டுகளோ செப்பேடு சாசனங்களோ கிடைக்கப்பெறாத நிலையில், அவனுக்குபின் ஆண்ட பல்லவர்களின் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடு சாசனங்கள் மூலமே இம்மன்னனை பற்றி அறிய முடிகின்றது. சிம்மவிஷ்ணுவின் மகனான மகேந்திரவர்மன் இயற்றிய மட்டவிலாசப் பிரஹசனம் என்னும் சமஸ்கிருத நாடகத்தில் சிம்மவிஷ்ணு பல நாடுகளை வெற்றிக்கொண்ட பேரரசனாய் சித்தரிக்கப்பட்டுள்ளான்.

ஆட்சிக்காலம்

சிம்மவிஷ்ணுவின் ஆட்சிக்காலம் இதுவரை உறுதியாய் அறியப்படவில்லை. சமீபகால சாசன ஆராய்ச்சிகள் இக்காலம் கி.பி. 537 முதல் 570 வரையெனச் சான்றுறைக்கின்றன. சிம்மவிஷ்ணுவின் ஆட்சிக்காலம் கி.பி. 575 முதல் 615 வரையென ஒரு சாரர் கருதுகின்றனர்.

இராச்சிய விரிவாக்கம்

சிம்மவிஷ்ணு முடியேற்ற காலத்தில் பல்லவ இராச்சியம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது. தென்னிந்திய தீபகர்ப்பம் ஐந்து சாம்ராச்சியங்களாய் ஆளப்பெற்றது. தமிழ்நாடு மற்றும் இலங்கை பகுதிகள் பல்லவர் சோழர் பாண்டியர்களாலும், கேரளம் சேரர்களாலும், கர்நாடகம் சாளுக்கியர்களாலும் ஆளப்பட்டன. ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் சிம்மவிஷ்ணு சோழர், சேரர், பாண்டியர்களை ஒடுக்கி காஞ்சியை தலைநகராய்க் கொண்டு பல்லவ இராச்சியத்தை பரப்பினான். இதன் பின்னர் அமைந்த பல்லவ வம்சாவளியே பிற்காலப் பல்லவர் என அறியப்படுகின்றனர். இரு நூற்றாண்டுகள் நீடித்த, பலப்போர்களுக்கு காரணமான பல்லவ-சாளுக்கிய பகைமை தொடங்கியதும் சிம்மவிஷ்ணுவின் காலத்தில்தான்.

சமயச் சார்பு

சிம்மவிஷ்ணு விஷ்ணு பக்தனாவான், அதனின் அவன் வைணவத்தை பின்பற்றினான் என அறியலாம். இது குறிப்பிடத்தக்கது ஏனெனில் இவன் மகன் மகேந்திரவர்மன் முதலில் சமண மதத்தை பின்பற்றி பின்னரே சைவத்திற்கு மாற்றப்பட்டான். மகாபலிபுரத்தில் உள்ள ஆதிவராகர் குடைவறைக் கோவிலில் சிம்மவிஷ்ணுவின் சிற்பத்தை காணலாம்.

முடித்தொடர்ச்சி

சிம்மவிஷ்ணுவிற்குப் பின் அவன் மகனும் புகழ்ப்பெற்ற பல்லவ அரசர்களில் ஒருவனுமான மகேந்திரவர்மன் முடியேற்றான்.

2.    முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்

மகேந்திரவர்மன் (கி.பி. 600 முதல் 630 வரை) தமிழ்நாட்டின் வடபகுதிகளை ஆண்ட பல்லவ அரசனாவான். இவனே வரலாற்றாளர்களால் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் எனக் குறிப்பிடப்படுகிறான். இவன் களப்பிரரை ஒடுக்கி மீண்டும் பல்லவ அரசை நிறுவிய சிம்மவிட்டுணுவின் மகனாவான். இவனது ஆட்சிக்காலத்தில் தான் சாளுக்கிய பேரரசன் இரண்டாம் புலிகேசி காஞ்சியின் மீது படையெடுத்தான். புலிகேசியால் காஞ்சி முற்றுகையிடப்பட்டு பல்லவப் படைகள் தோற்கடிக்கப்பட்டது. அந்நிலையில் பல்லவர்களின் எழுச்சி ஒரு கேள்விக் குறியாகவே இருந்தது. புலிகேசி ஆரம்பக் காலத்தில் பல்லவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினான்.

மற்றபடி முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் கி.பி 630 வரை ஆட்சியிலிருந்தான் என்பதில் கருத்தொற்றுமை இருந்தபோதிலும் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆண்டு எது என்பதில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. ஆய்வாளர்கள் இவ்வாண்டை கி.பி 600, 610, 615 எனப் பலவாறாகக் குறிப்பிடுகின்றனர்.

மகேந்திரவர்மன் இலக்கியம் மற்றும் கட்டிடக்கலைகளைப் போற்றியதோடு அவை வளரவும் வழி செய்தான். புகழ் பெற்ற குடைவரைக் கோயில் கலையின் முன்னோடி இவ்வரசனே. மகேந்திரவர்மன் தான் கட்டிய மண்டகப்பட்டு குடைவறைக் கோவிலின் கல்வெட்டில் மரம், செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையின்றி இக்கோவிலைக் கட்டியதாக அறிவித்துள்ளான். மகேந்திரவர்மனின் சிறந்த குடைவறைக் கோவில்களில் சிலவற்றை மகாபலிபுரத்தில் காணலாம்.

மத்தவிலாச பிரஹசனம் என்னும் சமஸ்கிருத நாடகத்தையும் இவன் இயற்றியுள்ளான், இது சைவ மற்றும் பௌத்த துறவிகளை மையமாய்க் கொண்ட ஒரு நகைச்சுவை நாடகமாகும்.

மகேந்திரவர்மன் இடையில் சமண மதத்தைத் தழுவியிருந்தான், பின்னர் சைவ நாயன்மார்களில் ஒருவரான அப்பரால் தன்நோய்த் தீர்க்கப்பெற்று மீண்டும் சைவ சமயத்திற்கு மாறினான்னென்று அறிகின்றோம். மகேந்திரவர்மனையடுத்து பல்லவ அரசர்களில் மிகப்புகழ்பெற்றவனும் மகேந்திரவர்மனின் மகனுமான நரசிம்மவர்மன் அரியணையேறினான்.

3.    முதலாம் நரசிம்ம பல்லவன்

புகழ் பெற்ற பல்லவ மன்னனான மகேந்திர வர்மனுக்குப் பின்னர் அவன் மகன் நரசிம்மவர்மன் (கி.பி 630 - 668) என்னும் பெயருடன் ஆட்சிக்கு வந்தான். காஞ்சிப் பல்லவ மன்னர்களுள் பல வழிகளிலும் சிறப்புப் பெற்றவனாகப் போற்றப்படுபவன் இவனாவான். இவரது காலத்திலேயே பல்லவர் குலம் மிகவும் சிறப்புற்று விளங்கியது. இவரது ஆட்சி காலத்தில் பல்லவ இராட்சியம் வடக்கில் கிருஷ்ணா ஆறு முதல் தெற்கில் மதுரை வரை பறந்து காணப்பட்டது. நரசிம்ம பல்லவரின் ஆட்சி காலத்திலேயே அப்பர்,திருஞானசம்பந்தர்,சிறுதொண்டர் போன்ற சைவ நாயன்மார்கள் வாழ்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகின்றன. அக்காலத்தில் பல்லவர்களின் எதிரிகளாக விளங்கிய சாளுக்கியரை வெற்றிகொண்டு அவர்கள் வீழ்ச்சிக்குக் காரணமாக விளங்கியவன் இவன். இவன் சிறந்த மல்யுத்த வீரனாய் திகழ்ந்ததால் மாமல்லன் என்ற பட்டம் பெற்றான். இவன் நினைவாகவே மாமல்லபுரம் என்ற துறைமுக நகரம் ஏற்படுத்தப்பட்டது. அரசியல், கலை போன்ற துறைகளில் இவனது சாதனைகள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை.

சாளுக்கியர்களுடன் போர்:-

மகேந்த்ரவர்மனின் ஆட்சி காலத்தில் சாளுக்ய அரசனான புலிகேசி காஞ்சி மீது படையெடுத்து ,காஞ்சி நகரை முற்றுகையிட்டான். இப்போரில் மகேந்திரவர்மன் இறக்க நேரிட்டது. இதற்கு பழி வாங்கும் முகமாக அவரது மகன் நரசிம்மவர்மன் கி.பி.642ல் வாதாபி நகர் மீது படையெடுத்தான். இப்படையில் ஒரு லட்சம் காலாட்வீரர்களும், ஐம்பதாயிரம் குதிரை வீரர்களும், பன்னிரெண்டாயிரம் யானைகளும் இருந்ததாக கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் கூறப்படுகின்றன. இம்மாபெரும் படையெடுப்பை படைத்தளபதி பரஞ்சோதி முன் நின்று நடத்தி வாதாபி நகரை எரித்து பல்லவ குலத்திற்கு ஏற்பட்ட அவமானத்தை போக்கினர். இந்த வெற்றிக்குப் பிறகு நரசிம்மவர்மன் வாதாபிக்கொண்டான் என்ற பெயரால் அழைக்கப்பட்டான். படைத்தளபதி பரஞ்சோதி பிற்பாடு 63 நாயன்மார்களில் ஒருத்தராக மாறி சைவத்திற்கு அரும்பணி புரிந்தார்.

முதலாம் நரசிம்ம பல்லவன் காலம் தமிழக வரலாற்றில் ஒரு பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. இவனது காலத்தில் தான் வாணிபமும் பெருகியது. இலங்கை வரையில் தனது செல்வாக்கை நிலை நிறுத்தியவன் இவன்.

4.    இரண்டாம் மகேந்திரவர்மன்

இரண்டாம் மகேந்திரவர்மன் ( Mahendravarman II) என்பவன் பல்லவ மரபைச்சேர்ந்த ஒரு மன்னனாவான். இவன் கி.பி. 668-672 காலகட்டத்தில் தென் இந்தியாவை ஆட்சி செய்தவன். இவன் முதலாம் நரசிம்மவர்மனின் மகனாவான். இவனுக்குப்பின் இவனது மகன் முதலாம் பரமேஸ்வரவர்மன் ஆட்சிக்கு வந்தான். இவனது காலத்தில் தமிழ் வரலாற்றில் பெரிதாக ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை.

5.    முதலாம் பரமேஸ்வரவர்மன்

முதலாம் பரமேஸ்வரவர்மன் தென்னிந்தியாவை ஆண்ட பல்லவ மன்னர்களில் ஒருவன் ஆவான். இரண்டாம் மகேந்திரவர்மனுக்குப் பிறகு பல்லவ மன்னனாக முதலாம் பரமேஸ்வரவர்மன் பதவியேற்றான். இம்மன்னனின் பாட்டனார் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் பல்லவர்கள், சாளுக்கியர்களையும், வாதாபி மன்னர்களையும் வென்று தென்னிந்தியாவில் பலம் வாய்ந்த பல்லவர் ஆட்சியை நிருவியிருந்தான். பரமேஸ்வரவர்மன் அரசியல் மற்றும் போர் விவகாரங்களில் தேர்ந்த மன்னனாக இருந்தான். இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருந்த இவன் சிவபெருமானுக்கு பல ஆலயங்கள் எழுப்புவித்தான்.

இம்மன்னனின் ஆட்சிக் காலத்தில் தொடர்ச்சியாக, முதலாம் விக்கிரமாதித்யன் தலைமையிலான சாளுக்கிய படைகளுடன் போர்கள் நடந்த வண்ணம் இருந்தன. முதலாம் விக்கிரமாதித்யன், பரமேஸ்வரவர்மனின் பாட்டனான முதலாம் நரசிம்ம வர்மனுடன் போர்கள் புரிந்தவன், இந்த முதலாம் விக்கிரமாதித்யன் இதர கன்னட மன்னர்கள் மற்றும் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுடன் தோழமை கொண்டிருந்தான். இவனது காலத்திலும் சாளுக்கியர்கள் எனப் பட்ட கன்னட அரசர்கள் தமிழர்களுக்கு பெரும் தலை வலியாக இருந்தனர். எனினும் முதலாம் பரமேஸ்வரவர்மன் அனைத்துப் பகையையும் திறம்படச் சமாளித்தான்.

6.    இரண்டாம் நரசிம்ம பல்லவன்

இராசசிம்மன் என அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்ம பல்லவன் புகழ் பெற்ற பல்லவ மன்னர்களுள் ஒருவன். இவன் பல்லவ நாட்டை 40 ஆண்டு காலம் ஆட்சி புரிந்துள்ளான். சாளுக்கியர்களுடைய தொல்லைகள் குறைந்திருந்த காரணத்தால் இவனுடைய ஆட்சிக்காலத்தின் பெரும்பகுதி அமைதிக் காலமாக விளங்கியது எனலாம். இதனால் சமயம், இலக்கியம், கட்டிடக்கலை முதலிய துறைகளில் ஆக்கப்பணிகள் நடைபெற்றன.

இரண்டாம் நரசிம்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்ட மாமல்லபுரத்தின் கோவில் மற்றும் கல்வெட்டுக்கள் மூலமாக இவன் ஒரு சைவன் என்பதை அறியலாம். இதனால் இவன் காலத்தில் சைவசமயம் முனைப்புடன் முன்னேற்றம் கண்டது. பல கோயில்களையும் எழுப்பியுள்ளான். சமஸ்கிருத இலக்கிய, இலக்கண வளர்ச்சியில் இராசசிம்மன் பெரிதும் அக்கறை காட்டியதாகத் தெரிகின்றது. சமஸ்கிருதப் புலவர்களை இவன் ஆதரித்துவந்தான். மாமல்லபுரக் கடற்கரையில் அமைந்துள்ள, கடற்கரைக் கோயில்கள் என அறியப்படுகின்ற கோயில்கள் இராசசிம்மனால் கட்டுவிக்கப்பட்டவையே. இரண்டாம் நரசிம்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்ட மாமல்லபுரம் கோவில், எழில் மிகுந்த சிற்பங்களுடன்கூடிய புகழ் பெற்ற கைலாசநாதர் கோயிலும் இவன் திருப்பணியே ஆகும். இவனது ஆட்சியின் இறுதிக்காலத்தில் சாளுக்கியரினால் மீண்டும் தொல்லைகள் ஆரம்பித்தன. அவர்களுடன் ஏற்பட்ட போரில் தனது மூத்த மகனை இழந்தான். இதன் பின் சிறிது காலத்தில் இராஜசிம்மனும் இறந்தான். இதற்கு மேலும் பல்லவ சாம்ராஜ்யம் கி.பி 890 வரையில் தொடர்ந்தது. பின்னர் பாண்டியர்களால் அழிவுற்றது.