பரசுராமப் படலம் - 1397

bookmark

கேகய நாட்டை அடைதல்

1397.    

உளை விரி புரவித் தேர் உதாசித்து எனும்
வளை முரல் தானையான் மருங்கு போதப் போய்.
இளையவன் தன்னொடும். ஏழு நாளிடை.
நளிர் புனல் கேகய நாடு நண்ணினான்.
 
உளை  விரி  புரவித்  தேர்- பிடரி  மயிர்கள் பரந்த குதிரைகள்
பூட்டிய    தேரில்;    உதாசித்து   எனும்   -   உதாசித்து   என்று
சிறப்பிக்கப்படுகிற;  வளைமுரல்  தானையான்  - சங்குகள்  முழங்கும்
சேனைக்   குடையவன்;   மருங்கு   போத  -  தன்  அருகில்  வர;
இளையவன்    தன்னொடும்    போய்    -    தன்    தம்பியான
சத்துருக்கனனோடும் சென்று;  ஏழு நாளிடை நளிர்புனல் கேகய நாடு
நண்ணினான்  -  ஏழு  நாட்களிலே  தண்ணிய நீர்வளம் மிக்க கேகய
நாட்டையடைந்தான் (பரதன்).

அழைப்பு.   பரதனுக்கேயாயினும் சத்துருக்கனனும்  அழையாமலேயே
உடன்  சென்றது.  அடியார்க்கு   அடியன்   ஆகும்.  சத்துருக்கனனின்
திறம்   உணர்த்தும்.   பரதனும்    சத்ருக்கனனும்   வடிவும்   நிழலும்
போல்வர். ஆதலின் பரதனுடன் பிரியாமற்  செல்லல்  சத்துருக்கனனுக்கு
நேர்ந்தது.  இருவரும்  இணை  பிரியாதவர்   என்பதனை.   “பரதனும்
இளவலும்  ஒரு  நொடி  பகிரா வரதனும் இளவலும்  என  மருவினரே”
(கம்ப.  307)  என  முன்னும்   உரைத்தார்.  இலக்குவன்”  பகவானுக்கு
அடிமை”   எனும்  பண்புச்   சிறப்பை   விளக்கவும்.   சத்துருக்கனன்.
“பாகவதர்க்கு   அடிமை”  எனும்   பன்புச்   சிறப்பினை   விளக்கவும்
படைக்கப்பட்ட  பாத்திரங்கள்   எனவும்  பிரபந்தப்  பேருரையாளர்கள்
விளக்குவர்.                                                49