பரசுராமப் படலம் - 1396
பரதன் கேகய நாடு செல்லுதல்
பரதன் கேயகம் செல்லல்
1396.
ஏவலும். இறைஞ்சிப் போய். இராமன் சேவடிப்
பூவினைச் சென்னியில் புனைந்து. போயினான்-
ஆவி அங்கு அவன் அலது இல்லை ஆதலான்.
ஓவல் இல் உயிர் பிரிந்து உடல் சென்றென்னவே.
ஏவலும் - (சக்கரவர்த்தியாகிய தந்தை) (இவ்வாறு) கட்டளையிட்ட
பொழுதில்; இறைஞ்சிப் போய் - (பரதன் தந்தையை) வணங்கிச்
சென்று; இராமன் சேவடிப் பூவினை - இராமபிரானது சிவந்த
திருவடி மலர்களை; சென்னியில் புனைந்து - தன் திருமுடியிலே
தரித்து (வணங்கி);அங்கு அவன் அலது ஆவி இல்லை ஆதலால் -
அவ்விடம் உள்ள அந்த இராமபிரானையல்லாமல் (தனக்கு) வேறு
உயிர் இல்லையாகையால்;ஓவல் இல் உயிர் பிரிந்து - (ஒரு பொழுதும்)
நீங்குதல் இல்லாத உயிரைப் பிரிந்து; உடல் சென்று என்ன - உடல்
தனித்துச் சென்றாற் போல; போயினான் - (இராமனை விட்டுப்
பரதன்) புறப்பட்டான்.
உடலைப் பிரிந்து உயிர் செல்லல் இயல்பாயிருக்க. இங்கு உயிரைப்
பிரிந்து உடல் செல்வதைக் காண்க என்கிறார் கவிஞர்பிரான்.
இல்பொருள் உவமையணி. இராமன் பரதனின் உயிர் என்பதனை.
“கானிடைப் போகிய கமலக் கண்ணனைத் தான் உடை உயிரினைத்
தம்பி கண்டனன்” (கம்ப. 10260) எனும் மீட்சிப் படலப் பாடலாலும்
உணரலாம். பக்தர் முடியில் சூடும் பூ எது என்பதனை. “சேவடிப்
பூவினைச் சென்னியில் புனைந்து” என்பதனால் உணர்த்தினார்.
இறைவனும் அடியவரும் உயிரும் உடலும் ஆவர். 48
