பரசுராமப் படலம் - 1391

bookmark

தயரதன் ஆனந்தக் கண்ணீர் சொரிதல்

1391.    

பரிவு அறு சிந்தை. அப் பரசுராமன் கை
வரி சிலை வாங்கி. ஓர் வசையை நல்கிய
ஒருவனைத் தழுவிநின்று. உச்சி மோந்து. தன்
அருவி அம் கண் எனும் கலசம் ஆட்டினான்.
 
பரிவு     அறு  சிந்தை  -  இரக்க  அற்றம்  மனத்தினையுடைய;
அப்பரசுராமன் கை - அந்தப் பரசுராமன் கையில் (இருந்த); வரிசிலை
வாங்கி    - அழகிய  வில்லைத்  தன்கையில் வாங்கிக்  கொண்டு; ஓர்
வசையை    நல்கிய   -   ஒப்பற்றதோர்   பழியினை   அவனுக்குக்
கொடுத்துவிட்ட;   ஒருவனைத்   தழுவி  -  ஒப்புயர்வற்ற  தன்மகன்
இராமனைத்  தழுவி  நின்று;  உச்சி  மோந்து  -  அவனது உச்சியை
(அன்பால்)  மோந்து; தன் அருவி அம் கண் எனும் - அருவி போல்
பெருகுகின்ற   தன்   கண்கள்   என்னும்;  கலசம்  ஆட்டினான்  -
கலசங்களால் நீராட்டினான் (தசரதன்).

வில்லை    வாங்கிக் கொண்டு மாறாகப் பழியினைப் பரசுராமனுக்குக்
கொடுத்தான்  என அணிபெறக் கூறினார். ஒன்றைக்  கொடுத்து  ஒன்றை
மாற்றிக்  கொள்ளுதலை மாற்று நிலையணி என்பர். “உயிர்  கொடுத்துப்
பழிகொண்ட  பித்தா!”  என்பார்  பின்னும்  (கம்ப.   9927).   கலசம் -
ஆகுபெயராய்  அதில்  உள்ள  தீர்த்தத்தைக் குறித்தது.  கலச  நீருக்கு
நீர்  அளவு  உண்டு;  இது.  அருவி  புகுந்த  அளவற்ற  நீர்க்  கலசம்
என்பார்.  “அருவி  அம்  கண்  எனும் கலசம் ஆட்டினான்”  என்றார்.
அருஞ்செயல்   புரிந்த  மகனுக்கு.  தந்தை   ஆனந்தக்   கண்ணினால்
மங்கல  நீராட்டி  மகிழ்ந்தான்  என்க.   “ஐயனே.  அவர்கள்   தாமும்
அன்பும்   தழுவி.   தம்தம்   செய்யதாமரைக்   கண்நீரால்   மஞ்சனத்
தொழிலும் செய்தார்” (கம்ப. 10276) என்பார் வேறிடத்தும்.          43