பரசுராமப் படலம் - 1376

bookmark

1376.    

“சீரிது தேவர்தங்கள்
   சிந்தனை” என்பது உன்னி.
வேரி அம் கமலத்தோனும்.
   இயைவது ஓர் வினயம்தன்னால்
யாரினும் உயர்ந்த மூலத்து
   ஒருவர் ஆம் இருவர்தம்மை.
மூரி வெஞ் சிலை மேல் இட்டு.
   மொய் அமர் மூட்டிவிட்டான்;
 
வேரி  அம்கமலத் தோனும் -   நறுமணம்  கொள்ளும்  அழகிய
தாமரை மலரில் வாழும் நான்முகனும்;‘தேவர் தங்கள் சிந்தனை சீரிது’
-  ‘தேவர்களுடைய  (இவ்வாராய்ச்சி)  எண்ணம்   சிறந்தது;   என்பது
உன்னி -  என்பதை  நினைத்து; இயைவது ஓர் வினயம் தன்னால் -
பொருந்துகின்ற  ஒரு  தந்திரத்தினால்; யாரினும்  உயர்ந்த மூலத்து -
யாரினும்  மேம்பட்ட  காரணநிலையில்;  ஒருவராம்  இருவர்தம்மை -
ஒருவராய்க்  காரிய  நிலையில்   இருவரானவரையும்   (சிவபிரானையும்
திருமாலையும்);  மூரி   வெஞ்சிலை   மேலிட்டு  -  வலிமை  மிக்க
இருவிற்களைக்  காரணமாக  வைத்து; மொய் அமர் மூட்டிவிட்டான் -
வலிய போர் (ஒன்றைப்) புரியுமாறு தூண்டிவிட்டான்.

கம்பர்     பெருமானின் கடவுட்  கோட்பாடு  தெளிவுற  விளங்கும்
இடங்களில்  இப்பாடல் சிவந்தவற்றுள் சிறந்த ஒன்றாகும்.  ஒரே  மூலப்
பரம்பொருள்.  காரியப்படும்போது.   அளிக்கும்  செயலுக்குத்  திருமால்
எனவும்.  அழிக்கும் செயலுக்குச்  சிவபெருமான்  எனவும்  பெயரளவில்
இரண்டாக  வேறுபடுகிறது.  “மூன்று கவடாய்  முளைத்தெழுந்த மூலம்”
(கம்ப. 3682)  என்பதனை இங்குத்  தெளிவுபட  விளக்கியுள்ள    திறம்
காண்க.  பரம்பொருள்  என்பதனை  “யாரினும்  சிறந்த  மூலம்”  என
அழகுற   மொழிப்படுத்தினார்.   “அரன்   அதிகன்.  உலகளந்த  அரி
அதிகன்   என்று   உரைக்கும்   அறிவிலோர்க்குப்   பரகதி   சென்று
அடைதல்    அரிது”    (கம்ப.  4470)    என்பது   கவிஞர்பிரானின்
கருத்தாலின்.    அதனை   உணராது   நான்முகன்    இப்போரினைத்
தொடங்கியது  தக்கது  அன்று  என்பார். “யாரினும்  உயர்ந்த  மூலத்து
ஒருவராம்  இருவர்  தம்மை.  மூரி வெஞ்சிலை  மேலிட்டு  மொய்யமர்
மூட்டிவிட்டான்”  என்றார். “மூட்டுதல் எனும் சொல்  வழக்கு.  இன்றும்
உயர்  வழக்காகாமை  யுணரலாம்.  “பொன் திகழும் மேனிப்   புரிசடை
எம்  புண்ணியனும்.  நின்றுலகம் தாய நெடுமாலும் -  என்றும்  இருவர்
அங்கத்தால்   திரிவரேனும்   ஒருவன்  ஒருவன்  அங்கத்து   என்றும்
உளன்”  தாழ்சடையும்  நீள்  முடியும். ஒண் மழுவும்  சக்கரமும்.  சூழ்
அரவும்  பொன்  நாணும் தோன்றுமால் - சூழும்  திரண்டருவி  பாயும்
திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய்  இசைந்து”   என்னும்
பொய்கையாழ்வார்  (முதல்  திரு.  99.63)  புனித  வாக்குகள்   இங்கு
ஆழ்ந்து   சிந்தித்தற்குரியன.  வேரி  -  மணம்.  மொய்  -   வலிமை.
வினயம் - விரகு. தந்திரம்.                                   28