பரசுராமப் படலம் - 1369

bookmark

1369.    

‘நனி மாதவம் உடையாய்! “இது
   பிடி நீ” என நல்கும்
தனி நாயகம். உலகு ஏழையும்
   உடையாய்! இது தவிராய்;
பனி வார் கடல் புடைசூழ் படி
   நரபாலரை அருளா.
முனிவு ஆறினை; முனிகின்றது
   முறையோ?’ என மொழிவான்.*
 
‘நனி மாதவம் உடையாய்!- ‘மிக்க பெருந்தவம் உடையவனே!; “நீ
இது  பிடி” என - “நீ இந்தப் பூமிதானத்தைப் பிடி” என்று; நல்கும் -
காசிபனுக்குக்  கொடுத்திட்டதால்;   உலகு  ஏழையும்  தனி  நாயகம்
உடையாய்!  -  ஏழு தீவுகளின் வடிவாக உள்ள பூவுலகம்  முழுவதிலும்
(புகழின்)  தனியாட்சி  கொண்டவனே!; இது  தவிராய்!  -  இப்போது.
எம்மேல்  கொண்டுள்ள  கோபத்தைத் தவிர்ப்பாயாக!; பனிவார்  கடல்
புடை  சூழ்  படி  -  குளிர்ந்த நீண்ட கடல் நாற்புறமும்  சூழ்ந்துள்ள
உலகில்   வாழும்;   நரபாலரை   அருளா   -  மக்களைக்  காக்கும்
மன்னர்களாகிய  (எம்  போன்றோர்  மேல்)  அருள்  செய்து; முனிவு
ஆறினை  -  (இனிக்  கொல்வதில்லை  என்று)  கோபந்   தணிந்தாய்;
முனிகின்றது   முறையோ?’    என   மொழிவான்  -   (மீண்டும்
அரசர்களாகிய)  எங்களைச்  சினப்பது   நீதி   முறையாகுமா?’   எனக்
கேட்டு மேலும் கூறுவான் வேந்தன்.

தான்    மன்னரை  வென்று  கொண்ட  நாடுகள்  அனைத்தையும்
துச்சமாக  மதித்த.  காசிபருக்கு.  “இந்தா  பிடி  நீ”  எனக்  கொடுத்த
கொடையால்  வந்த  புகழால். ஏழ் உலகிலும்  இவன்  புகழ் தனியாட்சி
செலுத்திற்று   என்பதாம்.   ஏழுலகையும்   தனியாளும்   உரிமையைப்
பெற்றிருந்தவனே!  என  உடையாய்  எனும்   குறிப்பு   வினைமுற்றை.
இறந்தகாலப்   பொருளில்  விரிக்கினுமாம்.  “இது  பிடி   நீ”  என்றது
கொடுத்த விரைவினைக் குறித்து நின்றது.  “நரபாலரையருளா”  என்றது.
காசிபருக்குத்   தரணியைத்    தானமாக   ஈந்து.  “இனி   மன்னரைக்
கொல்லேன்”  எனத்  தவஞ்  செய்யச்  சைய  மலைக்குச் சென்றபோது
உரைத்ததைக்  குறித்து  நின்றது.  அருளா:   அருளி.   செய்யா எனும்
எச்சம்.  அருள்  புரிந்து   சென்றவர்.  சொன்ன   சொல்லைக்  கடந்து.
சினம்  புரிந்து வருவது நீதியாகாது  என்பான். “அருளா  முனிவாறினை:
முனிகின்றது முறையோ?” என்றான்.                            21