பரசுராமப் படலம் - 1367
தயரதன் அபயம் வேண்டுதல் ((1367-1371))
பரசுராமனிடம் தயரதன் அபயம் வேண்டல்
1367.
அவன் அன்னது பகரும்
அளவையின். மன்னவன் அயர்வான்.
‘புவனம் முழுவதும் வென்று. ஒரு
முனிவற்கு அருள்புரிவாய்!
சிவனும். அயன். அரியும் அலர்;
சிறு மானிடர் பொருளோ?
இவனும். எனது உயிரும். உனது
அபயம். இனி’ என்றான்.
அவன் - அந்தப் பரசுராமன்; அன்னது - அவ்வாறு; பகரும்
அளவையின் - கூறியபொழுதில்; மன்னவன் - தயரதச் சக்கரவர்த்தி;
அயர்வான் - மனந் தளர்வானாய்; புவனம் முழுவதும் வென்று -
‘உலகாளும் மன்னர்கள் அனைவரையும் வென்று; ஒரு முனிவற்கு
அருள்புரிவாய் - ஒப்பற்ற முனிவனாகிய காசியபனுக்குத் தானமாக
அருளியவனே!; சிவனும் அயன். அரியும் அலர் - சிவன். பிரமன்.
திருமால் ஆகிய மூவரும் (உனக்கு ஒரு பொருள்) அல்லர்; சிறு
மானிடர் பொருளோ? - இச்சிறிய மானிடர்கள் உனக்கு ஒரு
பொருள் ஆவரோ? (ஆகார்); ‘இனி இவனும் எனது உயிரும் உனது
அபயம்’ என்றான் - ‘இப்போது. (என் மகனாகிய) இந்த
இராமனும். என்னுடைய உயிரும் உனது அடைக்கலப் பொருள்கள்’
(காத்தருள்) என்றான்.
வீரத்தால் வென்ற உலகம் முழுவதையும் தானமாகக் கொடுத்திட்ட.
நீ. இப்போது எங்கள் உயிர்கள் இரண்டையும் தானமாகத்
தந்தருளவேண்டும் என தசரதன் வேண்டினான். அயர்வான் -
முற்றெச்சம். 19
