பன்னிரெண்டாம் அத்யாயம்
(பிரேதப் பரிசோதனையும் , இயற்கைக்கு புறம்பான மரணங்கள் பற்றியும் அர்த்தசாஸ்திரம் கூறும் கருத்துக்கள் மற்றும் அது போன்ற மரணங்களைக் கையாளும் முறைகள் )
அதித கோபம் சில சமயங்களில் கொலைக்கு காரணமாக முடியும்.
பிரேதப் பரிசோதனை
இயற்கைக்கு மாறாய் திடிரென ஏற்படும் எந்தவொரு மரணத்திலும் உடலில் எண்ணெய் பூசி ( சிராய்ப்பு, வீக்கம் உட்பட இதர காயங்களைக் கண்டறிய) நீதிபதி பிரேதப்பரிசோதனை நடத்த வேண்டும்.
இறந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாய் தெரிந்தால், சாவுக்கான காரணத்தைக் கண்டறிய சோதனை நடத்தப்பட வேண்டும் . சில சமயம் தண்டனை குறித்த அச்சத்தில் இறந்தவரின் தொண்டைப் பகுதியில் ஏதேனும் அடையாளக் குறி ( markings) ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம். ( கீழ்க்கண்ட நான்கு வழிகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் முச்சு தடைபட்டு சாவு நேர்ந்து இருக்கலாம் : கழுத்தை நெரித்தல், தூக்கிடுதல் , மூச்சைத் திணறடித்தல் , மூழ்கடித்தல் .)
கொலை அல்லது இறக்கைக்கு புறம்பான மரணத்துக்கான அறிகுறிகள்:
1. கழுத்தை நெரித்துக் கொள்ளுதல் : மலம், சிறுநீர் வெளிப்பட்டு இருத்தல் , காற்று புகுந்து வயிறு வீக்கமடைதல் , கை , கால் வீங்கிப் போதல் , கண்கள் பிதுங்கியிருத்தல், கழுத்தில் காணப்படும் அடையாளங்கள்.
2. தூக்கில் தொங்குதல்: மேற்கூறிய அடையாளங்களோடு கைகள், தொடைகள் சுருங்கியிருக்கும்.
3. மூழ்கடித்தல் : கண்கள் பிதுங்கி, நாக்கு கடிக்கப்பட்டு இருக்கும் அல்லது வயிற்றில் வீக்கம் காணப்படும்.
4. கம்பு அல்லது கற்களால் அடித்துக் கொல்லுதல் : உடைந்த அல்லது நிலை தவறிய உறுப்புகள், இரத்தம் உறைந்த உடல்.
5. உயரத்தில் இருந்து வீசி எறியப் பட்டதற்கான அடையாளங்கள் : உடலுறுப்புகள் உடைந்து சிதறியிருக்கும்.
6. விஷம் : கைகள், பாதங்கள், பற்கள், நகங்கள் கறுத்திருக்கும். தசை தளர்ந்து ( தலை முடி சருமம் உள்பட ) வாய் நுரை தள்ளிக் காணப்படும்.
7. பாம்பு அல்லது பூச்சிக்கடி : மேற்கூறிய அடையாளங்களுடன், இரத்தம் கொட்டிய கடிவாயும் இருக்கும்.
8. தூக்கத்தை ஏற்படுத்தக் கூடிய குளிகைகளை உண்டு தற்கொலை செய்தல் : ஆடைகள் அலங்கோலமாகி அளவுக்கதிகமான வாந்தியும், பேதியும் இருக்கும்.
9. மூச்சுத் திணறல்: வீங்கிய கை , கால்கள் அல்லது வயிறு, தொப்புள் உப்பியிருக்கும்.
இதர விசாரணைகள்:
விஷத்தால் மரணம் நேர்ந்து இருக்கும் என்ற சந்தேகம் இருந்தால் உணவின் செரிக்காத பகுதிகளைப் பறவைகளுக்குக் கொடுத்துச் சோதிக்கலாம். அப்பகுதிகளைத் தீயில் இட்டால் பல வண்ணங்களுடன் , வெடி போன்ற சப்தமும் எழும். விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்ட உடலைத் தீ இட்டபோது இதயம் ( அல்லது வயிறு) வேகாத நிலையிலும் விஷம் இருப்பது தெரியவரும்.
கொலைக்கான உள்நோக்கங்கள்:
1.திடீரென நிகழும் அத்தனை மரணங்களிலும் கீழ் கண்டவற்றுள் ஏதேனும் ஒன்று கோபத்துக்குக் காரணமாய் இருந்திருக்கும். அதுவே கொலைக்கான உள்நோக்கமாய் உருவெடுக்கும். ஒருவருடைய மனைவி அல்லது உறவினர்களுக்கு எதிரான குற்றம் , தொழில் பொறாமை, எதிரி மீதான வெறுப்பு , வியாபாரப் பிணக்கு பங்குதாரருடன் சண்டை. கொலைக்குப் பின் ஒருவருக்கு விஷமிடுவது அல்லது தூக்கில் தொங்கவிடும் சம்பவங்களில் கீழ்க்கண்டவர்கள் சந்தேகத்திற்கு உரியவர்கள் ஆவார்கள். இறந்தவரின் வசவுக்கும் அடி உதைக்கும் ஆளான வேலைக்காரன்.
2.தன்னுடைய கள்ளத்தொடர்பை மறைக்கும் முயர்ச்சியாய் மித மிஞ்சிய துயரக் குறிகளைக் காட்டும் மனைவி.
3.செல்வம் அல்லது பெண்ணை அடைய பேராசை கொண்ட உறவுக்காரர்
போன்றோர்.
சாட்சிகளை ஆராயும் விதம்:
கொலையுண்டவரின் நெருங்கிய உறவினரிடம் இறந்தவருடைய பணியாட்கள் மூலம் குற்றம் நிகழ்ந்ததா அல்லது பணத்துக்கு ஆசைப்பட்டு திருடர்கள் செய்ததா, வேறு யாரிடமேனும் பகைமை கொண்டவர்கள் தவறாக அடையாளங்கண்டு தவறான நபரைக் கொலை செய்தார்களா என்று விசாரிக்க வேண்டும். இறந்து போனவரை அழைத்துச் சென்றது யார், அவரோடு உடனிருந்தவர்கள் யார், கொலை நடந்த இடத்துக்கு அவரைக் கூட்டிப் போனது யார் என்பதையும் அவர்களிடம் கேட்டறிய வேண்டும். கொலை நடந்த இடத்துக்கு அருகில் உள்ளவர்களிடம் அவர்கள் சந்தேகப்படும் படியாய் யாரையேனும் கண்டார்களா , யாரேனும் ஆயுதத்துடன் மறைந்து இருந்தனரா என்றும் ஆராய்ந்து தகவல் சேகரிக்க வேண்டும்.
அடையாளம் தெரியாத பிணங்களைக் கண்டறிய அர்த்தசாஸ்திரம் சொல்லும் வழிமுறைகள்:
முகம் தெரியாத ஒரு நபரின் இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டால் அவரது ஆடை, ஆபரணங்கள் போன்ற தனிப்பட்ட உடைமைகளைச் சோதிக்க வேண்டும் . அப்பொருள்களை விற்ற கடைக்காரர்களிடம் இறந்தவரை எப்படித் தெரியும் , அப்பகுதியில் அவர் தங்கியிருந்தாரா, அப்படி ஒரு வேலை தங்கி இருந்தால் என்ன காரணத்துக்காக தங்கி இருந்தார், அவருடைய தொழில், கொடுக்கல் வாங்கல் இப்படி விவரங்களைக் கேட்டறியலாம். அவர்களிடம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் விசாரணையை மேலும் தொடரலாம்.
தற்கொலை பற்றி கௌடில்யரின் கருத்துக்கள்:
1.தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவருக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டதா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும். வெறுப்பிலோ கோபத்திலோ தற்கொலை செய்து கொண்ட ஒருவரது உடலுக்கு மதச் சடங்குகளின் படி எரியூட்டுவதோ , மற்றச் சடங்குகள் செய்வதோ கூடாது.
2.இராஜ வீதியில் வெட்டியான் ஒருவன் மூலம் சடலம் இழுத்துச் செல்லப் பட வேண்டும். தற்கொலை செய்து கொண்டவருக்கு ஈமச் சடங்குகள் செய்யும் நபரை அவருடைய உறவுக்காரர்கள் தள்ளி வைத்து விட வேண்டும். தடை செய்யப்பட்ட சடங்குகளைச் செய்யத் துணை நின்றவர்கள் கூட சடங்குகள் செய்யும் உரிமையை , வெகுமதிகள் கொடுப்பதை அல்லது பெறுவதை ஓராண்டுக்கு இழப்பார்கள் . அந்த ஓராண்டு காலத்தில் அவர்கள் யாருக்கும் எதையும் போதிக்கக் கூடாது.
தற்கொலை செய்யத் துடிக்கும் ஜீவன்களுக்கு ( மனிதர்களுக்கு) கௌடிலயர் கூறும் அறிவுரைகள்:
1.ஒவ்வொரு மனிதனும், தான் போன ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணிய கணக்குப்படி தான் இந்த ஜென்மத்தில் பிறவி எடுக்கிறோம். நமக்கு வரும் இன்ப , துன்பங்களும், ஏன் நோய்களும் கூட கரும வினைப் பயன் தான். இந்த ஜென்மத்தில் அக்கரும வினைப் பயன்களை ஏற்றுக் கொள்ள விருப்பம் இல்லை என்று தற்கொலை செய்து கொண்டால் . மீண்டும், மறு ஜென்மம் ஒன்றை அக்கரும வினைகளை அனுபவிக்கும் பொருட்டு பிறப்பு எடுக்கும் படி ஆகும். ஆனால், அதே சமயத்தில் இந்த ஜெனம்த்துக் கணக்குகளை விதிப் படி அனுபவித்து தீர்த்தால் ,புண்ணியத்தை தேடிக் கொள்ள, இந்த ஜென்மம் ஆண்டவனால் அளிக்கப்பட வாய்ப்பு என்று எடுத்துக் கொள்பவர்களுக்கோ மறு ஜென்மம் அற்புதமாக இருக்கும். தவிர, இந்த பூமி நம் எல்லோருக்கும் நன்கு தெரிந்த உலகம், ஆனால் மரணத்திற்குப் பின் நமது ஆத்ம போய்ச் சேரும் உலகமோ எப்படிப் பட்டது என்று யாருக்கும் தெரியாது. தெரிந்த உலகத்திலேயே வாழத் தெரியாதவர்களுக்கு சூட்சுமம் நிறைந்த அந்த மரண உலகில் எப்படி ( ஆத்ம ரூபத்தில் ) வாழ இயலும்? . இந்து மத சாஸ்திரங்கள் சொல்கிறது, ஒருவனுக்கு 120 வயது என்று இருக்கும் பொழுது , அவன் 40 வயதில் தற்கொலை ( ஏதோ ஒரு காரணத்துக்காக) செய்து கொண்டால் . எஞ்சி இருக்கும் 80 கால வாழ்கையை அந்த ஆத்மா பேய் ரூபத்தில் தான் கழித்து வேதனைப் படும், ஒரு காலும் அது வரை தற்கொலை செய்து கொண்ட ஆத்மாவை இறைவன் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்ற கூற்றுக்கு பூராண இதிகாசங்களும் ஆதாரமாக உள்ளது ( எ. கா - மகாபாரதத்தில் வரும் அம்பாவின் கதை )
