நூல் வரலாறு - 10

bookmark

10.

தேவபாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும், முந்திய
நாவினான் உரையின்படி, நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்புஅரோ.
 

தேவ  பாடையின்-தெய்வ மொழி எனப்படுகின்ற    வடமொழியில்;
இக்கதை செய்தவர்-இந்த  இராம  கதையை  இயற்றிய;   மூவரானவர்
தம்முளும்-   வான்மீகி,  வசிட்டர்,  போதாயனர்  ஆகிய    மூவருள்;
முந்திய  நாவினார்  உரையின்படி-முதன்மையாராகியவரும்  வாக்கிற்
சிறந்தவருமாகிய   வான்மீகி   முனிவர்   சொல்லியபடியே;    தமிழ்ப்
பாவினால்-தமிழ்ப்  பாடல்களால்; இது நான் உணர்த்திய    பண்பு-
இந்த இராமாவதாரத்தை நான் சொல்லிய இயல்பாகும்.

வடமொழியில்  இராமபிரான் கதை சொல்லியவர் மூவர்; அவர்களுள்
ஆதிகவி    வான்மீகி   அருளிய  காப்பியத்தின்  வழியாலேயே  கவிச்
சக்கரவர்த்தி    இராமாவதாரக்  காப்பியத்தை நடத்துவதாக இச்செய்யுள்
சொல்லுகிறது. காப்பியக்   கதையின் பொது அமைப்பு ஆதிகாவியத்தின்
வழியதே;  எனினும்,     காப்பியக் கட்டமைப்புச் சீர்மையையும், தமிழ்ப்
பண்பாட்டு  மரபையும்    கருதிக்  கவிச் சக்கரவர்த்தி  பல மாற்றங்கள்
செய்துள்ளார்   என்பதை   மறந்திடுதல்  கூடாது.  ஆதிகவி  விரிவாக
ஓதியதைச்    சுருக்கியும்,    சுருங்கக்    கூறியதை   விரித்தும்,   சில
செய்திகளை  விடுத்தும்   புதியன   சில புகுத்தியும், செய்திகளை இடம்
மாற்றியும்  கம்பர்  தம்  காவியத்தை   இயற்றியுள்ளனர்   என்பதையும்
மனங்கொள்ளவேண்டும்.  (‘எல்லாச் சொல்லும்  பொருள்  குறித்தனவே’
என்பது  தொல்காப்பிய  விதி,   அசைச்   சொல்லாகிய  ‘அரோ’  இக்
குறிப்பினை உணர்த்துவதாகக் கொள்ளலாம்.  ‘அசை’என்பது வெற்றிடம்
நிரப்புவதாக  மட்டும்  கொள்ளலாகாது.  அசைத்தல், கட்டுதல்; கவிதை
வாசித்துச்   சொல்பவனைக்   கட்டி    நிறுத்திச்  சிந்திக்க  வைப்பது
அசைகளின் பொருண்மையுள் ஒன்று.)

வசிட்டர்     இராமபிரானுக்கு வைராக்கிய உபதேசமாகக் கூறிய நூல்
‘யோக வாசிட்டம்’;     அதில்       இராம   சரிதம்   முழுமையாகக்
கூறப்படவில்லை.   போதாயனார்   இராம  காதை  பாடினார்  என்பது
செய்தியளவாகவே   நிற்கிறது.  நூல் கிடைக்கவில்லை. கம்பர் காலத்தில்
பரவியிருந்த   வடமொழி   இராமாயணங்கள்  வான்மீக  இராமாயணம்,
அத்யாத்ம    ராமாயணம்,   சம்பு   ராமாயணம்  என்பனவே  என்பர்.
இவற்றையே   கம்பர்   தம் பாடலில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று
கருதலாம்.    வான்மீகி,    வசிட்டர்,  போதாயனர்  என்ற  பட்டியலில்
வசிட்டருக்குப் பதிலாக வியாசர் பெயரை இணைத்துரைப்பதும் உண்டு.
                                                        10