நாட்டுப் படலம் - 87

bookmark

விழாவும் - வேள்வியும்
 
87.

கூறு பாடலும், குழலின் பாடலும்,
வேறு வேறு நின்று இசைக்கும் வீதிவாய்,
‘ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம்’ என,
சாறும் வேள்வியும் தலைமயங்குமே.
 
கூறு பாடலும்- இசை வல்லுநர் பாடுகின்ற வாய்ப்பாட்டும்; குழலின்
பாடலும்- புல்லாங் குழலால் இசைக்கும் பாட்டும்; வேறு வேறு நின்று-
தனித்தனியாக  நின்று;  இசைக்கும்  வீதிவாய்- ஒலிக்கும் வீதிகளிலே;
ஆறும்  ஆறும்  வந்து  எதிர்ந்த  ஆம்என- ஒரு ஆறு, மற்றொரு
ஆற்றுடன்  வந்து  எதிர்ப்பட்டதெனக்  கூறுமாறு; சாறும் வேள்வியும்
தலை மயங்கும்- விழாவுக்காகவும் திருமணத்துக்காகவும்  வரும் மக்கள்
கூட்டம் கலக்கும். 

சாறு:     விழா. வேள்வி: திருமணம்;   யாகமென்றும் கொள்ளலாம்.
பாட்டொலியும்,  குழல்  ஓசையும்  தனித்தனியே    கேட்கும் வீதிகளில்
மக்கள்   கூட்டம்   நிறைந்திருக்கும்  என்றார்.    விழாக்கள்  எனவும்
வேள்விக்கெனவும் மக்கள் கூடினர் என்பது கருத்து.               56