நாட்டுப் படலம் - 84

bookmark

வண்மை முதலியன அந்நாட்டில்
இல்லாமைக்கு ஏது

84.

வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்.
 
ஓர்    வறுமை   இன்மையால்- (அந்த நாட்டில்) வறுமை சிறிதும்
இல்லாததால்;  வண்மை  இல்லை-  கொடைக்கு  அங்கே இடமில்லை;
நேர்    செறுநர்   இன்மையால்-  நேருக்கு   நேர்   போர்புரிபவர்
இல்லாததால்;  திண்மை  இல்லை-  உடல் வலிமையை எடுத்துக்காட்ட
வாய்ப்பில்லை;   பொய்   உரை இல்லாமையால்-  பொய்ம்  மொழி
இல்லாமையால்;     உண்மை    இல்லை-   மெய்ம்மை    தனித்து
விளங்கவில்லை; பல்கேல்வி மேவலால்- பலவகைக் கேள்விச் செல்வம்
மிகுந்து   விளங்குவதால்;   வெண்மை   இல்லை-  வெள்ளறிவாகிய
அறியாமை இல்லை. 

கோசலை     நாட்டில் வறுமை சிறிதும் இல்லாதலால்  வண்மையின்
சிறப்புத்  தெரிவதில்லை;  பகைகொண்டு    போர்புரிபவர் இல்லாதலால்
உடல்    வலிமையை   உணர   வழியில்லை;   பொய்     பேசுவோர்
இல்லாமையால்  உண்மையின்  பெருமை தெரிய வழியில்லை;   கேள்வி
ஞானம்  மிகுந்திருப்பதால்  அங்கு அறியாமை சிறிதுமில்லை   என்றார்.
‘யாதும். கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை’ (165)   என்று
மேலே கூறுவர்.                                            53