நாட்டுப் படலம் - 80

bookmark

மகளிரின் சொல் நடை பல் இவற்றின் உயர்வு

80.

கோகிலம் நவில்வன, இளையவர் குதலைப்
பாகு இயல் கிளவிகள்; அவர் பயில் நடமே
கேகயம் நவில்வன; கிளர் இள வளையின்
நாகுகள் உமிழ்வன, நகை புரை தரளம்.
 
கோகிலம்    நவில்வன- குயில்கள் கற்றுப் பேசுவன; இளையவள்
குதலைப்  பாகு  இயல்  கிளவிகள்- அந்நாட்டுப்  பெண்களின் பாகு
போன்ற இனியனவாகிய மழலைச் சொற்களையாம்;  கேகயம் நவில்வன
அவர்  பயில்  நடமே-  மயில்கள் நடந்து பழகுவன  அப்பெண்களின்
நடையையாம்; கிளர் இள வளையின் நாகுகள்- விளங்கும் இளம்பெண்
சங்குகள்;  உமிழ்வன  நகை புரைதரளம்- உமிழ்வது அப்பெண்களின்
பற்களை ஒத்த முத்துக்களையேயாம்.

இள   மகளிரைப் போலக் குயில்கள் பேசும்; அவர்களது நடையைப்
போல மயில்கள் நடக்கும்; குயிலும் மயிலும்   உவமானங்கள் அவற்றை
உவமேயங்களாக்கிக்    கூறியதால்   இது    “எதிர்நிலையுவமையணி”;
எதிர்மறை  அணி என்றும் கூறுவர். பாகு இயல்  கிளவி: பாகு போன்ற
இனிய  மொழி,  கேகயம்:  மயில்.  நகை: பல்.  கிளவி: சொல். தரளம்:
முத்து                                                   49