நாட்டுப் படலம் - 78
நெய்தல் வளம்
78.
நெல் மலை அல்லன் - நிரை வரு தரளம்;
சொல் மலை அல்லன் - தொடு கடல் அமிர்தம்;
நல் மலை அல்லன் - நதி தரு நிதியம்;
பொன் மலை அல்லன் - மணி படு புளினம்.
நெல்மலை அல்லன - அந்த நாட்டில் நெற் குவியல்களில்லாத
இடங்களில்; நிரைவரு தரளம்- வரிசை வரிசையாக முத்துக்
குவியல்கள் காணப்படும்; சொல்மலை அல்லன- சொன்ன அந்த
முத்துக் குவியல்கள் இல்லாத இடங்களில்; தொடுகடல் அமிர்தம்-
தோண்டப்பட்ட கடலில் எடுத்த உப்புக் குவியல்கள் நிறைந்திருக்கும்;
நன்மலை அல்லன- அந்த உப்புக் குவியல்கள் இல்லாத இடங்களில்;
நதிதரு நிதியம்- நதிகளால் கொண்டுவந்து குவிக்கப்பட்ட பொன்
முதலிய பொற் குவியல்களில் பல இடங்களில்; மணிபடு புளினம்-
மணிகள் நிறைந்த மணல் மேடுகள் இருக்கும்.
கோசல நாட்டில் நெல்லும், முத்தும், உப்பும், பொன்னும், மணியும்
எங்கும் குவிந்து மலைகளைப் போல மண்டிக் கிடந்தன என்பது
கருத்து. புளினம்: மணல் திட்டு. 47
