நாட்டுப் படலம் - 72

bookmark

புகைகள் பல திரண்டு முகில் போல முழங்கின எனல்

72.

அகில் இடும் புகை, அட்டில் இடும் புகை,
நகல் இன் ஆலை நறும் புகை, நான்மறை
புகலும் வேல்வியில் பூம்புகையோடு அளாய்,
முகிலின் விம்மி, முயங்கின எங்கணும்.
 
அகில்   இடும்புகை   - அகில் கட்டைகளை இடுவதாலுண்டாகும்
புகையும்;  அட்டில்  இடும்  புகை- சமையல் அறைகளில் உண்டாகும்
புகையும்;  நகலின்  ஆலை  நறும்புகை- கரும்பாலைகளில் தோன்றும்
புகையும்; நான்மறை  புகலும்  வேள்வியில் பூம்புகை யோடு- நான்கு
மறைகளைப்   புகன்று      (அந்தணர்கள்  புரியும்)  வேள்வித்  தீயில்
தோன்றும்  அழகிய  புகையோடு;  அளாய்- கலந்து; முகிலின் விம்மி-
மேகங்களைப்   போல   மிகுந்து;   எங்கணும்  முயங்கின-  எங்கும்
பரந்திருந்தன.                                              41