நாட்டுப் படலம் - 71

bookmark

71.

நெறி கடந்து பறந்தன, நீத்தமே;
குறி அழிந்தன, குங்குமத் தோள்களே;
சிறிய, மங்கையர் தேயும் மருங்குலே;
வெறியவும், அவர் மென் மலர்க் கூந்தலே.
 
நெறி  கடந்து பரந்தன நீக்கமே   -  செல்லும் வழிகடந்து பரந்து
செல்வது  (அந்த நாட்டில்) வெள்ளமேயாம்;  குறி அழிந்தன குங்குமத்
தோள்களே-   அடையாளம்   அழிந்தவை   அந்த  நாட்டு  மகளின்
குங்குமம்   அணிந்த   தோள்களேயாம்;  சிறிய  மங்கையர்  தேயும்
மருங்குலே-     அங்குச்     சிறியவை     பெண்களின்    மெல்லிய
இடைகளேயாம்; வெறியவும்  அவர்  மென்மலர்க்  கூந்தலே- மணம்
உடையவை அந்த நாட்டுப் பெண்களின் மலர்சூடிய கூந்தலேயாம்.

நெறி     கடத்தல்: வழி தவறி நடத்தல். வெள்ளம் தான் நெறிகடந்து
செல்லுமே   யல்லாது   அந்நாட்டு  மக்கள்  வழித்  தவறான  வழியில்
செல்லமாட்டார்கள்.     செய்து  குறியழிந்தவை  குங்குமத்  தோள்களே
தவிர,  தமக்குரிய   குறியிலிருந்து மக்கள் மாறுபடமாட்டாகள். சிறியவை
தேயும்  மருங்குலே    அல்லாது  வேறு  சிறிய செயல்கள் அந்நாட்டில்
நிகழா. வெறியவும்   கூந்தலே அல்லது வெறி கொண்டு அலையும் நிலை
அங்கில்லை.  குறி:     தானியக்  குவியல்-  முதலியவற்றிற்குச் செய்யும்
அடையாளம்.  இது    சிலேடை  பற்றி வந்த ஒழிப்பணி. வெறி: மணம்
வெறுமை  அல்லது  குடி    வெறி என்பதும் பொருளாம். 38-ம் பாடல்
தொடங்கி  இப்பாட்டு    முடிய அந்த நாட்டு மக்கள் நல்லன கொண்டு,
அல்லன நீக்கி வாழ்ந்த வாழ்வு பேசப்பட்டது.                   40