நாட்டுப் படலம் - 70
நாட்டவர் நல் ஒழுக்கம் (70-71)
70.
கூற்றம் இல்லை, ஓர் குற்றம் இல்லமையால்;
சீற்றம் இல்லை, தம் சிந்தனையின் செம்மையால்;
ஆற்றல் நல் அறம் அல்லது இல்லாமையால்,
ஏற்றம் அல்லது, இழித்தகவு இல்லையே.
ஓர் குற்றம் இல்லாமையால்- கோசல நாட்டில் எவரிடமும் ஒரு
குற்றமும் இல்லாமையால்; கூற்றம் இல்லை- கூற்றுவனது கொடுமை
அந்நாட்டில் இல்லை; தம் சிந்தையின் செம்மையால்- அந்நாட்டு
மக்களின் மனச் செம்மையால்; சீற்றம் இல்லை- சினம் அந்நாட்டில்
இல்லை; நல் அறம் அல்லது ஆற்றல் இல்லாமையால்- நல்ல அறச்
செயல் செய்வதை தவிர வேறு எச்செயலும் இல்லையாதலால்; ஏற்றம்
அல்லது இழிதகவு இல்லை- மேன்மையைத் தவிர எவ்வகையான
இழிவான கீழ்மை அந்நாட்டில் இல்லை.
கூற்றம் இல்லை யென்பதால் கோசல நாட்டில் சாவே இல்லை
என்பது பொருளாகாது. இயற்கை மரணமின்றி இடையறவுபடுகின்ற
அற்பாயுட் சாவு இல்லை என்பதே கருத்து. குற்றமே காக்க பொருளாக;
குற்றமே அற்றம் தரூஉம் பகை என்ற குறள் (434) இங்கு
நினைவுகூரத் தக்கது.
ஓர்- குறுக்கல் விகாரம். 39
