நாட்டுப் படலம் - 69
சுரப்பன இவை எனல்
கொள்வன, தவிவன
69.
கலம் சுரக்கும், நிதியம்; கணக்கு இலா,
நிலம் சுரக்கும், நிறை வளம்; நல் மணி
பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரிய தம்
குலம் சுரக்கும், ஒழுக்கம்-குடிக்கு எலாம்.
குடிக்கு எலாம்- கோசல நாட்டு மக்களுக்கெல்லாம்; நிதியம் கலம்
சுரக்கும்- செல்வத்தைக் கப்பல்கள் கொடுக்கும்; நிலம் கணக்கு இலா
நிறை வளம் சுரக்கும்- நன்செயும் புன்செயும் ஆகிய நிலங்கள்
அளவற்ற நிறை வளத்தைக் கொடுக்கும்; பிலம் நல் மணி சுரக்கும்-
சுரங்கங்கள் நல்ல இரத்தினங்களைக் கொடுக்கும்; பெறுதற்கு அரிய
தம் குலம் ஒழுக்கம் சுரக்கும்- பெறுவதற்கு அரியதாகிய குலம்
ஒழுக்கத்தைக் கொடுக்கும்.
கப்பல்கள் வளம் கொடுத்ததைக் கொண்டு கோசல நாட்டுக் கடல்
வாணிபத்தை உணரலாம்; ஏற்றுமதி இறக்குமதி உண்டென்பதால்
உள்நாட்டு வணிகம் சொல்லாமலே பெறப்பட்டது. எல்லாச்
செழிப்புக்கும் அடிப்படை வளம் வேளாண்மையே; அதனால்
கணக்கிலா வளம் சுரக்கும் நிலம் என்றார். நிறை வளம்- வினைத்
தொகை என வெற்று இலக்கணக் குறிப்பாக மட்டும் கொள்ளாமல்,
வினைத் தொகை முக்காலத்துக்கும் ஆகும் என்பதை உணர்க.
எனவே, எக்காலத்திலும் கோசலத்தின் நிலவளம் நிறைவளம் என
உணர்த்துகிறார், கவிஞர். நீர் வழியாலும் நில வழியாலும் மட்டுமன்றிக்
குடைந்துள்ள சுரங்க வழியாலும் மணிச் செல்வம் வாய்க்கப் பெற்றது
கோசலம். இவ்வாறு பல வகையாலும் செல்வச் செழிப்பு மிக்க நாடு,
கோசலம். ஆனால், இவ் வளங்களெல்லாம் வாழ்க்கைக்குத் துணை
என்ற அளவே மதிப்புடையன; உயிர் வாழ்வு உயர் வாழ்வாய்
விழுப்பம் பெறுவது ஒழுக்கத்தால்தான். ஒழுக்கம் விழுப்பம் தரும்.
கோசல நாட்டுக் குலம் என்றாலே ஒழுக்கத்தின் மறுபெயர் என்று
உணர வைக்கிறார் கம்பர்.
சுரக்கும் என்ற சொல் நுட்பம் காண்க. இடையறாது தருவதே
சுரத்தல். சொற்பொருட் பின்வரு நிலையணி. 38
