நாட்டுப் படலம் - 64

bookmark

64.

வள்ளி கொள்பவர் கொள்வன, மா மணி;
துள்ளி கொள்வன, துங்கிய மாங்கனி;
புள்ளி கெள்வன, பொன் விரி புன்னைகள்;
பள்ளி கொள்வன, பங்கயத்து அன்னமே.
 
வள்ளி   கொள்பவர்- வள்ளிக் கிழங்கை அகழ்ந்து  எடுப்பவர்கள்;
கொள்வன  மாமணி-   பெறுவது  உயர்ந்த  மணிகளாகும்;  தூங்கிய
மாங்கனி-  கிளைகளில் தொங்கும் மாம்பழங்கள்; து(ள்)ளி கொள்வன-
தேன்  துளிகளைக்  கொண்டிருக்கும்; பொன்விரி புன்னைகள்- பொன்
நிற  மகரந்தங்களைப் பரப்பும் புன்னை மலர்கள்;  புள்ளி கொள்வன-
புள்ளிகளைப்   பெற்றிருக்கும்;   அன்னம்-     அன்னப்  பறவைகள்;
பங்கயத்து- தாமரை மலர்களிலே; பள்ளி கொள்வன- தூங்கியிருக்கும்.

வள்ளிக்    கிழங்குபெற நிலந் தோண்டுபவர்க்குப் பெருமதிப்புடைய
மணிகள் கிடைக்கின்றன.    சிறந்த மாங்கனி: தேனெனச் சொட்டும் சாறு
கொண்டவை.

....துள்ளி      என்ற சொல்லுக்கு ஆமை என்ற பொருளும்  உண்டு.
அவ்வாறு    கொண்டால்     ஆமைகள்   உண்ணுவதற்கு   மாங்கனி
கிடைக்குமெனப் பொருள் உரைக்க.

வள்ளி, புன்னை, பங்கயம் - ஆகு பெயர்கள்.                 33