நாட்டுப் படலம் - 63
திணைமயக்கம்(63-66)
63.
கன்றுடைப் பிடி நீக்கிக் களிற்றினம்
வன் தொடர்ப் படுக்கும், வன வாரி சூழ்
குன்றுடைக் குல மள்ளர் குழூஉக் குரல்,
இன் துணை களி அன்னம் இரிக்குமே.
கன்றுடைப் பிடி நீக்கி- கன்றுடைய பெண் யானைகளை
நீக்கிவிட்டு; களிற்றினம் வன் தொடர்ப் படுக்கும்-ஆண் யானைகளை
வலிய சங்கிலிகளால் கட்டுகின்ற; வன வாரி சூழ்- காட்டிலே
யானைகளை அகப்படுத்தும் இடங்களைச் சூழ்ந்த; குன்றுடைக் குல
மள்ளர்- மலையை வாழும் இடமாகக் கொண்ட நல்ல வீரர்களின்;
குழூஉக் குரல்- கூட்டம் எழுப்பும் ஆரவாரம்; இன் துணைக் களி
அன்னம்- இனிய துணையாகிய பெண் அன்னங்களுடன்
மகிழ்ந்திருக்கும் ஆண் அன்னங்களை; இரிக்கும்- (அச்சத்தால் நிலை
கெட்டு) ஓடச் செய்யும்.
பிடிகளையும் கன்றுகளையும் விடுத்துக் களிறுகளை மள்ளர்கள்
சங்கிலியால் பிணிக்கும்போது எழும் ஆரவார ஓசையால்
களித்திருக்கும் அன்னம் அச்சத்தால் நிலை கெட்டு ஓடும் என்பது
கருத்து. குறிஞ்சியும் (களிறுகள்) மருதமும் (அன்னம்) மயங்கிய
திணை மயக்கம். தொடர்: சங்கிலி. வாரி: யாயைப் பிடிக்க
வெட்டப்படும் குழி. 32
