நாட்டுப் படலம் - 59

bookmark

இடைச்சியர் தயிர்கடைதல்

59.

தோயும் வெண் தயிர் மத்து ஒலி துள்ளவும்,
ஆய வெள் வளை வாய்விட்டு அரற்றவும்,
தேயும் நுண் இடை சென்று வணங்கவும்,
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார்.
 
தோயும்   வெண் தயிர்  - தோய்ந்துள்ள வெண்மையான தயிரைக்
(கடைகின்ற);  மத்து  ஒலி  துள்ளவும்-  மத்தின்  ஓசை  விட்டுவிட்டு
ஒலிக்கவும்;   ஆய   வெள்வளை-   (தம்  கைகளில்  அணிந்துள்ள)
நுட்பமான வேலைப்பாடுடைய   வெண்ணிறச் சங்கு வளையல்கள்; வாய்
விட்டு  அரற்றவும்-  வாய்திறந்து  கத்துவதுபோல ஒலிக்கவும்; தேயும்
நுண் இடை- மெலிந்த சிறிய இடை; சென்று வணங்கவும்- முன்புறமாக
வளையவும்;   ஆய   மங்கையர்-   இடைக்குல   மகளிர்;  அங்கை
வருந்துவர்- அழகிய கைகள் வருந்தும்படி கடைவார்கள்.

வெண்டயிர் - கடைதலுக்கும்

செந்தயிர் உண்டலுக்கும் உரியன.  

துள்ளுதல்:     விட்டுவிட்டு ஒலித்தல்.  ஆய்  வளை:   நுட்பமான
வேலைப்பாடு  கொண்ட  வளையல்கள்:  ‘ஓய்தல்  ஆய்தல்  நிகழ்த்தல்
சாஅய்   ஆவயின   நான்கும்   உள்ளதன்    நுணுக்கம்’    என்பது
தொல்காப்பியம். (தொல். சொல். உரி. 32)

தன்மை நவிற்சியணி                                     28