நாட்டுப் படலம் - 58

bookmark

குருவி , கூட்டில் மாணிக்கத்தைக்
கொண்டுபோய் வைத்தல்

58.

சூட்டுடைத் துணை தூ நிற வாரணம்
தாள்-துணைக் குடைய, தலை சால் மணி
மேட்டு இமைப்பன; ‘மின்மினி ஆம்’ எனக்
கூட்டின் உய்க்கும, குரீஇயின் குழாம்அரோ.
 
சூட்டு     உடைத்  துணை-   உச்சிக்  கொண்டை  உடையதும்
துணையானதுமான; தூநிற வாரணம்-  தூய நிறத்தையுடைய சேவல்கள்;
தாள்  துணைக்குடைய- தம் கால்களால்  (குப்பைகளைக்) குடைவதால்;
தகை சால் மணி- தகுதி மிக்க  மாணிக்கங்கள்; மேட்டு இமைப்பன -
(அந்தக்  குப்பை)  மேடுகளில்  ஒளிரும்; குரீஇயின் குழாம்-  குருவிக்
கூட்டம்;  ‘மின்மினி  ஆம்’  என-  (அந்த  மணிகளை)  மின்மினிப்
பூச்சிகள்   என்று  நினைத்து;  கூட்டின்  உய்க்கும்-  தம்  கூடுகளில்
கொண்டு போய் வைக்கும்.

கோழிகள்      குப்பையைக்   கிளறும்போது  அக் குப்பைமேட்டில்
ஒளிர்கின்ற  மணிகளை  மின்மினிப்  பூச்சி  எனத்    தவறாக எண்ணி,
அவற்றை  ஒளி  தருவதற்காகக்  குருவிகள்   தம்  கூட்டில்  கொண்டு
சேர்க்கின்றனவாம்.  மயக்கத்தால் நிகழ்வதைக்   கற்பித்துச் சொல்வதால்
இது மயக்க அணியாம்.

இதே     கற்பனைக் காட்சியைக்    கம்பரே  பின்னரும் தருகிறார்:
“எரியும்   மின்மினி   மணி   விளக்கின்  இன்துணைக்  குரீஇயினம்
பெடையொடு துயில்வ” (4234)

‘உடைய’ என்ற சொல் அகரம் குறைந்து ‘உடை’ என நின்றது.    27