நாட்டுப் படலம் - 57

bookmark

கழுநீர்பாய நாற்று வளர்தல்

57.

முட்டு இல் அட்டில், முழங்குகிற வாக்கிய
நெட்டுலைக் கழுநீர் நெடு நீத்தம்தான்,
பட்ட மென் கமுகு ஓங்கு படப்பை போய்,
நட்ட செந் நெலின் நாறு வளர்க்குமே.
 
முடு   இல் அட்டில்- (வேண்டும் பொருள்களில்) குறைவு இல்லாத
சமையல்   அறையில்;  முழங்குற வாகிய- ஒலித்தல் பெருகும்படி கீழே
வடிக்கப்பட்ட;  நெட்டுலைக்  கழுநீர்-  பெரிய உலையில் வைப்பதற்கு
முன் (அரிசி)  கழவிய நீரின்; நெடு நீத்தம்தான்- மிக்க வெள்ளமானது;
பட்டம்  மென்  கமுகு-  நீரோடைக் கரையில் உள்ள பாக்கு மரங்கள்;
ஓங்கு  படப்பை  போய்-  உயர்ந்து  வளர்ந்துள்ள  சோலை  வழயே
சென்று; நட்ட செந்நெலின் நாறு வளர்க்கும்- வயலில் நடப்பட்டுள்ள
செந்நெல் நாற்றுகளை வளர்க்கும்.

சமையலுக்கு   வேண்டிய எல்லாப் பொருள்களும் நிறைந்திருத்தலின்
‘முட்டு  இல் அட்டில்’ என்றார். அரிசி  கழுவிக் கொட்டிய நீர், கமுகுத்
தோட்டம்  வழியே  பய்ந்து  வயலில்    நடப்பட்ட  நெல் நாற்றுகளை
வளர்க்கும் என்பதால், சமைக்கும் உணவின்    மிகுதியையும் உண்போர்
மிகுதியையும் உணர்த்தினார்.

பட்டம்: நீரோடை. கமுகு: பாக்கு மரம்.
   முழங்கு(தல்) - முதனிலைத் தொழிற்பெயர்.                   26