நாட்டுப் படலம் - 48
எருமைப் போர்
48.
எருமை நாகு ஈன்ற செங் கண்
ஏற்றையோடு ஏற்றை, ‘சீற்றத்து
உரும் இவை’ என்னத் தாக்கி,
ஊழுற நெருக்கி, ஒன்றாய்
விரி இருல் இரண்டு
கூறாய் வெகுண்டன; அதனை நோக்கி,
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப,
மஞ்சுகிற ஆர்க்கின்றாரும்;
எருமை நாகு ஈன்ற- பென் எருமைகள் பெற்ற; செங்கண்
ஏற்றையோடு ஏற்றை- சிவந்த கண்களை உடைய கடாவோடு மற்றொரு
கடா; ‘சீற்றத்து உரும் இவை’ என்னத் தாக்கி- ‘கோபம் கொண்ட
இடிகள் இவை’ என்று சொல்லும்படியாக மோதி; ஊழுற நெருக்கி-
முறையாக நெருங்கி; ஒன்றாய் வீரி இருள்- எங்கணும் ஒரே
பொருளாய் விரிந்திருக்கின்ற இருட்பிழம்பு; இரண்டு கூறாய்- இரண்டு
பகுதிகளாகப் பிரிந்து நின்று; வெகுண்டன- ஒன்றோடு ஒன்று கோபம்
கொண்டு பொருதன; அதனை நோக்கி- அந்தப் போரைக் கண்டு;
குஞ்சி அரி இனம் ஆர்ப்ப- தலை முடியில் அணிந்த மலர்களில்
இருந்த வண்டுகளின் கூட்டம் (கலைந்து) ஆரவாரம் செய்யும்படியாக;
மஞ்சு உற ஆர்க்கின்றாரும்- தமது குரல் மேகமண்டலம் வரை
செல்லும்படி ஆரவாரம் செய்பவர்களும்....
எங்கும் பரவியுள்ள ஒரே பிழம்பு இரண்டு கூறாகப் பிரிந்து தம்முள்
மோதுவது போல எருமைக் கடாக்கள் காணப்படுகின்றன. ஒரே நிறம்,
ஒரே தரம்; உருவம் மட்டுமே இரண்டு. அவை மோதிப் பொருவதைப்
பார்த்து வீரர்கள் மகிழ்ந்து ஆர்ப்பரிக்கின்றனர். எருமையில் பெண்
நாகு என வழங்கும். ‘எருமையும் மரையும் பெற்றமும் நாகே’ (தொல்
பொருள். மரபு 63). எருமை நாகு; இருபெயரொட்டுப் பண்புத் தொகை.
ஈற்றை என்பதில் ஐகாரம் சாரியை. 17
