நாட்டுப் படலம் - 40

bookmark

கடல்மீனும் கள்ளுண்டு களித்தல்

40.

ஆலைவாய்க் கரும்பின் தேனும்,
   அரி தலைப் பாளைத் தேனும், 
சோலை வீழ்க் கனியின் தேனும்,
   தொடை இழி இறாலின் தேனும்,
மாலைவாய் உகுத்த தேனும், -
   வரம்பு இகந்து ஓடி, வங்க
வேலைவாய் மடுப்ப - உண்டு,
   மீன் எலாம் களிக்கும் மாதோ.
 
ஆலைவாய்க்     கரும்பின்   தேனும்- கரும்பாலைகளிலிருந்தும்
பெருகும்   தேன்  போன்ற   கருப்பஞ்சாரும்;  அரிதலைப்  பாளைத்
தேனும்-கள்  இறக்குவோர்   அரிந்த பாளையிலிருந்து வடியும் கள்ளும்
சோலைவீழ்க்  கனியின்  தேனும்-  சோலைகளில் பழுத்த   பழங்களின்
சாறும்; தொடை இழி இறாலின் தேனும்-தொடுக்கப்பட்ட இடத்தினின்று
வழிகின்ற தேனடைத் தேனும் - மாலை வாய் உகுத்த தேனும் - மலர்
மாலைகளிலிருந்து  வடியும்  தேனும்;  (ஆக இவையெல்லாம்); வரம்பு
இகந்து   ஓடி-எல்லை   மீறிப்   பெருகி  ஓடி;  வங்க  வேலைவாய்
மடுப்ப-கப்பல்கள் இயங்கும்  கடலிலே  போய்ச்  சேர;   மீன் எலாம்
உண்டு    களிக்கும்-   (கடலிலே   வந்து   கலக்கின்ற   அவற்றை)
மீன்களெல்லாம் பருகிக் களிக்கும்.