நாட்டுப் படலம் - 36

bookmark

வண்டு முதலியன தங்கும் இடங்கள்

36.

தாமரைப் படுவ, வண்டும்
   தகை வரும் திருவும்; தண் தார்க்
காமுகர்ப் படுவ, மாதர்
   கண்களும் காமன் அன்பும்;
மா முகில் படுவ, வாரிப்
   பவளமும் வயங்கு முத்தும்;
நாமுதல் படுவ, மெய்யும்
   நாம நூல் பொருளும் மன்னோ.
 
வண்டும்  தகை  வரும் திருவும்- வண்டுகளும் அழகு வளர்கின்ற
திருமகளும்;   தாமரைப் படுவ- தாமரை மலர்களில் தகியிருப்பனவாம்;
மாதர் கண்களும் காமன் அன்பும்- விலைமாதர் கண்களும் மன்மதன்
அம்புகளும்;  தாண்தார்க்  காமுகப் படுவ- குளிர்ந்த மாலை அணிந்த
காமுகர்களை தாக்குவனவாம்;  வாரிப்  பவளமும்  வயங்கு முத்தும்-
கடலில்  விளையும்     பவளமும்  ஒளியால் விளங்குகின்ற முத்துகளும்;
மாமுகில் படுவ- கார்மேகங்களில் தங்குவனவாம்; மெய்யும் நாம நூல்
பொருளும்- உண்மையும் புகழ் வாய்ந்த நூல்கள் கூறும்    பொருளும்:
நா முதல்  படுவ-  கோசல நாட்டு மக்களின் நாவிலே தங்குவனவாம்.

தாக்கப்பெறுவோர்     காமுகராக கூறப்படுதலின்    ‘மாதர்’ இங்கே
விலைமாதர்  எனப்  பொருள்பட்டது.  கடல்  நீரைப்  பருகிய   மேகம்
உடன்   பவளங்களையும்   முத்தையும்     கொண்டன;  மன்னுயிர்க்கு
இன்றியமையா  நீரைப்  பொழிந்துவிட்டுப்   பவளத்தையும்  முத்தையும்
தன்னிடத்து      வைத்துக்கொண்டது.   கோசல      நாட்டு   மக்கள்
வாய்மையுடையவர்,    நண்ணூற்  பொருளே  நவில்வர்  என்ற கருத்து
மிகவும்    பேணத்தக்கது.     ‘படுவ’   -   சொற்பொருட்   பின்வரு
நிலையணியாக வந்தது.                                      5