நாட்டுப் படலம் - 35

bookmark

மருதமாகிற மன்னனின் திருவோலக்கம்

35.  

தண்டலை மயில்கள் ஆட,
   தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க,
   குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம்
   பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, -
   மருதம் வீற்றிருக்கும் மாதோ.
 
தண்டலை    மயில்கள் ஆட- சோலைகளிலே மயில்கள் ஆடவும்;
தாமரை  விளக்கம்  தாங்க-  தாமரை  மலர்கள்  விளக்குகளை ஏந்தி
நிற்கவும்;  கொண்டல்கள் முழவின் ஏங்க- மேகங்கள் மத்தளம் போல
ஒலிக்கவும்;  குவளை  கண்  விழித்து நோக்க- குவளைக் கொடிகளில்
மலர்கள்  கண்போல்  விழித்துப்  பார்க்கவும்;  தெண்  திரை  எழினி
காட்ட-  நீர்நிலைகளின்    அலைகள்  திரைச்சீலை போலக் காட்டவும்;
தேம்  பிழி  மகர  யாழின்-  தேனை  ஒத்த மகர யாழ் இசை போல;
வண்டுகள் இனிது பாட- வண்டுகள் இனிமையாகப் பாடவும்; (இவ்வாறு
இசையும் கூத்தும்  பொலிகின்ற  அரங்கிலே)-  மருதம் வீற்றிருக்கும்-
மருத நாயகி வீறு தோன்ற அமர்ந்திருப்பது போன்றிருந்தது.

உரையாசிரியர்கள்     பிறரெல்லாம் மருத வேந்தன் என்றனர்; அது
பொருத்தமே.  எனினும்,  இயற்கையை    அன்னை  எனப்  போற்றும்
மரபினை        ஓம்பி          இங்கே     மருதம்     நாயகியாக
உரைக்கப்பட்டது.”.......எதிரே    கொலு  வீற்றிருக்கும்  அரசி  மருதாயி
நாச்சி  இக்காட்சியைக் கண்டு  களிக்கிறாள்” என்பர் பேரா. அ. ச. ஞா.
(கம்பன்  கலை  -  பக்.4).    “இந்த  இடத்தில்  கவிஞன்  கையாளும்
உவமை,   இயல்புக்கும்     மரபுக்கும்  ஒத்துக்  கற்போர்க்கு  இன்பம்
பயப்பதாகும்.   கொண்டல்    முழங்கின்   மயில்   ஆடும்;  குவளை
மலர்ந்திருக்கும்   மாலைப்    போதில்  தாமரை  குவிந்துவிடும்,  இந்த
இயல்பு  பிறழாமல்     முறைப்படுத்தும்  கவிஞன் திறன் துய்ப்பார்க்குச்
சுவை ஊட்டுமன்றோ?” (பக்.5)

தண்டலை;  சோலை, குளிர்ந்த இடம் (தண் + தலை) என்ற பொருள்
உடையதாய்ப்     பண்புத்        தொகைப்     புறத்துப்     பிறந்த
அன்மொழித்தொகை.   குவளைக்   கண்  என்பது  எதுகை  நோக்கிக்
குவளை  கண்  என நின்றதாகக்  கொண்டு பொருள் கூறுதலும் உண்டு.
யாழ்: யாழிசைக்கு ஆகுபெயர்.                                 4