நாட்டுப் படலம் - 33

bookmark

மருத வளம்

33.

வரம்பு எலாம் முத்தம்; தத்தும்
   மடை எலாம் பணிலம்; மா நீர்க்
குரம்பு எலாம் செம் பொன்; மேதிக்
   குழி எலாம் கழுநீர்க் கொள்ளை;
பரம்பு எலாம் பவளம்; சாலிப்
   பரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க்
கரம்பு எலாம் செந் தேன்; சந்தக்
   கா எலாம் களி வண்டு ஈட்டம்.
 
வரம்பு   எலாம்  முத்தம்-(வயல்) வரப்புகளிலெல்லம் முத்துக்கள்;
தத்தும்  மடை எலாம் பணிலம்- தண்ணீர் பாயும் மடைகளிலெல்லாம்
சங்குகள்; மாநீர்க்   குரம்பு   எலாம்  செம்பொன்-  மிகுந்த  நீர்ப்
பெருக்குடைய  செய்கரை  களிலெல்லாம்  செம்பொன்;  மேதிக்  குழி
எலாம் கழுநீர்க் கொள்ளை- எருமைகள் படிகின்ற பள்ளங்களிலெ்லாம்
செங்கழுநீர்  மலர்கள்; பரம்பு எலாம் பவளம்- பரம் படித்த இடங்களி
லெல்லாம் பவளங்கள்;  சாலிப்  பரப்பு  எலாம் அன்னம்- நெற்பயிர்
நிறைந்த   பரப்புகளிலெல்லாம்    அன்னங்கள்;  பாங்கர்-  அவற்றின்
பக்கங்களில்  இருக்கின்ற;   கரம்பு   எலாம்   செந்தேன்-  சாகுபடி
செய்யப்படாத  நிலங்களி  லெல்லாம்  செந்தேன்;  சந்தக்  கா எலாம்
களிவண்டு ஈட்டம்- அழகிய சோலைகளிலெல் லாம் மதுவுண்டு மகிழும்
வண்டுகளின் கூட்டம்;(ஆக இவ்வாறு வளங்கள் அங்கே பெருகியுள்ளன).

பலவகை    வளங்களும் கோசல நாட்டில் கொழித்திருந்தன என்பது
கருத்து.   பயிர்த்தொழிலுக்கு   ஏற்பப்   பண்படுத்தாத      கரம்பிலும்
செந்தேன்    பெருக்கு   இருந்தது   என்பதொன்றே     கோசலத்தின்
வளத்தைப்   புலப்படுத்தப்  போதுமானது.  குரம்பு:    செய்கரையாகிய
அணை.  சந்தம்:  அழகு   முதம் முதலான எழுவாய்களுக்கு   உள்ளன
என்பது பயனிலையாக உரைக்கப்பட்டது - எச்சப் பயனிலை.         2