நவ பிரம்மாக்கள் தோற்றம்
நவ பிரம்மாக்கள் தோற்றம் நான்கு திசைகளிலும் தன்னுடைய முகத்தை கொண்டு இருக்கும் பிரம்மதேவன் இந்த உலகத்தையும், இந்த உலகத்தில் இருக்கக்கூடிய உயிரினங்களையும் படைக்க வேண்டும் என்று எண்ணி கொண்டிருந்த பொழுது அவருடைய அங்கத்திலிருந்து தர்மத்தை அனுபவிக்கும் படியான இந்திரியங்களுடன் கூடி பிறந்த தேவ, மனிதர்கள், திரிய தாவரங்கள் யாவும் சதுர்வித சங்கங்களும் அபிவிருத்தி அடையாமல் இருந்தன. இந்த உயிரினங்களின் தோற்றமும், வளர்ச்சியும், அபிவிருத்தி யாவும் இல்லாமல் இருப்பதை கண்டதும் மிகுந்த வருத்தம் கொண்ட பிரம்மதேவர் மீண்டும் பிரஜைகளை நன்முறையில் சிருஷ்டிக்க வேண்டும் என்று எண்ணினார். அவருடைய அந்த எண்ண விளைவின் காரணமாக பிருகு, புலஸ்தியர், கிரது, அங்கிரசு, மரீசி, அத்திரி, தஷர், வசிஷ்டர், நாரதர் என்ற ஒன்பது புத்திரர்களை தனது மனதினாலே உருவாக்கினார். இவர்கள் பிரம்மதேவருக்கு இணையாகவும் இருந்ததால் இவர்களை நவ பிரம்மாக்கள் என்று அழைக்கப்பட்டனர். நான்முகனின் கோபமும், அர்த்தநாரி தோற்றமும் இந்த நவ பிரம்மாக்களுக்கு முன்பாகவே பிதாமகனான பிரம்மதேவன் சனக சனந்தனாதிகளையும் உருவாக்கினார். ஆனால், அவர்கள் மிகுந்த வைராக்கிய குணத்தோடு மோட்ச நிலையை நோக்கி சென்றதன் காரணமாக பிரஜா சிருஷ்டியில் ஈடுபடாமல் காமம், ரோதம் மதாச்சாரியங்கள் யாவும் இல்லாமல் இருந்தார்கள். இவர்கள் பிரஜா உற்பத்தியில் எந்தவிதமான நாட்டமும் கொள்ளாமல் மோட்ச நிலையை மட்டுமே உன்னதமாக கொண்டிருந்த காரணத்தினால் பிதாமகனுக்கு பொறுக்க இயலாத அளவு கோபமும், குரோதமும் ஏற்பட்டது. அவர் கொண்ட அந்த கோபத்தின் விளைவாக மூன்று உலகங்களையும் அழிக்கும் பொருட்டு கோபாக்கினி ஜுவாலைகளுடன் காண்பதற்கே மிகவும் பயங்கரமான புருவங்களை நெறித்து கொண்டு குரோதத்தினால் ஜவலித்து கொண்டு இருக்கின்ற பிரம்மா உடைய நெற்றியின் நடு பாகமான லாடத்திலிருந்து உச்சி பகலில் தோன்றும் சூரியனை போன்ற கண்கள் கூசும் அளவில், ஏன் விழிகளே விழித்தன்மையை இழக்கும் அளவிற்கான பிரகாசமான ஒளி உடைய அர்த்தநாரி ரூபம் கொண்ட ருத்ரமூர்த்தி தோன்றினார். நான்முகன் கொண்ட கோபத்திலிருந்து தோன்றிய அர்த்தநாரி என்ற ருத்ரமூர்த்தி அதி உன்னதமான சரீரம் கொண்டவராகவும், மிகுந்த கோபமும், ஆத்திரமும் கொண்டிருக்க கூடியவராகவும் இருந்தார். அவர் தோற்றத்தில் பாதி உடலானது ஆண் பாகமாகவும், மீதி பாதியானது பெண் பாகமும் இருந்தது.ஸ்திரீ புருஷ ரூபம் உருவாகுதல் உக்கிரம் கொண்டு இருக்கக்கூடிய அர்த்தநாரி உருவத்தை கண்ட பிரம்மதேவன் அந்த உருவத்தை நோக்கி இரண்டு விதமாகவே இருக்கின்ற, நீயே உன்னை தனித்தனியாக பிரித்து கொள்வாயாக என்று கூறினார். பிரம்மதேவனின் ஆணைக்கு கட்டுப்பட்ட அர்த்தநாரி உருவமானது தன்னகத்தில் ஒருங்கிணைந்து இருந்த பெண், ஆண் உருவத்தை அதாவது ஸ்திரீ புருஷ உருவத்தை தனித்தனியாக பிரிக்க தொடங்கியது. தனித்தனியாக பிரித்த புருஷ (ஆண்) உருவத்தை கொண்டு பதினொரு விதமான புருஷ உருவத்தையும், ஸ்திரீ (பெண்) ரூபத்தையும் பலவிதமாக பிரித்தது. அவை அழகு மற்றும் சௌமியம் நிறைந்த தோற்றமாகவும், காண்பதற்கு மிகவும் பயங்கரமாகவும், காண்போரை ஈர்க்கும் வண்ணமான காந்தங்களாகவும், அறுவறுதக்க வகையில் கோரங்களாகவும், கறுப்பான தோற்றம் கொண்டவர்களாகவும், வெளுமையான நிறம் கொண்டதாகவும் என பலவகைகளாக பிரிந்து இருந்தன.பிறகு நான்முகனான பிரம்மதேவன் பிரஜைகளை காக்கும் பொருட்டு தன்னுடைய சக்திகள் நிறைந்து இருக்கக்கூடிய புத்திரன் ஒருவனை உருவாக்கினார். அவருடைய அம்சத்திலிருந்து உருவான புத்திரன் சுவாயம்புவ மனு என்று அழைக்கப்பட்டார். இவர் பிரஜைகளை பரிபாலனம் செய்து கொண்டிருந்தார்.பிரம்மன் தன்னுடைய அம்சத்திலிருந்து மனு என்ற புருஷனாக ஆனது போல தன்னுடைய துணைவியின் அம்சத்திலிருந்து ஸ்திரியை உருவாக்கினார். தன்னுடைய மனைவியின் அம்சத்திலிருந்து உருவாக்கிய ஸ்திரியானவள் சத்ரூபை என்ற நாமதேயம் கொண்டு, இந்த உலகத்தில் தனக்கு துணையாக வாழ தனக்கு ஏற்ற புருஷன் வேண்டும் என்று தவம் செய்து தூய்மையாக இருந்தாள். அவர் மேற்கொண்ட தவத்தின் பலனாக அவளுக்கு உண்டான கணவனும் அமையப்பெற்றாள். அதாவது பிரம்மதேவனின் அம்சமான மநுவானவன் சத்ருவை அடைந்து அவர்களை திருமணம் செய்துகொண்டு அவர்கள் இருவரும் இல்லறத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் இருவருக்கும் பிரியவிரதன், உத்தானபாதன் என இரு ஆண் குழந்தைகளும், பிரசூதி, ஆகுதி என்ற இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தனர். ஆண், பெண் குழந்தைகளான இருவர்களும் வளர்ந்து அழகு நிறைந்த ஆடவர்களாகவும், பதுமைகளாகவும், நல்ல குணங்கள் யாவும் அமைய பெற்றவர்களாகவும் இருந்தவர்களில் பிரசூதி என்பவளை தக்ஷனுக்கும், ஆகுதியை ருசி என்பவனுக்கும் திருமணம் செய்து கொடுத்தார்கள். ருசிக்கும், ஆகுதிக்கும் யக்கியன் என்ற ஆண் குழந்தையும், தக்ஷிணை என்ற பெண் குழந்தையும் பிறந்தார்கள். பிறகு அந்த யக்கியன் தன்னுடைய வாழ்க்கை துணைவியாக தக்ஷிணை ஏற்றுக்கொண்டு அவளிடத்திலேயே பனிரெண்டு பிள்ளைகளை பெற்றான். அவர்கள் முதல் மநுவந்தரத்தில் யாமர் என்ற தேவர்களாயினர். இவர்களை போன்று தக்ஷன் என்பவன் பிரசூதியின் மூலம் இருபத்து நான்கு பெண் குழந்தைகளை பெற்றான். அவர்களிலே சிரத்தை, லட்சுமி, திருதி, துஷ்டி, புஷ்டி, மேதை, கிரியை, புத்தி, லஜ்ஜை, வபு, சாந்தி, சித்தி, கீர்த்தி என்ற பதின்மூன்று கன்னிகைகளை தர்மனுக்கு விவாகம் செய்து கொடுத்தார்.அந்த தர்மன் தன்பத்தினிகளில் ஒருத்தியான சிரத்தையிடத்தில் காமனையும் லட்சுமியிடத்திலே தர்ப்பனையும் துஷ்டியிடம் சந்தோஷனையும் புஷ்டியிடம் லோபனையும் மேதையிடத்தில் சுருதனையும் கிரியையிடத்தில் தண்டன், நயன், விநயன் என்னும் மூவரையும் புத்தியிடம் போதனையும் லஜ்ஜையிடத்தில் விநயனையும் வபுவினிடத்தில் விவசாயனையும் சாந்தியினிடத்திலே ஷேமனையும் சித்தியிடம் சுகனையும் கீர்த்தியினிடத்திலே யசனையும் பெற்றான். அவர்களில் சிரத்தையின் புத்திரனான காமன் என்பவன் ரதி என்பவளை விவாகம் செய்தார். அவர்களுக்கு ஹர்ஷன் என்ற பிள்ளையைப் பெற்று எடுத்தார்கள்.பிறகு தக்ஷன் தன் பெண்களான கியாதி (மகிமை) சதி (உண்மை) சமபூதி (தகுதி) ஸ்மிருதி (நினைவு) பிரீதி (அன்பு) க்ஷமை (பொறுமை) சன்னதி (எளிமை) அநுசூயை (தயை) ஊர்ச்சை (சக்தி) சுவாகை (சமர்ப்பணம்) சுவதை (துதி) என்ற பெயரையுடைய பதினோரு பெண்களையும் முறையே பிருகு மகரிஷிக்கும், ருத்திரனுக்கும், மரீசிக்கும், அங்கிரசுக்கும், புலஸ்தியனுக்கும், புலகனுக்கும், கிரதுவுக்கும், அத்திரிக்கும், வசிஷ்டனுக்கும், அக்னிக்கும், பிதுர்த்தேவதைகளுக்கும் திருமணம் செய்து கொடுத்தான்.இவர்களை போன்றே அதர்மன் என்பவன் ஹிம்சை என்ற பெண்ணை சேர்ந்து அநிருதன் (பொய்யை) என்கிற புதல்வனையும், நிகிருதி (வேசித்தன்மை) என்ற புத்திரியையும் பெற்றான். அவ்விருவரும் சேர்ந்து பயன், நரகன் என்ற இரு பிள்ளைகளை பெற்றனர். அப்பிள்ளைகள் தங்களுடன் பிறந்த மாயை, வேதனா என்பவர்களையே மணந்தார்கள். அவர்களில் மாயை என்னும் மங்கை சர்வப் பிராணிகளையும் அபகரித்துக் கொள்ளும் மிருத்யுவை பெற்று எடுத்தாள். வேதனை என்பவள் ரவுரவனைச் சேர்ந்து துக்கன் என்பவனை பெற்று எடுத்தாள். மிருத்யுவுக்கு வியாதி, சூரை, சோகன், திருஷ்னை, குரோதன் என்ற பிள்ளைகள் பிறந்தனர். அவர்கள் அனைவரும் துக்கமயமான இயல்புடையவர்களாய், அதர்ம சொரூபிகளாய் ஊத்தரேதசுக்களாய், மனைவி மக்களற்றவர்களாய், ஜகத்தின் அழிவுக்கு ஏதுக்களாக இருந்தார்கள்.இவ்விதமாகவே பராசரர் எடுத்துரைத்து கொண்டிருந்தபொழுது மைத்ரேயருக்கு முனிவர்கள் தோன்றியிருந்த பொழுது ஏன் இவர்களையும் (தீய இயல்புகளும், குணங்களும், நன்மைக்கு எதிராக செயல்படக்கூடியவைகளும் ஏன் படைக்கப்பட்டு இருந்தன) தோற்றுவித்தார்கள் என்று கேள்வியும் எழ அதை தனது குருநாதரிடம் வினாவினார்.குருநாதரும் தனது மாணவன் எழுப்பிய வினாவிற்கு விடை அளிக்கும் பொருட்டு முனிவரே! அதர்மாதி சொரூபங்கள் யாவும் ஸ்ரீவிஷ்ணுவினுடைய ரவுத்திரமான சரீரங்கள் ஆகும். அவை நித்திய பிரளயத்துக்கு ஏதுக்களாக (தன்மைகளாக) இருக்கின்றன. தக்ஷன், மரீசி, அத்திரி, பிருகு முதலிய பிரஜாபதிகள் நித்திய சிருஷ்டிக்கு காரணமாவர். மநுவும், மநுவின் புத்திரர்களும், சன்மார்க்கராயும் வீரியமே முக்கியமாக எண்ணம் கொண்டவர்களாக நித்திய சூரஸ்திதிக்கு காரணமாக அமைந்தார்கள்.இவ்விதமாக பராசரர் எடுத்துரைத்து கொண்டிருந்தபொழுது மைத்ரேய முனிவருக்கு எப்பொழுதும் போல அவருடைய மனதில் ஐயங்கள் தோன்ற தொடங்கின. அதாவது இந்த உலகத்தில் தோன்றுகின்ற அனைத்து உயிரினங்களும் அநித்தியங்களாக (நிலையில்லாமல்) இருக்க நித்திய ஸ்திதியும் (காப்பு), நித்திய பிரளயமும் (அவரவர்களின் வினைகளுக்கு ஏற்ப உண்டாகும் பிறப்பும், இறப்பும்) தோன்றுவதற்கு என்ன விதமான காரணம் இருக்கும்? என்று அவருடைய மனமானது எண்ண தொடங்கியது. அதையும் தன்னுடைய குருநாதரான பராசர முனிவரிடம் வினாவினார். பராசர முனிவரும் தன்னுடைய மாணவனின் மனதில் தோன்றியிருக்கக்கூடிய ஐயங்களுக்கு பதிலளிக்கும் பொருட்டு புன்னகை பூத்தவண்ணமாக மைத்ரேய முனிவரே! நான்கு திசைகளும் தன்னுடைய முகத்தை கொண்டிருக்கக்கூடிய, தடைகளுக்கு அப்பாற்பட்டவனாகவும், பிரஜைகளின் உற்பத்திக்கு காரணமாகவும் இருக்கக்கூடிய ஸ்ரீ மதுசூதனன் பெயருடைய பகவானே தன்னுடைய சக்தியினால் சிறப்பான ரூபங்களை கொண்டு இருக்கக்கூடிய மநுவினை படைத்து அந்த ரூபத்தினை கொண்டு உருவாக்குதல், பாதுகாத்தல் முதலிய அனைத்தும் செய்து கொண்டே இருக்கின்றான். இதுவரை அவர் உருவாக்குவதையும், பாதுகாப்பதையும் நாம் அறிந்துகொண்டோம். இனி பிரளய பேதங்களையும் யாம் உமக்கு எடுத்துரைக்கின்றோம் கேட்பாயாக.
