நரேந்திரர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவுதல்
1889-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ஆம் நாள் இராமகிருஷ்ணர் மண்ணுலகை நீத்து அமரத்துவம் எய்தினார். சுமார் ஆறு வருட காலம் நரேந்திரர், தன்னுடைய குருவுடன் செலவிட்டார். இந்த ஆறு வருடங்களில்தான் – உலகம் முழுவதையும் கலக்கத் தோன்றிய அற்புதப் பெரிய எண்ணங்கள் இவர் மனதில் உதித்து நிலைப் பெற்றன.
குருதேவர் மறைவுக்குப் பிறகு அவரைச் சூழ்ந்திருந்த சீடர்களில் பெரும் பகுதியினர் சிதறிச் சென்றுவிட்டனர். குருதேவரின் புனித அஸ்தியை வைத்து வழிபாடு நடத்த ஒரு ஆலயம் போன்ற அமைப்பினை உருவாக்க நரேந்திரர் விரும்பினார். இதற்கென கங்கை நதிக்கரையில் ஒரு சிறிய இடத்தை வாங்கவும் திட்டமிட்டார். ஆனால் அவருடைய முயற்சிகளுக்குத் துணை நிற்க சீடர்களைத் தேட வேண்டியிருந்தது. நரேந்திரர் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். தற்காலிகமாக தம்முடைய முயற்சியை நிறுத்திவிட்டு பகவான் குருதேவரின் ஆன்மீகச் சிந்தனைகளை உலகமெல்லாம் பரவச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் மேலை நாடுகளுக்குப் பயணமானார்.
தம்முடைய அந்த இலட்சிய நோக்கத்தில் வெற்றி கொடி நாட்டி விட்டுத் திரும்பிய நரேந்திரர் குருநாதருக்காக ஒரு வழிபாட்டுத் தலம் அமைக்கும் முயற்சியினைத் தொடங்கினார்.
பாரா நகரில் இருந்த ஒரு பாழடைந்த வீடு அவரின் முயற்சியின் தொடக்க இடமாக அமைந்தது. குருநாதரின் சீடர்களில் பழைய ஆர்வமும், உற்சாகமும் கொண்டிருந்த சில இளைஞர்களைத் தேடிப் பிடித்து ஒன்று சேர்த்தார்.
அப்போது நரேந்திரர் மேற்கொண்ட அந்த முயற்சியின் தொடக்கம் தான் இன்று பிரம்மாண்டமான ஆலமரமாக பாரதத்திலும் உலக நாடுகளிலும் செழித்துப் பரவியிருக்கும் ஸ்ரீ இராமகிருஷ்ண மடமாகும்.
பகவான் இராமகிருஷ்ணர் தமது வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் தம்மைப் பின்பற்றிய சீடர்களுக்கு காவி உடைகளை வழங்கி துறவிகளுக்கான தீட்சையை அளித்திருந்தார். நரேந்திரர் தம்மைப் பின்பற்றிய சீடர்களுக்கு சாஸ்த்திரப்படி விரஜா ஹோமம் புரிந்து முறைப்படி சந்நியாச தீட்சை பெறச் செய்து துறவு வாழ்க்கையில் புதிய தகுதியை அளித்தார்.
நரேந்திரர் முழுமையான சந்தியாச வாழ்க்கையை மேற்கொண்ட பிறகு தமக்கு பெற்றோர் வைத்த பெயரைக் களைந்து விட்டு சந்நியாச தர்மப்படி ஒரு பெயரைச் சூட்டிக் கொள்ள வேண்டியது அவசியம் என உணர்ந்தார்.
நரேந்திரர் விவிதி சானந்தரஞ் என்ற பெயரை ஏற்றுக் கொள்வது என்று முதலில் எண்ணினார். தம்மை எந்த வகையிலும் வெளிக் காண்பித்துக் கொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில் தம்மைப் பல்வேற பெயர்களால் அழைத்துக் கொண்டார்.
மித்ரா என்ற இல்லறச் சீடன் செய்த பேருதவி
குருதேவர் விதேக முக்தி அடைந்த பிறகு சீடர்களுக்குத் தலைமை ஏற்று வழி நடத்தும் பொறுப்பை நரேந்திரர் ஏற்றுக் கொண்டார். குருதேவர் கட்டளைப்படி சீடர்கள் துறவிகளாகி சமுதாயப் பணி புரிவதற்கு புகலிடமும் பொருளும் வேண்டும். இதற்காக நரேந்திரர் பலரிடம் சென்று உதவி கோரினார்.
பொருள் கொடுப்பதற்கு பதிலாக அறிவுரைகளை சிலர் அளித்தார்கள். ஒரு சிலரோ வசை பாடினார்கள். சீடர்கள், தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் சென்று விடுவார்களோ என்று அச்சம் நரேந்திரரிடம் தலை தூக்கியது. குருதேவரே துணையென்று நம்பி முயற்ச்சிகளைத் தொடர்ந்தார்.
காசிப்பூருக்கு, குருதேவரின் இல்லறச் சீடர்களில் மிகவும் முக்கியமானவரான சுரேந்திரநாத் மித்ரா வந்தார். அவர் குருதேவரின் உடல்நிலை சரியில்லாத போது பண உதவி செய்து வந்தவர்.
குருதேவர் முக்தி அடைந்த பின்பு ஒரு நாள் மித்ராவின் கனவில் குருதேவர் தோன்றினார்." காசீப்பூரில் என் சீடக் குழந்தைகள் அல்லல் படுகின்றார்கள். அவர்களுக்கு உதவி செய்யுங்கள்..." என்று அன்புக் கட்டளையிட்டார். குருதேவரின் கட்டளையை ஏற்ற மித்ரா காசீப்பூருக்கு விரைந்து வந்தார்.
நரேந்திரரைக் கண்டார். தாம் கண்ட கனவையும் குருதேவரின் கட்டளையையும் பற்றிக் கூறி நெஞ்சம் நெகிழ்ந்தார்.
"நான் பாக்கியம் செய்தவனானேன். குருதேவரின் சீடர்கள் இனி எங்கும் அலைய வேண்டாம். வீடு ஒன்று பார்த்து அதில் எல்லோரும் சேர்ந்து இருங்கள். உங்களுடைய தேவைகளை நான் கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் கவலை அற்று குருதேவர் இட்ட பணியைத் தொடர்ந்து செய்து வாருங்கள்" என்றார் மித்ரா.
சுரேந்திரநாத் மித்ராவின் மொழிகள், நரேந்திரரின் காதுகளில் தேனாகப் பாய்ந்தன. குருதேவரின் அருளை நினைத்து மெய் விதிர்த்தார். குருதேவரின் சந்நியாச் சீடர்கள் இனி ஒருங்கிணைந்து பணிபுரிய இறையருள் கூட்டியத்தை எண்ணி நெகிழ்ந்தார். மித்ராவுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தார்.
